ஆடிப்பாவைபோல

ஆடிப்பாவைபோல - தமிழவன்; பக்.408 ; ரூ.350 ; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-642 002.
ஆடிப்பாவைபோல

ஆடிப்பாவைபோல - தமிழவன்; பக்.408 ; ரூ.350 ; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-642 002.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான மக்களின் மனங்களில் மின்னிக் கொண்டிருந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் மண்ணில் உதிர்ந்து கிடக்கும் காலம் இது. அப்போதைய சமூகப் பிரச்னைகள் இன்னும் தீர்வு காணப்படாமல் இப்போதும் தொடர்கின்றன. இப்போது பேசப்படும் மாநில உரிமைப் பிரச்னை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, இப்போதும் நடைபெறும் சாதி வெறிக் கொலைகள்... என தீர்க்கப்படாத பிரச்னைகள் உக்கிரமடைந்திருக்கின்றன. 
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், அவற்றை நடத்திய அரசியல் கட்சியினரின் செயல்கள், சுயநல அரசியலுக்கான வேர்கள் அப்போதே ஆழப் பதிந்து பரவியிருந்த நிலை, சுயநல அரசியலின் சதிவேலைகள் என ஒருபுறம் இந்நாவல், அன்றைய தமிழக அரசியல் நிகழ்வுகளின் பின்புலத்தில் படைக்கப்பட்டிருக்கிறது.
இளையதலைமுறையினர் அந்தக் காலத்தில் பழகியமுறை, காதல், திருமணம் செய்து கொள்ளும் போது ஏற்படும் பிரச்னைகள், காதலை கண்மூடித்தனமாக எதிர்க்கும் மூத்ததலைமுறையைச் சேர்ந்த சிலரின் மனப்போக்குகள் என அன்றைய வாழ்வின் இன்னொருமுகத்தை அடிப்படையாகக் கொண்டும் இந்நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. 
இவ்விரண்டு போக்குகளின் ஊடாக மாணவர்கள், தீவிர கம்யூனிஸ்டுகள், இந்தி எதிர்ப்புப் போராட்ட நிகழ்வுகள், தியாகங்கள், சாதிவெறியால் உயிரோடு தீ வைத்துக் கொளுத்துதல் என ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக வாழ்க்கையை மிக இயல்பாகச் சித்திரிக்கிறது இந்நாவல். 
இன்றிருக்கும் சமூகப் பிரச்னைகள் எவற்றின் தொடர்ச்சியாகத் தோன்றி வளர்ந்தவை என்று தெரிந்து கொள்ள உதவும் சிறந்த நாவல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com