ஹைட்ரோ கார்பன் - இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத்திட்டம்

ஹைட்ரோ கார்பன் - இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத்திட்டம் - கா.அய்யநாதன்; பக்.288; ரூ.225; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; )044- 4200 9603.
ஹைட்ரோ கார்பன் - இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத்திட்டம்

ஹைட்ரோ கார்பன் - இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத்திட்டம் - கா.அய்யநாதன்; பக்.288; ரூ.225; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; )044- 4200 9603.
உலக இயக்கத்திற்குத் தேவையான எரிசக்திக்கு ஆதாரமாக இருப்பது ஹைட்ரோ கார்பன். அதில் இருந்து எடுக்கப்படும் கச்சா பொருளைச் சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் போன்றவற்றை நாம் பெறுகிறோம். 
அப்படிப்பட்ட ஹைட்ரோ கார்பனை நமது நாட்டின் தேவைக்கு ஏற்ற அளவில் உற்பத்தி செய்ய முடியாததால், அதற்குத் தேவையான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த இறக்குமதியைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பனைக் கண்டறிந்து எடுக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. 
இப்படி நல்ல நோக்கத்திற்காக மத்திய அரசு மேற்கொண்டதாகக் கூறப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடம் இருந்து - குறிப்பாக அந்தந்த ஊர் மக்களிடம் இருந்து - கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது ஏன்? ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டால் அப்பகுதியில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஹைட்ரோ கார்பன் எடுப்பு முயற்சிகளின் விளைவுகள் என்னென்ன? இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியமென்ன? இப்படிப்பட்ட முக்கியமான பல கேள்விகளுக்கு இந்நூல் மிக விரிவாக விடையளிக்கிறது.
எண்ணெய் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் துரப்பண பணிகள் தொடங்கி, ஷேல் கேஸ் பிரச்னை, புவி வெப்பமடைதல், மாற்றுத் தொழில்நுட்பத்தின் அவசியம், விதையாலும் விலையாலும் வஞ்சிக்கப்படும் விவசாயிகளின் துயரம், தாராளமயமாக்கலின் தாக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் ஹைட்ரோ கார்பன் பிரச்னையை நூலாசிரியர் அலசி ஆராய்ந்துள்ளார்.
குறிப்பாக, ஹைட்ரோ கார்பன் துரப்பண பணியினால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு நூலாசிரியர் பயணம் மேற்கொண்டு நேரடியாகப் பார்த்துத் திரட்டிய தகவல்கள், தரவுகள் இந்நூலை ஆதாரபூர்வமான ஆவணமாக்கியிருக்கின்றன.
ரூ.2 கோடி முதலீடு செய்தால் ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் காற்றாலையை எவ்வித ஆபத்தும் இன்றி, எந்த நாட்டின் தொழில்நுட்ப உதவியும் இன்றி நிறுவி விட முடியுமே? எதற்காக ரூ.10 கோடி செலவு செய்து 10 ஆண்டுகள் கட்டுமானம் செய்து, ஆபத்தான அணுமின்நிலையங்களை நிறுவ வேண்டும் என்று கேட்கும் நூலாசிரியரின் கேள்வி நியாயமானதே. 
இத்தொகுப்பில் உள்ள "கடற்பரப்பில் ஹைட்ரோ கார்பன்: எடுப்பும் எதிர்வினைகளும்' என்ற கட்டுரையும், "விதையாலும் வஞ்சம் விலையாலும் வஞ்சம்' என்ற கட்டுரையும் குறிப்பிடத்தக்கவை.
ஹைட்ரோ கார்பன் குறித்து இதுவரை அறியாதவர்களின் கண்களை இந்நூல் திறக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com