சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸே

சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸே; தமிழில்: திருலோக சீதாராம்; பக்.168; ரூ. 100; முல்லை பதிப்பகம், 323/ 10, கதிரவன் காலனி, அண்ணா நகர்- மேற்கு, சென்னை- 40.
சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸே

சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸே; தமிழில்: திருலோக சீதாராம்; பக்.168; ரூ. 100; முல்லை பதிப்பகம், 323/ 10, கதிரவன் காலனி, அண்ணா நகர்- மேற்கு, சென்னை- 40.
 இந்திய தத்துவ ஞான மரபை அடித்தளமாகக் கொண்டு, வாழ்வின் நான்கு நிலைகளைப் பரிசீலிக்கும் வகையில், அதன் கடைசியில் வாழ்வின் இறுதி உண்மையை உணர்த்தும் விதமாக, ஜெர்மானிய எழுத்தாளர் ஹெர்மன் ஹேஸ்úஸ எழுதிய உலகப்புகழ் பெற்ற புதினம் இந்நூல்.
 இந்தப் புதினத்தின் நாயகன் சித்தார்த்தன் பிறப்பால் அந்தணன். தனது கல்வி அறிவால் உந்தப்பட்ட அவன் ஞானம் தேடி அலைகிறான். அவனது வழியில், பெற்றோரைத் துறத்தல், தோழன் கோவிந்தனின் அணுக்கம், சமணத் துறவு, புத்தர் சந்திப்பு, தாசி கமலாவுடன் இன்ப நுகர்வு, துறவு மனப்பான்மையுடன் செல்வமீட்டும் வாழ்வு, மகன் மீதான பாச மயக்கம், தோணிக்காரனின் வழிகாட்டல் ஆகியவை எதிர்ப்படுகின்றன. இறுதியில் அவனும் காலமென்னும் பெருநதியின் அறத்தை உணர்ந்து ஞானியாகிறான்.
 இன்று, இந்தக் கணத்தில் ஓடுவதுதான் ஆறு. அதற்கு இறந்த காலமோ, எதிர்காலமோ இல்லை என்றறியும் நொடிப்பொழுதில் சித்தார்த்தன் மனத்தளைகளிலிருந்து விடுதலை பெறுகிறான். பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்யாசம் ஆகிய 4 நிலைகளே பாரதப் பண்பாட்டின் அடிநாதம். அவற்றை தனது விருப்பப்படி மாறுபட்ட படிநிலையில் அணுகும் சித்தார்த்தன், வழிகள் மாறினாலும், திசைகள் திகைக்கச் செய்தாலும், இலக்கை நோக்கிய பயணத்தில் உறுதியாக இருந்ததால், தானும் புத்தனாகிறான்.
 1922-இல் ஜெர்மானிய மொழியில் எழுதப்பட்ட இப்புதினம், பிறகு ஆங்கிலம் வாயிலாக, தமிழின் முன்னோடி எழுத்தாளர் திருலோக சீதாராமினால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளரின் தத்துவப் புலமையும் மொழியுணர்வும் பண்பாட்டறிவும் இணைந்து மூல நூலுக்கு நம்பிக்கையான மொழியாக்கத்தை அளித்திருக்கின்றன என்று கூறினால் அது மிகையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com