இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற, நித்யசுந்தரர் கோவில் - திருநெடுங்களம்

காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 8-வது தலமாக இருப்பது திருநெடுங்களம்.

காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 8-வது தலமாக இருப்பது திருநெடுங்களம்.

     இறைவன் பெயர்: நித்யசுந்தரர், நெடுங்களநாதர்
     இறைவி பெயர்: ஒப்பிலா நாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. இடர் களையும் திருப்பதிகம் என்று போற்றப்படும் இப்பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால், நமக்கு வாழ்வில் ஏற்படும் இடர்கள் யாவும் நீங்கி நலமுடன் வாழலாம்.

எப்படிப் போவது

திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி என்ற ஊர் வரை சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. சென்றால் நெடுங்களம் அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. துவாக்குடியில் இருந்து ஆட்டோ மூலமும் இத்தலத்துக்குச் சென்று வரலாம்.

ஆலய முகவரி
அருள்மிகு நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
திருநெடுங்களம்,
திருநெடுங்களம் அஞ்சல்,
திருச்சி வட்டம்,
திருச்சி மாவட்டம் – 620 015.

இக் கோயில், தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு

கோயில் இரண்டு கோபுரங்களுடனும், இரண்டு பிராகாரங்களுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. 5 நிலை கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சந்நிதியும் உள்ளது. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள். நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.

வடக்கு வெளிப்பிராகாரத்தில் அகஸ்தியர் சந்நிதியும், இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்த கிணறும் உள்ளது. இதில் எக்காலத்திலும் நீர் வற்றவே வற்றாது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், உள்பிராகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சந்நிதிகள் உள்ளன. தென்பிராகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சந்நிதியும், மேற்கு பிராகாரத்தில் தெய்வானையுடன் முருகருக்கு தனி சந்நிதியும் உள்ளன. தெற்குப் பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சந்நிதியும் உள்ளது.

உள்ளே கருவறையில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் சற்றுத் தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கிக் கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காகத் தன் இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்த நிலையில் உள்ளார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும், சிவன்-சக்தி இருவருமே இருப்பதாக ஐதீகம். கோயில் கோயில் கருவறையில் பார்வதி அரூபமாக உள்ளதாக ஐதீகம். இதனால், மூலஸ்தானத்தின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும்தான் இப்படி உள்ளது. சிவனை நோக்கி அன்னை பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன், அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

நெடுங்களம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

ஆடி மாதம் 7 முதல் 12-ம் தேதி வரை காலையில், சுயம்பு மூர்த்தியாக உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தலத்தின் தீர்த்தங்களாக அகத்திய தீர்த்தம் மற்றும் சுந்தர தீர்த்தம் உள்ளன. சுந்தர தீர்த்தக் கரையில் உள்ள கருப்பண்ண சுவாமிக்குப் பானக நைவேத்யம் செய்து வழங்கினால் நோய் தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இத்தலத்தில், மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடு கொண்டது. இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி விந்தையான அமைப்புடையவராக விளங்குகிறார். யோக தட்சிணாமூர்த்தியாக சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார். அகத்தியர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் ‘இடர் களையும் திருப்பதிகம்’ என்று போற்றப்படுகிறது. இப்பதிகத்தில் உள்ள 10 பாடல்களிலும் ‘இடர்களையாய்’ என்ற குறிப்பைக் காணலாம். இடர்கள் நீங்கி இன்பம் பெற இப்பதிகத்தைப் படித்து வந்தால் நலம் பெறுவது உறுதி என்று சம்பந்தர் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார். இத்தல இறைவனையும் அம்பாளையும் வழிபட்டு இப்பதிகத்தை நாள் தோறும் ஓதி வாழ்வில் வளம் பெறுவோம்.

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்று உதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

மலைபுரிந்த மன்னவன் தன் மகளை ஓர்ர் பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

குன்றினுச்சி மேல்விளங்கும் கொடிமதிற் சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
தஞ்சமில்லாச் சாக்கியரும் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.

பாடியவர்கள் - பாலச்சந்திரன் மற்றும் மயிலாடுதுறை சிவகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com