கோபம் போக்கும் தலம் சற்குணநாதேசுவரர் கோவில், திருஇடும்பாவனம்

பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 108-வது தலமாக இருப்பது திருஇடும்பாவனம். கோபம் நீக்கும் தலமாக இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.

பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 108-வது தலமாக இருப்பது திருஇடும்பாவனம். கோபம் நீக்கும் தலமாக இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.

     இறைவன் பெயர்: சற்குணநாதேசுவரர்
     இறைவி பெயர்: மங்களநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது?

திருத்துறைப்பூண்டியில் இருந்து தென்மேற்கே 16 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டை போன்ற இடங்களில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன. திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் நகரப் பேருந்து இத்தலத்துக்குச் செல்கிறது. முத்துப்பேட்டை - வேதாரண்யம் பேருந்து சாலையில் பயணித்தும் இத்தலத்தை அடையலாம். திருக்கடிக்குளம் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு சற்குணநாதேசுவரர் திருக்கோயில்,
இடும்பாவனம்,
இடும்பாவனம் அஞ்சல்,
திருவாரூர் மாவட்டம் – 614 703.

இக்கோயில் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு : சசிசேகர சிவாச்சாரியார் - கைபேசி: 9843628109

இவ்வுலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும் கோபம் என்ற குணம் இருக்கும். அப்படி கோபப்படாத மனிதரை காண்பது அபூர்வம். கட்டுப்படுத்த முடியாத கோபம் ஒரு மனிதனிடம் இருந்தால் அது அம்மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும். அவரை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும். சமூக நலனில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கோபமடைந்தால் முதலில் மனமும் சிந்தனைகளும் பாதிக்கப்படும். இரண்டாவது, உடலில் பாதிப்புகள் உண்டாகும். இறுதியில் செயலிலும், குழப்பமான மற்றங்கள் உண்டாகும். கோபத்தில் எவன் தன்னை இழக்கிறானோ, அவன் நரகத்தில் இடம்பிடித்துவிடுகிறான் என்று ஒரு பழமையான நீதிநூல் கூறுகிறது. வள்ளுவரும் தனது குறளில் பல இடங்களில் கோபத்தைப் பற்றி குறிப்பிட்டு அதனால் விளையும் தீங்குகளைப் பற்றியும் கூறியுள்ளார்.

சாந்த குணத்தை அளிப்பதில் தன்னிரகற்ற தலமாக விளங்குவது திருஇடும்பாவனம். பிரம்மதேவனுக்கு அடிக்கடி கோபம் வந்தது. பிரம்மா, சிவபெருமானிடம் வந்து அடிக்கடி கோபப்படும் தனது குணத்தை மாற்றி அருளுமாறு வேண்டினார். இறைவனும் அசரீரி வாக்காக, இடும்பாவனம் சென்று தன்னையும், அம்பிகையையும் பூஜித்து பலன் அடையும்படி கட்டளையிட்டார். அதன்படி இடும்பாவனம் வந்த பிரம்மா, வில்வ மரத்தடியில் நீண்ட காலம் தவம் இருந்தார். பிரம்மாவின் தவவலிமை கண்ட சிவபெருமான், அம்பிகை, விநாயகர், முருகனுடன் பிரம்மாவுக்குத் தரிசனம் தந்து, சாத்வீக குணத்தை பிரம்மாவுக்கு தந்தருளிய சிறப்புடைய தலம் இடும்பாவனம்.

பிரம்மன் சாத்வீக குணங்கள் பெறவேண்டி தவம் புரிந்து, சிவபெருமானை இங்கு வழிபட்டு அருள் பெற்றதால், இத்தல இறைவன் சற்குணநாதேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். கோபமுற்று சிலபல செயல்களை செய்துவிட்டு அல்லது பேசிவிட்டு அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர்கள் இத்தலம் வந்து சற்குணநாதேஸ்வரரை வழிபட்டால், கோப குணம் நீங்கி சாத்வீக குணத்தைப் பெற்று நலமுடன் வாழலாம்.

இயற்கை வளம் மிக்க சோழ வளநாட்டில், தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்று இடும்பாவனமாகும். மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த இடும்பன் பூசித்துப் பேறு பெற்ற தலமாதலின், இத்தலம் இடும்பாவனம் எனப் பெயர் பெற்றது. பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான பீமன், தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் வந்தபோது இடும்பாவனத்துக்கு வந்தார். அருகில் உள்ள இடும்பனின் தலைநகரமாகிய குன்றளூரில் இடும்பியைக் கண்டு மணம் புரிந்தார். பின்னர் பீமன், இடும்பியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, சிவனாரை வணங்கி மகிழ்ந்தார். மிகப் பழமை வாய்ந்த இத்தலத்தில் பிரம்மதேவர், ராமபிரான், எமதர்மன் போன்றோர் வழிபட்டு அருள் பெற்றுள்ளனர்.


 
அகத்திய மாமுனிவர் இறைவனின் மணக்கோலம் கண்ட தலங்களுள் ஒன்றாக இடும்பாவனம் புகழப்படுகிறது. இறைவனுக்குப் பின்புறம் கருவறைச் சுவற்றில் இந்த மணவாளக்கோலம் உள்ளதைக் காணலாம். இத்தலம் பிதுர்முக்தித் தலங்களுள் ஒன்றாகும். ஆகவே பிதுர்க்கர்மாக்களைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. சிவராத்திரியன்று உபவாசம் இருந்து இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சற்குணநாதரை வணங்கினால், முன்னோரது பாவங்கள் நீங்கி அவர்கள் மோட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை

கோவில் அமைப்பு

நந்தி, பலிபீடம், கொடிமரம் ஆகியவை ஆலயத்தின் வெளியே காணப்படுகின்றன. கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர மாடத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் முருகர் மற்றும் விநாயகர் உள்ளனர். நாற்புறமும் அகலமான மதில்கள் சூழ ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே சென்றவுடன் இருபுறமும் முன் வரிசையில் இடும்பன், அகத்தியர், சூரியன், சந்திரன், நால்வர், பைரவ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஒரே பெரிய பிராகாரத்துடன் ஆலயம் விளங்குகிறது. முதலில் ராஜகோபுரத்துக்கு நேராக பிரம்மாண்டமான சபா மண்டபம், மூடுதளமாக உள்ள மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என இறைவன் சந்நிதி அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான மூலவரின் கருவறை, உயர்ந்த அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் கருணையே வடிவாகக் காட்சி தருகின்றார் ஸ்ரீ சற்குணேஸ்வரர். சத்வ குணம் (நல்லியல்புகள்) கொண்ட இவரை வழிபட்டால் மன அமைதியும், அற்புத வரங்களையும் பெறலாம்.

வாழ்வில் ஏற்படக்கூடிய இடர்களை நீக்க வல்லவர் இந்த சற்குணேஸ்வரர். “இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம்” என்று திருஞான சம்பந்தர் தனது பதிகத்தின் 10-வது பாடலில் இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றார். லிங்க மூர்த்திக்கு பின்புறம் சுவரில் ஆதி தம்பதியான பார்வதியும் ஈசனும் எழில் வடிவோடு திருமணக் கோலத்தில் தரிசனம் தருகின்றனர். சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் தியாகராஜர் சந்நிதி, முக மண்டபத்துடன் விளங்குகின்றது.

மங்கள நாயகி அம்பாள் தெற்கு நோக்கி தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் சர்வ மங்களங்களையும் அருளும் வல்லமை மிக்கவளாக அருள்பாலிக்கின்றாள். அழகிய தூண்களும், சிலைகளும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. முறையான சிவாலய கோஷ்ட மூர்த்தங்களோடு, பின்புற வரிசையில் மகாகணபதி, கஜலட்சுமி, சனீஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோரின் திருவடிவங்கள் அருள் செய்கின்றன. இங்குள்ள வெண்மை நிறமுடைய சுவேத விநாயகர் மிகவும் பிரசித்தமானவர். கணபதி சந்நிதி, ஆலயத்தின் தென்புறத்திலும், வள்ளி-தெய்வானையுடன் கூடிய கந்தன் சந்நிதி வடபுறமும் அமைந்துள்ளன.

ஆலயத்தின் எதிரே உள்ள பிரம்ம தீர்த்தம், எமன் ஏற்படுத்திய எம தீர்த்தம் மற்றும் அகத்திய முனிவர் உண்டாக்கிய அகஸ்திய தீர்த்தம் ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்களாக உள்ளன. தல விருட்சமாக வில்வம் விளங்குகிறது.

சம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது இவ்வூரின் மணலெல்லாம் லிங்கமாகத் தென்பட, கரங்களால் ஊன்றி வந்து ஆலயத்தை அடைந்து திருப்பதிகம் பாடியதாகக் கூறப்படுகிறது. அப்பரும் தனது ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் இத்தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் ஒன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனம் ஆர்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்
சினம் ஆர்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

2. மலையார் தரு மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி
நிலையார் தரு நிமலன் வலி நிலவும் புகழ்ஒளி சேர்
கலையார் தரு புலவோர் அவர் காவல் மிகு குன்றில்
இலையார் தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே.

3. சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை
ஞாலம் மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்
கோலம் மிகு மலர்மென்முலை மடவார் மிகு குன்றில்
ஏலம் ங்கமழ் பொழில் சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.

4. பொழில் ஆர்தரு குலைவாழைகள் எழிலார் திகழ் போழ்தில்
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில்
குழல் ஆர்தரு மலர்மென்முலை மடவார் மிகு குன்றில்
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

5. பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடிமேல்
செந்தாமரை மலர் மல்கிய செழுநீர் வயல் கரைமேல்
கொந்து ஆர்மலர் புன்னைமகிழ் குரவம் கமழ் குன்றில்
எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே.

6. நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவாகி
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவுக்
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில்
எறி நீர்வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.

7. நீர் ஏறிய திருமேனியர் நிலவும் உலகு எல்லாம்
பாரு ஏறிய படுவெண்தலை கையில் பலி வாங்காக்
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி
ஏர் ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

8. தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒருபஃது அவை நெரித்துக்
கூர் ஆர்தரு கொலைவாளொடு குணம் நாமமும் கொடுத்த
ஏர் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

9. பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்
தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர்பல தூய்
மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

10. தடுக்கை உடன் இடுக்கித் தலைபறித்துச் சமன் நடப்பர்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும்
மடுக்கண் மலர் வயல்சேர் செந்நெல் மலிநீர் மலர்க்கரை மேல்
இடுக்கண்பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே.

11. கொடி ஆர் நெடுமாடக் குன்றளூரின் கரைக் கோல
இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன்
படியால் சொன்ன பாடல்சொலப் பறையும் வினைதானே.

திருஞானசம்பந்தரின் தேவாரம் - பாடியவர் திருமறைக்காடு சொ. சிவக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com