தோல் நோய்களைக் குணப்படுத்தும் உக்தவேதீஸ்வரர் கோவில் - திருத்துருத்தி (குத்தாலம்)

பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவஸ்தலங்கள் வரிசையில் 37-வது தலமாக இருப்பது திருத்துருத்தி. தற்போது இத்தலம் குத்தாலம் என்று அழைக்கப்படுகிறது.

பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவஸ்தலங்கள் வரிசையில் 37-வது தலமாக இருப்பது திருத்துருத்தி. தற்போது இத்தலம் குத்தாலம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகிலுள்ள குற்றாலம் என்பது வேறு. அது பாண்டிய நாட்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று.

இறைவன் : உக்தவேதீஸ்வரர், சொன்னவாரஅறிவார்
இறைவி : அரும்பன்ன வளமுலையாள், பரிமள சுகந்த நாயகி

தேவார மூவராலும் பாடப்பெற்ற சிவஸ்தலங்களில் குத்தாலமும் ஒன்று. இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் குத்தாலம் என்ற ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்துக்கு அருகாமையில் உள்ளன.

ஆலய முகவரி

அருள்மிகு உக்தவேதீஸ்வரர் திருக்கோயில்,
குத்தாலம், குத்தாலம் அஞ்சல்,
மயிலாடுதுறை வட்டம்,
நாகப்பட்டிணம் மாவட்டம் – 609 801.


இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சரும நோய் நீக்கும் தலம்

உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று திருவொற்றியூர் தலத்தில் மகிழ மரத்தடியில் சத்தியம் செய்துகொடுத்து, சங்கிலி நாச்சியாரை சுத்தரர் திருமணம் செய்துகொண்டார். சிலகாலம் சங்கிலி நாச்சியாருடன் வாழ்ந்த சுந்தரருக்கு, திருவாரூர் சென்று தியாகேசரை பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. அதனால் யாரிடமும் சொல்லாமல் திருவொற்றியூரை விட்டுப் புறப்பட்டார். செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் தன் இரண்டு கண்களிலும் பார்வை இழந்தார். கண் பார்வை இழந்த சுந்தரர், பல சிவஸ்தலங்களை தரிசித்து வரும் வழியில், திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் பெற்றார். பின்பு, கச்சிஏகம்பப் பெருமானை வழிபட்டு இடது கண் பார்வை பெற்றார்.

தனது தல யாத்திரையில் பல இடங்களுக்குச் சென்ற சுந்தரர் உடல் நலம் குன்றி, சரும நோயால் அவதிப்பட்டு குத்தாலம் என்று இன்று அழைக்கப்படும் திருத்துருத்தி தலத்தை வந்தடைந்தார். இத்தல இறைவனை வழிபட்டு வணங்கி தனது உடல் பிணிவருத்தம் ஒழிய வேண்டும் என்று வேண்டினார். இறைவன் அசரீரியாக இத்தலத்தின் வடபாகத்திலுள்ள தாமரைக் குளத்தில் மூழ்கி எழுக என்று கட்டளையிட்டார். சுந்தரரும் அவ்வாறே திருக்குளத்தை அடைந்து துருத்திருத்திப் பெருமானைத் தொழுது குளத்தில் மூழ்கி எழுந்தார். அவர் வெளியேறியபோது அவருடைய உடல் பிணி யாவும் நீங்கி, முன்னிலும் பளபளக்கும் திருமேனி எழிலுடன் திகழ்ந்தார். ஒளி பொருந்திய திருமேனியடன் இருந்த அவரை சுற்றி இருந்தோர் வியப்புடன் நோக்கினர்.

அப்போதுதான் திருத்துருத்தியையும், திருவேள்விக்குடியையும் இணைத்து,

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.

என்ற பதிகம் பாடினார். சுந்தரமூர்த்தி நாயனாரின் பிணி தீர்த்ததால், தாமரைத் தடாகத்துக்கு சுந்தர தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. தீர்த்தக்கரையில் சுந்தரருக்கு கோயில் உள்ளது. சரும நோயினால் அவதிப்படுவர்கள் இத்தலம் வந்து சுந்தர தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவன் உக்தவேதீஸ்வரரை வழிபட்டால், தங்களது தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறலாம் என்று நம்பிக்கையுடன் வருகின்றனர்.

தல வரலாறு

திருவாவடுதுறை தலத்தில் அம்பாள் பசு வடிவம் நீங்கப்பெற்று சுய உருவம் அடைந்ததும் சிவபெருமான் காட்சி அளித்தார். ஆனால் திருமணம் நடைபெறவில்லை. அம்பாளுக்கு இன்னொரு பணி காத்திருந்தது. அருகிலுள்ள குத்தாலத்தில் தவம் செய்துவந்த பரத மாமுனிவருக்கு அவர் விரும்பியபடி, இறைவன் விருப்பப்படி, வேள்விக் குண்டத்தில் அம்பாள் வேள்விக் குண்டத்தில் ஒரு பெண்ணாகப் பிறந்தாள். ஈஸ்வரனை திருமணம் செய்துகொள்ளும்பொருட்டு, தினமும் காவிரிக்குச் சென்று நதியின் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். 8-ம் நாள் இறைவன் அங்கு லிங்க வடிவில் தோன்றி லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகையின் கரம் பற்றினார். அம்பிகை நாணம் கொண்டு ‘சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் முடிக்க வேண்டும்’ என்று கூறினாள். உன் விருப்பப்படியே நம் திருமணம் நடக்கும் என்று ஈசன் கூற, அம்பிகை முனிவரின் ஆசிரமம் அடைந்தாள். இறைவன் தாமே சொல்லிய விதியின்படி திருமணம் செய்துகொள்வதாக அம்பாளுக்கு வாக்களித்து அதன்படியே நடந்துகொண்டதால் இறைவன் நாமம் சொன்னவாரறிவார் என்றாயிற்று.

இத்தலத்தின் தலவிருட்சம் உத்தால மரம் என்ற ஒரு வகை அத்தி மரம். அம்மரம் குடையாக அமைய அம்பாளைத் திருமணம் செய்துகொள்ள சுவாமி மணவாளநாதராக எழுந்தருளினார். அம்மரத்தினடியில் இன்றும் இரண்டு பாதுகைகள் இருப்பதைக் காணலாம். எனவே, இத்தலம் உத்தாலவனம் என்று பெயர்பெற்று, பின் மருவி குத்தாலம் என்றாயிற்று. தற்போது குத்தாலம் என்று அறியப்படும் இத்தலம், தேவாரப் பதிகம் பாடப்பெற்ற காலத்தில் துருத்தி என்று வழங்கப்பட்டது. துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள் படும். திருநாவுக்கரசர் தனது பதிகத்தின் 3-வது பாடலில்,

“உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மின்னோ,
கன்னியை ஒருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியின் நடுவுதன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே”

என்று குறிப்பிடுவதால், இவ்வூர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காவிரி நதியின் இடையில் ஒரு தீவாக இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

கோவில் அமைப்பு

ஆலயம், ஊருக்கு நடுவில் அமைந்துள்ளது. 5 நிலை ராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. இரண்டு பிராகாரங்கள் கொண்டது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் உள்ளன. வலதுபுறம் ஸ்தல விருட்சமான உத்தால மரமும் அதைச் சுற்றி பீடமும் உள்ளது. மூலவர் சந்நிதி மேற்குப் பார்த்து அமைந்திருக்கிறது. பக்கத்திலேயே தெற்குப் பார்த்த இறைவியின் சந்நிதி உள்ளது. இவ்விரு கோவில்களும் தனித்தனியே வலம் வரும்படி தனிப் பிராகாரங்களோடு அமைந்துள்ளன.

அம்பிகையை மணந்துகொள்ள வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர், துணைவந்த விநாயகர் என்ற பெயருடன் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழியில் வெளிப் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டிருக்கிறார். உட்பிராகாரத்தில் வலஞ்சுழி விநாயகரையும் தரிசிக்கலாம். கிழக்குப் பிராகாரத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசண்முகர் சந்நிதி உள்ளது. கலையழகுடன் இவர் காட்சி அளிக்கிறார். பிராகாரத்தின் வடகிழக்குப் புறத்தில் நவக்கிரகங்கள், சப்தரிஷீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர் மற்றும் பஞ்ச லிங்கங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

சுவாமி கருவறை விமானத்திலுள்ள சுதைச் சிற்பங்கள் யாவும் பெரியவையாகவும், கலையழகோடும் காணப்படுகின்றன. இவற்றை நிதானமாகப் பார்த்து ரசிக்க வேண்டும். அக்னி பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டு தன் பாபங்களை போக்கிக்கொண்டுள்ளார். காசிபன், ஆங்கிரசன், கௌதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர். சூரியன், பரத முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு பெறும் பேறு பெற்றிருக்கின்றனர்.

தேவாரம் - பாடியவர்கள் முத்துக்குமரன் மற்றும் கரூர் சுவாமிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com