பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம் அரசலீஸ்வரர் கோவில், திருஅரசிலி

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 31-வது தலமாக விளங்குவது திருஅரசிலி.
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம் அரசலீஸ்வரர் கோவில், திருஅரசிலி

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 31-வது தலமாக விளங்குவது திருஅரசிலி. தற்போது கோவில் இருக்குமிடம் மக்களால் ஒழிந்தியாப்பட்டு என்று வழங்கப்படுகிறது. பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் என்ற சிறப்பும், பிரதோஷ வேளை பூஜைக்கு சிறப்புபெற்ற தலமாகவும் இத்தலம் உள்ளது.

     இறைவன் பெயர்: அரசிலிநாதர்
     இறைவி பெயர்: பெரியநாயகி
     இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

1. பாண்டிச்சேரி - திண்டிவனம் (வழி - கிளியனூர்) பேருந்தில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி அருகில் இறங்கி, கிழக்கே ஒழிந்தியாப்பட்டு செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்றால் அரசிலி ஆலயத்தை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி கிளைப் பாதை பிரிகிறது.
2. திருவக்கரை தலத்தை தரிசித்து விட்டு வருவோர், பிரதான சாலைக்கு வந்து வானூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டை அடைந்து, அங்கிருந்து திண்டிவனம் செல்லும் மார்க்கத்தில் சென்று, மேற்சொல்லியவாறு ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி உள்ள இடத்தில் வலப்புறமாகப் பிரியும் கிளைப்பாதை வழியே சென்று அரசிலி ஆலயத்தை அடையலாம்.
 

மற்றொரு பாடல் பெற்ற தலமான இரும்பை மாகாளம் இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு அரசிலிநாதர் திருக்கோவில்,
ஒழிந்தியாப்பட்டு அஞ்சல்,
வானூர் வழி, வானூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் – 605 109.

இந்த ஆலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

வாமதேவர் எனும் முனிவர் தான் பெற்ற சாபத்துக்கு விமோசனம் பெறுவதற்காக, பல தலங்களுக்குச் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது, ஒரு அரச மரத்துக்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தார். உடலுக்குக் குளிர்ச்சி தரும் அரச மரத்தின் அடியில் சற்று நேரம் இருக்கும் நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே என்று நினைத்த முனிவர், இங்கு சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பினால் எப்படி இருக்கும் என மனதில் நினைத்துக்கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவன், அந்த அரச மரத்துக்கு அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். மகிழ்ந்த வாமதேவ முனிவர், அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார். சிவன் அவர் முன் காட்சி தந்து சாபத்துக்கு விமோசனம் தந்தார். மரங்களில் சிறந்த அரச மரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால், இத்தலத்துக்கு அரசிலி என்றும், இறைவனுக்கு அரசலீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. வாமதேவ முனிவருக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இந்த லிங்கம் பூமியில் புதையுண்டுபோயிற்று.
 

சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்துவந்தான். சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்குப் பிள்ளைகள் இல்லை. ஒரு நந்தவனம் அமைத்து அருகில் உள்ள மற்றொரு சிவலிங்கத்துக்கு வழிபாடுகள் செய்துவந்தான். பணியாள் ஒருவன் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்துவரும் பணியை செய்துவந்தான். ஒரு சமயம், பணியாள் நந்தவனத்துக்குச் சென்றபோது அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்குத் திரும்பிய பணியாளன், மன்னனிடம் செடியில் மலர்கள் இல்லாத விவரத்தைக் கூறினான். மன்னரும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், மன்னனும் அன்று வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான். மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்றபோது அங்கு செடியில் மலர்கள் இல்லை. அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலை கூறினான்.
 

மலர்களை அதிகாலையில் யாரோ பறித்துச் சென்றுவிடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன், அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்துக்குச் சென்று கண்காணித்தான். அப்போது நந்தவனத்துக்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக் கண்ட மன்னன், கோபத்துடன் மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிட, காவலர்கள் அதனை விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரச மரத்தின் பொந்துக்குள் சென்று மறைந்துகொண்டது. மன்னன் மரத்துக்குள் அம்பு எய்ய, மரப்பொந்தில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. மானை அம்பு தைத்திருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது அங்கு மான் இல்லை. அதற்குப் பதில், பல்லாண்டுகளுக்கு முன் மறைந்த வாமதேவர் வழிபட்ட லிங்கம் இருந்தது. அந்த லிங்க பாணத்தில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன், சிவனை வேண்டினான். மன்னனுக்கு சிவன் காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தான்தான் என்று உணர்த்தியதோடு, மன்னனுக்குப் புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான்.
 

சத்தியவிரதனின் மகன் இந்திரசேனன் என்பவனும் இத்தல இறைவனிடம் அளவில்லாத பக்தியுடன் வழிபட்டான். இந்த இந்திரசேனன் மகள், அரசிலிநாதரை வழிபட்டு இத்தலத்திலேயே வாழ்ந்து இறையடி கூடிய தலம்.

கோவில் அமைப்பு

சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் மூன்று நிலை ராஜகோபுரமும், ஒரு பிராகாரமும் கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவர் அரசிலிநாதர் சுயம்புலிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்பாள் பெரியநாயகி தனி சந்நிதியில் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். கருவளை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகர், நவக்கிரகம், சண்டேசுவரர் நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. மூலவரை நோக்கியவாறு பைரவர், சூரியன், உருவங்கள் உள்ளன. கோஷ்டமூர்த்தி தட்சிணாமூர்த்தி தனி விமானத்துடன் அழகாக உள்ளார்.
 

பொதுவாக, வலது பக்கம் திரும்பியிருக்கும் முயலகன் இங்கு இடது பக்கம் திரும்பி, கையில் நாகத்தை பிடித்தபடி இருக்கிறான். இது வித்தியாசமான அமைப்பாகும். இவருக்கு மேலே நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் சிறிய மூர்த்தியாக இருக்கிறார். ஒரே இடத்தில் சிவனது ஞான உபதேச கோலத்தை கீழேயும், மேலே தாண்டவ கோலத்தையும் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். பிரம்மா, துர்க்கை, நாகதேவதை, சண்டி ஆகிய பிற கோஷ்ட மூர்த்திகளின் சந்நிதிகளும் உள்ளன. கருவறைக்குப் பின்புறத்தில் கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக அவ்விடத்தில் மகாவிஷ்ணு மேற்கு பார்த்தபடி இருக்கிறார். கருவறையில் இறைவன் அரசிலிநாதர் 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாகக் காட்சி தருகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்தக் காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், லிங்கத்துக்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.
 

பூசம் நட்சத்திரத்துக்குரிய மரம் அரச மரம். அது இத்தலத்தின் தல விருட்சமாக இருப்பதால், இத்தலம் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்தலம் வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லா நலனையும் அடைவார்கள்.
 

வாமதேவருக்கும், சாளுக்கிய மன்னன் சத்தியவிரதனுக்கும் பிரதோஷ வேளை காலத்தில் அவர்களுக்கு சிவன் தரிசனம் அளித்ததால், இத்தலத்தில் பிரதோஷ பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

சம்பந்தர் இயற்றிய இத்தல திருப்பதிகம் 2-ம் திருமுறையில் உள்ளது.

1. பாடல் வண்டறை கொன்றை பான்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோண்மேல்
ஆடன் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

2. ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி
வேறு செய்தத னுரிவை வெண்புலால் கலக்கமெய் போர்த்த
ஊறு தேனவ னும்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே.

3. கங்கை நீர்சடை மேலே கதமிகக் கதிரிள வனமென்
கொங்கை யாளொரு பாகம் மருவிய கொல்லைவெள் ளேற்றன்
சங்கையாய்த் திரியாமே தன் அடியார்க்கு அருள் செய்து
அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே..

4. மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப்
புக்க வூரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில் தவள வெண்ணீற் அணிந்தாமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே..

5. மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவித்
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழச் சரம் அது துரந்து
வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மாமறை யோதி
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே..

6. பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்குமத் தாகப்
பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக்
கரிய நஞ்சு அது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு
அரிய ஆர் அமுது ஆக்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே..

7. இப்பாடல் சிதைந்து போயிற்று.

8. வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு
அண்ணலாய் அருள் செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே..

9. குறிய மாணுரு வாகிக் குவலய மளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத் தோனும்
செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண
அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே..

10. குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல்
பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும்
அருளை யார்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே..

11. அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி அடிகளைக் காழி
நல்ல ஞானசம்பந்தன் நற்றமிழ் பத்து இவை நாளும்
சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த
வல்ல வானுலகு எய்தி வைகலு மகிழ்ந்து இருப்பாரே.

‘‘இத் திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் நாள்தோறும் சொல்லி வழிபடவல்லவர், வானுலகு எய்தி அமரர்கள் தொழுது ஏத்த வைகலும் மகிழ்ந்து வாழ்வர்’’ என்று தனது பதிகத்தின் 11-வது பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தரின் தேவாரம் - பாடியவர் குமரகுருபரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com