திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் வடாரண்யேஸ்வரர் கோயில், திருவாலங்காடு

பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 15-வது தலமாக விளங்கும் திருவாலங்காடு,
திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் வடாரண்யேஸ்வரர் கோயில், திருவாலங்காடு

பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 15-வது தலமாக விளங்கும் திருவாலங்காடு, திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் ஒரு தலமாக சிறப்புடன் விளங்குகிறது.

இறைவன் பெயர்: வடாரண்யேஸ்வரர், ஊர்த்துவதாண்டவர்
இறைவி பெயர்: வண்டார் குழலம்மை

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு, திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி,மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால், கோவில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்,
திருவாலங்காடு அஞ்சல்,
திருத்தணி வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம் – 631 203.

இவ்வாலயம், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்.

தலத்தின் சிறப்பு 

வடாரண்யேஸ்வரர் கோவில், நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம், ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படுகிறது. வலது காலை உடம்புடன் ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். 

இத்தலத்து நடராஜர், மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப்போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டித் தூக்கி நின்று ஆடாமல், உடலின் முன்பக்கத்தில் முகத்துக்கு நேராக பாதத்தைத் தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளியை, வெட்கித் தலை குனியவைத்த நடனமான இந்த ஊர்ர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். 

ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானைவிட நன்றாக நடனமாடி வந்த காளி, கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன், காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப்போனாள். நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது. சந்நிதிக்கு எதிரே மற்றும் பல விக்கிரகங்கள் இருக்கின்றன. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

கோவில் அமைப்பு 

கிழக்கில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரம், அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தருகிறார். உள்ளே நுழைந்தவுடன், வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தில்தான் நடராசர் அபிஷேகம் நடைபெறுகிறது. நுழைவு வாயிலைக் கடந்து சென்றவுடன் நாம் எதிரே காண்பது பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் மற்றும் மூன்று நிலைகளை உடைய இரண்டாவது கோபுரம். இந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. 

இக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் நாம் காண்பது இண்டாவது சுற்றுப் பிராகாரம். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும், அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.

மூலவரைத் தரிசிக்க உள் பிராகாரத்தில் செல்லும்போது சூரியன், அதிகாரநந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்கால் அம்மையார், கார்க்கோடகன், முஞ்சிகேச முனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அநுக்ரஹர், எண்வகை விநாயகர் உருவங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாக உள்ளது. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. பஞ்சபூதத் தலத்துக்கு உரிய லிங்கங்கள் வரிசையாக உள்ளன. சஹஸ்ரலிங்கம் தரிசிக்கத்தக்கது. சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் முதலிய சந்நிதிகளும் உள் பிராகாரத்தில் இருக்கின்றன. பைரவர் தனது வாகனமின்றிக் காட்சி தருகின்றார். 

பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், இரத்தின சபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். அம்பிகை கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. சந்நிதியில் சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் உள்ளன. இரத்தின சபையில் நடராசப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. சிவகாமி, காரைக்கால் அம்மையார் திருமேனிகள் அருகில் உள்ளன. இரத்தின சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகத லிங்கமும் உள்ளன. இவற்றுக்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது. இரத்தின சபையை வலம் வரும்போது, சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் உள்ளது. இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் 

தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள், சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.

மாந்தீஸ்வரர்
 
இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் உள்ள மாந்தீஸ்வரர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சனி பகவானின் இரண்டு மைந்தர்களில் ஒருவர் மாந்தி. ஒருமுறை, மாந்தி தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க திருவாலங்காடு திருத்தலம் வந்து ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றார். மாந்தி வழிபட்ட சிவலிங்கம் மாந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. 

ஆலயத்தில் மாந்தீஸ்வரருக்கு சிறப்புப் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜைகள் செய்வதன் மூலம், அஷ்டம சனி (8-ல் சனி), அர்த்தாஷ்டம சனி (4-ல் சனி) ஜன்ம சனி ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். ஒருவரின் ஜாதகத்தில் 1, 2, 4, 8, 12 ஆகிய இடங்களில் மாந்தி இருந்தால் அது தோஷமாகக் கருதப்படுகிறது.

அத்தகைய தோஷம், இங்கு மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜை செய்வதால் நீங்கும். மேலும், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமும் நடைபெறும். கடன் தொல்லை நீங்கி நிம்மதி ஏற்படும்.

ஆருத்ரா தரிசனம் மிக சிறப்பாக நடைபெறும் ஆலயங்களில் திருவாலங்காடு தலமும் ஒன்றாகும். சென்னைக்கு அருகிலுள்ள இத்தலத்தை நீங்களும் ஒருமுறை சென்று வழிபடுங்கள்.

திருவாலங்காடு - அப்பர் அருளிய தேவாரம் - பாடியவர் மதுரை பொன். முத்துக்குமரன்.

இத்தலத்தைப் பற்றிய திருப்புகழ் பாடல் பாடியவர் -  பாலசந்திரன். 

சுந்தரர் அருளிய தேவாரம் - பாடியவர்  கரூர் சாமிநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com