சரும நோய் நிவாரணத் தலம் நெல்லிவன நாதேசுவரர் கோவில், திருநெல்லிக்கா

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 117-வது தலமாக விளங்கும் திருநெல்லிக்கா, ஒரு சரும நோய் நிவாரணத் தலமாகப் போற்றப்படுகிறது. 
சரும நோய் நிவாரணத் தலம் நெல்லிவன நாதேசுவரர் கோவில், திருநெல்லிக்கா

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 117-வது தலமாக விளங்கும் திருநெல்லிக்கா, ஒரு சரும நோய் நிவாரணத் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

இறைவன் பெயர்: நெல்லிவன நாதேசுவரர்

இறைவி பெயர்: மங்களநாயகி

எப்படிப் போவது

திருவாரூரில் இருந்து தெற்கே 13 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில், நான்கு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி 4 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்து இத்தலத்துக்கு நகரப் பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு நெல்லிவன நாதேசுவரர் திருக்கோவில்,

திருநெல்லிக்காவல், திருநெல்லிக்காவல் அஞ்சல்,

திருவாரூர் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 610 205.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தலப் பெருமை

தேவலோகத்தில் உள்ள கற்பகம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் வேண்டியதை தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. இதனால் இந்த மரங்களுக்கு மிகுந்த கர்வம் உண்டாகிவிட்டது. அதன் காரணமாக, ஒருமுறை தேவலோகம் வந்த துர்வாசரை மதிக்காததால், அவர் கோபம் கொண்டு நீங்கள் பூமியில் புளிக்கும் கனிகளைக் கொண்ட நெல்லி மரங்களாக மாறுங்கள் என்று சாபமிட்டார்.

அவை சாப விமோசனம் அடைந்து மீண்டும் தேவலோகம் செல்லவும், நெல்லி மரத்தின் அருமையை பூலோகத்தினர் அறிந்துகொள்ளவும், ஈசன் அந்த நெல்லி மரத்தின் அடியிலேயே சுயம்புலிங்கமாகத் தோன்றினார். ஐந்து தேவ மரங்களும் இறைவனுக்குத் தொண்டு செய்தபின் தேவலோகத்துக்குச் திரும்பிச் சென்றன. நெல்லி மரத்தின் அடியில் தோன்றியதால் இறைவன் நெல்லிவனநாதர் என அழைக்கப்படுகிறார். இறைவன் தங்கிய இத்தலமும் திருநெல்லிக்கா என அழைக்கப்பட்டது.

மேற்கு நோக்கிய திருக்கோயில் ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரத்துடன், சுற்றிலும் மதில்கள் சூழ காட்சி அளிக்கிறது. 5 நிலை கோபுர வாயிலுக்கு வெளியே உள்ள கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமர விநாயகரையும் பணிந்து, நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லலாம். பிராகாரத்தில் நால்வர், கஜலட்சுமி, விநாயகர், வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர், சனிபகவான், தலமரம், நெல்லி, மரத்தினடியில் நெல்லிவன நாதர், பைரவர், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.

பிராகார வலம் வந்து படிகளேறி முன் மண்டபத்தை அடைந்தால், இடதுபுறம் சோமாஸ்கந்தர் தரிசனம் தருகிறார். நேரே நடராஜ சபை இருக்கிறது. இருபுறத்திலும் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் மேற்புறத்தில் நவக்கிரகங்கள், பன்னிரு ராசிகள், தசாவதாரங்கள் முதலிய சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. மூலவர் சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழு நாளும், மாசி மாதம் 18-ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கும், மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை சந்நிதிகளும் உள்ளன. சண்டேசுவரர் உள்ளார்.

நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. தெற்கிலுள்ள கோபுர வாயில் வழியே அம்பாள் சந்நிதியை சென்று அடையலாம். தெற்கு வாயிலுக்கு வெளியே, எதிரில் ஆலயத்தின் தீர்த்தக்குளம் உள்ளது. இத்தலம் சூரியன், பிரம்மன், திருமால், சந்திரன், சனி, கந்தர்வர், துர்வாசர் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது. துர்வாசருக்கு இறைவன் கோபம் தீர்த்து அருளிய தலம் திருநெல்லிக்கா. அம்பாள், உத்தம சோழன் என்ற மன்னனுக்கு மகளாகத் தோன்றி சிவபெருமானை மணம் புரிந்துகொண்ட சிறப்புடைய தலம் இதுவாகும்.

பஞ்சாட்சரம் பூஜை செய்த பஞ்சகூடபுரம் என்று சொல்லப்படும் ஐந்து தலங்களுள் திருநெல்லிக்காவல் தலமும் ஒன்று. மற்ற பஞ்சகூடபுர தலங்கள் – 1. நாட்டியத்தான்குடி, 2. திருக்காறாயில், 3. திருத்தெங்கூர், மற்றும் 4. நமசிவாயபுரம் என்பனவாகும். இத்தலத்தின் தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், ரோகநிவாரண தீர்த்தம், சக்கர தீர்த்தம் என்று 5 தீர்த்தங்கள் உள்ளன.

கந்தர்வன் ஒருவனின், குஷ்ட நோய் நீங்க இத்தலத்தில் உள்ள ரோகநிவாரண தீர்த்தத்தில் நீராடி அவன் குறை நீங்கியதாக தலபுராணம் குறிப்பிடுகிறது. அவன் நீராடிய ரோகநிவாரண தீர்த்தத்தில் நீராடி இறைவனை உள்ளன்போடு வழிபட்டால், சரும நோய்கள் குறிப்பாக குஷ்ட நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருளி

மறத்தால் மதில் மூன்று உடன் மாண்பு அழித்த

திறத்தால் தெரிவு எய்திய தீ வெண் திங்கள்

நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

பதிதான் இடுகாடு பைங்கொன்றை தொங்கல்

மதிதான் அது சூடிய மைந்தனும் தான்

விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்

நெதிதான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

நலந்தான் அவன் நான்முகன் தன் தலையைக்

கலந்தான் அதுகொண்ட கபாலியும் தான்

புலந்தான் புகழால் எரிவிண் புகழும்

நிலந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

தலைதான் அது ஏந்திய தம் அடிகள்

கலைதான் திரி காடு இடம் நாடு இடமாம்

மலைதான் எடுத்தான் மதில் மூன்றுடைய

நிலைதான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்

உவந்தான் சுறவேந்தன் உரு அழியச்

சிவந்தான் செயச்செய்து செறுத்து உலகில்

நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

வெறியார் மலர்க்கொன்றை யந்தார் விரும்பி

மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான்

குறியால் குறிகொண்டவர் போய்க் குறுகும்

நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

பிறைதான் சடைச் சேர்த்திய எந்தை பெம்மான்

இறைதான் இறவாக் கயிலை மலையான்

மறைதான் புனலொண் மதி மல்குசென்னி

நிறைதான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

மறைத்தான் பிணி மாது ஒருபாகம் தன்னை

மிறைத்தான் வரையால் அரக்கன் மிகையைக்

குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை

நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

தழல் தாமரையான் வையம் தாயவனும்

கழல்தான் முடிகாணிய நாண் ஒளிரும்

அழல்தான் அடியார்க்கு அருளாய்ப் பயக்கும்

நிழல்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

கனத்தார் திரைமாண்டு அழற் கான்ற நஞ்சை

என அத்தா என வாங்கி அது உண்ட கண்டன்

மனத்தாற் சமண் சாக்கியர் மாண்பு அழிய

நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின்

நிகரா நெல்லிக்காவுள் நிலாயவனை

நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன

பகர்வார் அவ ர்பாவம் இலாதவரே.

சம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர் இரா.குமரகுருபரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com