முன்னோர்களுக்கு முக்தி அளிக்கும் மோட்ச தீபம் - திருப்பூவணம்

பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்கள் வரிசையில் 11-வது தலமாக விளங்குவது திருப்பூவணம்.
முன்னோர்களுக்கு முக்தி அளிக்கும் மோட்ச தீபம் - திருப்பூவணம்

பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்கள் வரிசையில் 11-வது தலமாக விளங்குவது திருப்பூவணம். மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படும் இத்தலம், தேவார மூவராலும் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பை கொண்டுள்ளது. 

இறைவன் பெயர்: புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ரு முக்தீஸ்வரர்
இறைவி பெயர்: சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி

இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று, திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, சுந்தரர் பதிகம் ஒன்று என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.
 

எப்படிப் போவது?

மதுரை - மானாமதுரை சாலை வழித்தடத்தில், மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவில் திருப்பூவணம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்பூவணம் செல்லலாம். திருப்பூவணம் ரயில் நிலையம் மதுரை - மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்,
திருப்பூவணம் அஞ்சல்,
இராமநாதபுரம் மாவட்டம் – 623 611.

பாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்பூவணம். தமிழ்நாட்டு அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மூவராலும் வழிபட்டு போற்றப்பெற்றது என்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவிளையாடல்களுள், சித்தராக வந்து திருப்பூவணத்தில் வாழ்ந்துவந்த பொன்னையாளுக்குத் தங்கம் கொடுத்து இரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.
 

திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வருகை தந்தபோது, வைகை ஆற்றைக் கடந்துதான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்லவேண்டி இருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்குத் தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால், வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது. இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.

கோவில் அமைப்பு 

ஆலயம் கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் வைகை ஆற்றின் தென்கரையில் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தரநாயகி சந்நிதியும் தனிக்கோவிலாக ஒரு சிறிய மூன்று நிலை கோபுரத்துடன் உள்ளது. இறைவன் கோவில் ஐந்து நிலை கோபுரம் கடந்து உள்ளே சென்றவுடன் வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் ஆகியவை உள்ளன. ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும் அதையடுத்து அர்த்தமண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. மூலவர் புஷ்பவனேஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனி உருவில் காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின்றன. சூரியன், பிரம்மா, நாரதர், மகாவிஷ்ணு, திருமகள், நளமகராஜா மற்றும் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களாலும் வழிபடப் பெற்ற சிறப்பை உடையது இத்தலம்.

மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்புறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். நமது முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) அமாவாசை நாட்களிலும், மஹாளய பட்சம் எனப்படும் 15 நாட்களிலும் திதி, தர்ப்பணம் ஆகியனவற்றை செய்து நீர்க்கடன் செய்வது மிகவும் முக்கியம். பித்ருக்கள் திருப்தி அடைந்தால்தான் நமது வாழ்வு வளமாக இருக்கும். முன்னோர் வழிபாடு, தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கவல்லது. தெரிந்தோ, தெரியாமலோ ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஏதேனும் பாவங்கள் செய்யாமல் இருக்கமாட்டர்கள். அவ்வாறு நமது பித்ருக்கள் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிடைக்க, திருப்பூவணம் தலத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவது மிகவம் சிறந்தது. இதனால், நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 

இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி ஆலயத்தினுள் ஒரு தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் ஆலயத்தின் ஒரே மதில் சுவற்றின் உள்ளே சுற்றுப் பிராகாரங்களுடன் அமையப்பெற்றுள்ளன. கோவிலின் தலவிருட்சமாக பலா மரம் விளங்குகிறது. மணிகர்ணிகை தீர்த்தம், வைகை நதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை இக்கோயிலின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள்பிர    காரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப்பெருமாள், நால்வர், 63 மூவர், சப்தமாதர்கள், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், நவகிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் நடராஜர் சபையிலுள்ள நடராசமூர்த்தம், கல்லில் வடிவமைக்கப்படுள்ளது. இந்த மூர்த்தம் பெரியதாகவும், அழகாகவும் காணப்படுகிறது. அருகே பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் காட்சியளிக்கன்றனர். உலோகத்தால் ஆன உற்சவ நடராஜரும், சிவகாமியும் இச்சபையில் இடம் பெற்றுள்ளனர்.

திருவிளையாடல் 
 

திருப்பூவணத்தில் பொன்னையாள் என்ற பெயருடைய பெண்ணொருத்தி வாழ்ந்துவந்தாள். அவள் இறைவன் பூவணநாதர் மேல் மிகுந்த பக்தி பூண்டவள். அவளுக்கு, பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், அதற்குரிய நிதி வசதி அவளிடம் இல்லை. தனது ஆசையை நிறைவேற்றித்தருமாறு இறைவனை வேண்டிக்கொண்டே இருந்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றிவைக்க திருவுளம் கொண்ட இறைவன், ஒரு சித்தராக அவள் முன் வந்தார். பொன்னையாள் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை ரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக்கொடுத்து அவளுக்கு அருள் செய்தார். கிடைத்த தங்கத்தால், பூவணநாதரின் திருவுருவை பொன்னையாள் வடிக்கச் செய்தாள். தங்கத்தால் உருவான சிலையின் அழகைக் கண்ட பொன்னையாள், அதைக் கிள்ளி முத்தமிட்டாள். கிள்ளிய இடம் சற்றே பள்ளமானது. இன்றும் பூவணநாதரின் அந்த உற்சவ திருவுருவ மூர்த்தத்தில் கன்னத்தில் முத்தக்குறி அடையாளம் இருப்பதைக் காணலாம். இறைவன் நடத்திய இந்தத் திருவிளையாடல் படலம், இத்தலத்துக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
 

திருப்பூவணம் - சுந்தரர் எழுதிய தேவாரம் - பாடியவர் நெய்வேலி சிவ. இராஜபதி ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com