வழக்குகளில் வெற்றிபெற அக்னீஸ்வரர் கோவில், மேலைத்திருக்காட்டுப்பள்ளி

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 9-வது தலமாக இருப்பது திருக்காட்டுப்பள்ளி.
வழக்குகளில் வெற்றிபெற அக்னீஸ்வரர் கோவில், மேலைத்திருக்காட்டுப்பள்ளி

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 9-வது தலமாக இருப்பது திருக்காட்டுப்பள்ளி. குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இத்தல இறைவனை வழிபடுவதால், நம்முடைய நியாயமான வழக்குகளில் எவ்விதத் தடை இருந்தாலும் வெற்றி பெறலாம்.

இறைவன் பெயர்: அக்னீஸ்வரர், தீயாடியப்பர்

இறைவி பெயர்: சௌந்தர நாயகி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என மொத்தம் இரண்டு பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

திருவையாறு - கல்லணை சாலையில் திருவையாற்றுக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி கோவில் உள்ளது. திருச்சி, தஞ்சை, திருக்கண்டியூர், திருவையாறு, கல்லணை போன்ற இடங்களில் இருந்தும் இத்தலத்துக்குப் பேருந்துகள் உள்ளன.

ஆலய முகவரி

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்,

திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி அஞ்சல்

தஞ்சாவூர் மாவட்டம் – 613 104.

இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருக்காட்டுப்பள்ளி என்னும் பெயரில், பாடல் பெற்ற தலங்கள் இரண்டு உள்ளன. காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும். அது திருவெண்காட்டுக்கு அருகில் உள்ளது. மேலைத்திருக்காட்டுப்பள்ளி எனப்படும் இத்தலம், காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்று. இங்குதான் குடமுருட்டியாறு பிரிகிறது.

மேலைத்திருக்காட்டுப்பள்ளி சிவாலயம், ஐந்து நிலை கோபுரத்துடனும், மூன்று பிராகாரங்களைக் கொண்டும் அழகுற அமைந்துள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் கருவறை, தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு பள்ளமான பகுதியில் இருக்கிறது. இத்தலத்தில் இறைவனை அக்னி பகவான் வழிபட்டதால், கோயிலுக்கு "அக்னீஸ்வரம்" என்று பெயர் வந்தது. சிவபெருமானை அக்னி பகவான் வழிபட உண்டாக்கிய அக்னி தீர்த்தம், இன்று கிணறு வடிவில் உள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் உருவில் சிறியது. லிங்கத்தின் சிரசு மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றத்தைக் காணலாம்.

மூலவர் சற்றே தாழ்வான பள்ளத்தில் உள்ளார். குறுகிய கருவறைக்குள் குனிந்து நெருங்கி யாரையும் தரிசிக்க அனுமதிப்பதில்லை. பக்தர்கள் சற்று தூரத்திலிருந்துதான் இறைவனை வழிபட வேண்டும். மூலவரைச் சுற்றிவரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். உள் பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். லிங்கோத்பவர், கோஷ்ட மூர்த்தமாக இருக்காமல், விநாயகருக்குப் பக்கத்தில் தனி சந்நிதியில் காணப்படுகிறார். லிங்கோத்பவர் இயல்பாக இருக்கும் இடமான மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார். அடுத்து வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், பக்கத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் உள்ளன.

இறைவி சௌந்தரநாயகி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவுக்குத் தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க அனுமதித்தார் என்று இத்தலத்து கல்வெட்டு கூறுகிறது. இத்தலத்தில் விஷ்ணுவுக்கு தனி ஆலயம் இல்லை. தீயாடியப்பர் ஆலயத்தின் உள்ளே விஷ்ணு, ஸ்ரீனிவாசப் பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இத்தலத்திலுள்ள இரண்டாம் பிராகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, குரு தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். சிலா வடிவிலுள்ள இவரின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே, கருவறை கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். நவகிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன.

இத்தலத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி ருத்திராஷம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து, யோகமூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவரை 5 நெய்தீபம் ஏற்றி முல்லைப் பூவால் வழிபட்டால், திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம். வழக்குகளில் நம் பக்கம் நியாயம் இருந்தால், எல்லா தடைகளும் நீங்கி வெற்றிபெறலாம்.

தல புராண வரலாறு

புராண காலத்தில், தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்துக்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன், தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகிவிடுகிறதென்றும், அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டும் என்றும் இறைவனிடம் முறையிட்டான். அக்னிதேவன் முன் இறைவன் சிவபெருமான் தோன்றி, இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்தக் குளத்து நீரால் தன்னை அபிஷேகம் செய்தால், என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும், அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார். இந்த அக்னி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசி மகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகிய நாள்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் பெறுவர் என்பது நம்பிக்கை.

உறையூர் சோழமன்னனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி திருக்காட்டுப்பள்ளியிலும், மற்றொருத்தி உறையூரிலும் வாழ்ந்து வந்தனர். மன்னனின் பணியாளன், கோவில் நந்தவனத்தில் உள்ள பூக்களைப் பறித்து மனைவிகளிடம் கொடுக்க வேண்டும் என்பது அரசனின் ஆணை. திருக்காட்டுப்பள்ளியில் வாழும் மனைவி, பூக்களைப் பெற்று இறைவனை அர்ச்சித்தாள். உறையூரில் இருந்தவள், பூக்களைத் தன் தலையில் சூட்டி மகிழ்ந்தாள். இதனால் வெகுண்ட இறைவன், மண் மாரி பெய்து உறையூரை அழித்தான். திருக்காட்டுப்பள்ளி மட்டும் இந்த அழிவிலிருந்து தப்பியது என்று ஒரு வரலாறு தெரிவிக்கிறது.

இத்தலத்துக்கான திருநாவுக்கரசர் பதிகம் 5-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. உடலை விட்டு உயிர் பிரியும் முன், ஒருமுறையேனும் திருக்காட்டுப்பள்ளி அடைந்து அங்குள்ள இறைவனை வழிபடுங்கள் என்று அவர் தனது பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்.

மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாம்

கேட்டுப் பள்ளிகண்டீர் கெடு வீரிது

ஓட்டுப் பள்ளி விட்டு ஓடோடல் உறாமுனம்

காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே.

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே

நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்

கூட்டை விட்டு உர் போவதன் முன்னமே

காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே.

தேனை வென்றசொல் லாளொடு செல்வமும்

ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே

கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி

ஞான நாயகனைச் சென்று நண்ணுமே.

அருத்த மும்மனை யாளொடு மக்களும்

பொருத்தமில்லை பொல்லாதது போக்கிடும்

கருத்தன் கண்ணுதலான் அண்ணல் காட்டுப்பள்ளித்

திருத்தன் சேவடியைச் சென்று சேர்மினே.

சுற்ற முந்துணையும் மனை வாழ்க்கையும்

அற்ற போதணை யாரவ ரென்றென்றே

கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப்

பெற்ற மேறும் பிரான் அடி சேர்மினே.

அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமும்

துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்

கடம்பன் தாதை கருதும் காட்டுப்பள்ளி

உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.

மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்

பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்

கையின் மான் உடையான் காட்டுப்பள்ளி எம்

ஐயன் தன் அடியே உடைந்து உய்ம்மினே.

வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர்

சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்

காலையேதொழுங் காட்டுப்பள்ளி உறை

நீலகண்டனை நித்தல் நினைமினே.

இன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள்

ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள்

அன்று வானவர்க் காக விடமுண்ட

கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே.

எண்ணி லாஅரக் கன்மலை யேந்திட

எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்

கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை

நண்ணு வாரவர் தம்வினை நாசமே.

திருநாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் மயிலாடுதுறை சிவக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com