திருமணத் தடை நீக்கும் சற்குணலிங்கேஸ்வரர் கோவில், திருகருக்குடி

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 69-வது தலமாக விளங்கும் திருக்கருக்குடி....
திருமணத் தடை நீக்கும் சற்குணலிங்கேஸ்வரர் கோவில், திருகருக்குடி

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 69-வது தலமாக விளங்கும் திருக்கருக்குடி, இன்றைய நாளில் மருதாந்தநல்லூர் என்றும் மருதாநல்லூர் என்றும் வழங்கப்படுகிறது.

திருமணத் தடை நீக்கும் தலமாக மட்டுமன்றி, மேலும் பல இன்னல்களுக்குப் பரிகாரத் தலமாகவும் இத்தலம் சிறப்பு பெற்று விளங்குகிறது.

இறைவன் பெயர்: சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர்

இறைவி பெயர்: சர்வலங்கார நாயகி, அத்வைத நாயகி, கல்யாணி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் சாக்கோட்டைக்கு தென்கிழக்கில் 1.5 கி.மீ. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

ஆலய முகவரி

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்,

மருதாநல்லூர், மருதாநல்லூர் அஞ்சல்,

திப்பிராஜபுரம் S.O.,

கும்பகோணம் வட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் – 612 402.

இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு

சிறிய பழைமையான கோயில். கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.

கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை. வாயிலில் விநாயகர், கார்த்திகேயர் சந்நிதிகள் உள்ளன. கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மண்ணினை கையால் பிடித்துச் செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.

கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், இருபுறம் பூதகணங்கள், தட்சிணாமூர்த்தி (மேலே வீணாதர தட்சிணாமூர்த்தி), லிங்கோத்பவர் ஆகியோரின் மூர்த்தங்கள் உள்ளன. பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரகங்கள், சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர். இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்து இறைவன் கருக்குடிநாதர் என்று தேவாரப் பாடலிலும், பிரம்மா முதலிய தேவர்கள் வழிபட்டதால், பிரம்மபுரீஸ்வரர் என்றும் சற்குணன் என்ற அரசன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு பேறு பெற்றதால் சற்குணலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இலங்கைக்குச் செல்லும் முன், இராமர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டதாக ஐதீகம். வழிபாடு செய்ய லிங்கத் திருமேனி தேவைப்பட்டது. இராமேஸ்வரத்தில் நடந்ததுபோல, குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டுவர தாமதமானதால், இத்தலத்தில் ராமர் மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து இத்தலத்தில் வழிபட்டார் என்றும், அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும் என்றும் கூறப்படுகிறது. இன்றும் லிங்கத் திருமேனியில் கரங்களின் அடையாளம் தெரிவதைக் காணலாம். லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது கவசம் சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகிறது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் கோயிலின் இடப்புறம் அனுமந்த லிங்கம் என்ற பெயரில் தனி சந்நிதியில் உள்ளது.

இறைவன் சந்நிதிக்கு வலது புறத்தில் கல்யாண கோலத்தில் அம்பிகை கல்யாணி காட்சி தருகிறாள். இத்தகைய அமைப்பு உள்ள தலங்கள் திருமணத் தடை நீக்கும் தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இத்தலத்தில் 8 வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு பால் பாயசம் நைவேத்யம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கி ஆண், பெண் இரு பாலாருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று பக்தர்களின் நீண்டகால நம்பிக்கை. என்வே இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது.

தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புணர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப் பெற்றான். அம்மன் சந்நிதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது. ஆகையால், இத்தலம் மனிதர்களின் சாப தோஷ நோய்களை நீக்கும் ஒரு தலமாகவும் உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் எமதீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி கருக்குடிநாதரை வழிபட்டால் நமது கர்ம வினைகள் தீங்கும் என்று தலபுராணம் விவரிக்கிறது.

மேலும் இத்தலத்திலுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வாஸ்து தோஷம் போக்கும் முருகனாக அருள்பாலிக்கிறார். மேலும், இத்தலத்தில் சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக பாலசனீஸ்வரர் என்று பெயருடன் தனி சந்நிதியில் சிவபெருமானை நோக்கி உள்ளார். இவரை வழிபடுவதன் மூலம் சகலவித சனி தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.

கல்யாணி அம்பாள் சமேத கருக்குடிநாதரை வணங்கி எல்லா நலங்களும் பெற இத்தலத்துக்குச் சென்று வாருங்கள்.

இத்தலத்து இறைவன் மேல் திருஞானசம்பந்தர் பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

நனவிலுங் கனவிலும் நாளுந் தன்னொளி

நினைவிலும் எனக்குவந் தெய்தும் நின்மலன்

கனைகடல் வையகந் தொழு கருக்குடி

அனலெரி யாடுமெம் மடிகள் காண்மினே.

வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்

மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்

காதியல் குழையினன் கருக்குடி அமர்

ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.

மஞ்சுறு பொழில்வளம் மலி கருக்குடி

நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்

அஞ்சுரும் பார்குழல் அரிவை யஞ்சவே

வெஞ்சுரந் தனில்விளை யாட லென்கொலோ.

ஊனுடைப் பிறவியை அறுக்க வுன்னுவீர்

கானிடை யாடலான் பயில் கருக்குடிக்

கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்

வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.

சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்

கூடுவ ருலகிடை யையங் கொண்டொலி

பாடுவர் இசைபறை கொட்ட நட்டிருள்

ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.

இன்புடை யாரிசை வீணை பூணரா

என்புடை யாரெழில் மேனி மேலெரி

முன்புடை யார்முத லேத்தும் அன்பருக்

கன்புடை யார்கருக் குடியெம் மண்ணலே.

காலமும் ஞாயிறுந் தீயு மாயவர்

கோலமும் முடியர வணிந்த கொள்கையர்

சீலமும் உடையவர் திருக் கருக்குடிச்

சாலவும் இனிதவ ருடைய தன்மையே.

எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை

முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்

கறைபடு பொழில்மதி தவழ் கருக்குடி

அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.

பூமனுந் திசைமுகன் தானும் பொற்பமர்

வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி

ஆமென வுயர்ந்தவன் அணி கருக்குடி

நாமன னினில்வர நினைதல் நன்மையே.

சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி

ஆக்கிய வுரைகொளேல் அருந் திருந்நமக்

காக்கிய அரனுறை யணி கருக்குடிப்

பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே.

கானலில் விரைமலர் விம்மு காழியான்

வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளி

ஆனமெய்ஞ் ஞானசம்பந்தன் சொல்லிய

ஊனமில் மொழிவலார்க்கு உயரும் இன்பமே.

சம்பந்தர் அருளிய பதிகம் – பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com