காவ்யாவின் சிவப்பு நிற ஷூக்கள்

ஜின்னிங் பேக்டரி ஒன்றில் மெஷின்மேனாய் பணியாற்றும் எனக்குச் சம்பளம் கிட்டத் தட்ட முன்னூறு ரூபாய் தான். இந்த முன்னூறும் பத்தாம் தேதி தாள் காலண்டரில் கிழி படுவதற்குள் ஆவியாகி விடும். மீதி இருபது நாளும்..
காவ்யாவின் சிவப்பு நிற ஷூக்கள்

தண்டு மாரியம்மன் கோயில். ஆடி வெள்ளிக் கிழமை. பெண்கள் கூட்டம் எழுபது சதவீதமும், ஆண்கள் கூட்டம் முப்பது சதவீதமும் கோயில் முழுக்க பரவியிருந்தார்கள். கோபுர உச்சியில் இருந்த ஒலிப்பெருக்கி கந்தர் சஷ்டியைப் பாடிக் கொண்டிருக்க நான் உள்ளே நுழைந்தேன்.
என்னுடைய தேய்ந்து போன ஹவாய் செருப்புகளை ‘பாதணி காப்பகம்’ என்று போர்டு எழுதி தொங்க விட்டிருந்த செருப்பு ஸ்டாலில் விட்டு விட்டு தகர டோக்கனை வாங்கிக் கொண்டு உள்ளே போகத் திரும்பினேன்.
அப்போது தான் அது என் கண்ணில் பட்டது.
குழந்தைகள் அணியும் புத்தம் புதிய சிவப்பு வண்ண ஷூக்கள்.
செருப்பு ஸ்டாலின் மர ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த அந்த ஷூக்கள் எப்படியோ தவறி விழுந்து பக்கத்தில் வளர்ந்திருந்த செடிக்குப் பின்னால் அரையிருட்டில் பளீரெனத் தெரிந்தன.
என் மனசில் சந்தோஷக் குமிழிகள் உருவாக ஆரம்பித்தன. இதே மாதிரியான ஷூவைத்தான் என் மகள் ஏழு வயது சசிகலா தினமும் என்னைக் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். இன்றைக்குக் காலையில் கூட என் மனைவி கிரிஜாவுக்கும் எனக்கும் இது குறித்து ஒரு சின்ன சண்டை.
“அந்தக் குழந்தை தினசரி இப்படி ஏங்கி ஏங்கி கேட்குதே? அந்த மாதிரியான ஷூவை வாங்கித் தான் குடுத்துடுங்களேன்..” என் மனைவி சீறினாள்.
“ஆமாம் வாங்கிக் குடுத்திட வேண்டியது தான். ஏன்னா உன்னோட பாட்டன் தானே பஜார்லே ஷு மார்ட் வெச்சிருக்கான்? போனதும் மாட்டிட்டு வந்துடலாம்! அவ கேட்கிற ஷூ என்ன விலைன்னு உனக்குத் தெரியுமாடி?
முப்பது ரூபா! சரியான மூணு பத்து ரூபா நோட்டு முள்ளங்கி பத்தையாட்டம் எண்ணித் தரணும்...! முப்பது ரூபாயைப் போட்டு ஷூ வாங்கற நிலமையிலா நாம இருக்கோம்...? இனிமே மாசத்தில ரெண்டு தடவை சம்பளம்னு கவர்ன்மெண்ட் சட்டம் கொண்டு வந்தாக்கூட நம்ம பத்தாக்குறை போகாது...” எரிமலையாய் பொறுமி விட்டு வெளியே வந்தேன்.
ஜின்னிங் பேக்டரி ஒன்றில் மெஷின்மேனாய் பணியாற்றும் எனக்குச் சம்பளம் கிட்டத் தட்ட முன்னூறு ரூபாய் தான். இந்த முன்னூறும் பத்தாம் தேதி தாள் காலண்டரில் கிழி படுவதற்குள் ஆவியாகி விடும். மீதி இருபது நாளும் கை மாற்று - கடன் - பாத்திர அடமானம்- இப்படி வண்டி ஓடும்.
இந்த அவலத்தில் முப்பது ரூபாய் விலையில் ஷூ கேட்டு அடம் பிடித்து அழுது ஆர்பாட்டம் பண்ணும் என் மகள் சசிகலா! அதற்கு சப்போர்ட் பண்ணும் என் மனைவி!
முடிகிற காரியமா இது?
இன்றைக்கு--
இந்தத் தண்டு மாரியம்மன் கோயிலில் சசிகலா கேட்ட அதே சிவப்பு நிற ஷூக்கள் என் கண்ணில் பட்ட போது அப்படியே திகைத்துப் போனேன்.
எத்தனையோ நூற்றூக் கணக்கான செருப்புகள் மர ஸ்டாண்டில் ஜம்மென்று வீற்றிருக்கும் போது அந்தக் குழந்தையின் ஷூக்கள் மட்டும் தவறிக்-- கீழே அதுவும் செடி மறைவில் கிடப்பானேன்? அதுவும் என் கண்ணில் மட்டும் படுவானேன்?
தெய்வம் என் குழந்தையின் ஆசையை நிறைவேற்றி வைக்க விரும்புகிறதோ?
அப்படித்தான் ஆசையாக எண்ணத் தோன்றிற்று எனக்கு.
அவசர அவசரமாய் கோயிலை வலம் வந்து கர்ப்பகிருக தரிசனம் செய்யாமல் வெறுமனே வாசலில் நின்று கும்பிடு ஒன்றைப் போட்டு விட்டு அந்தச் செடி மறைவை நோக்கிப் போனேன்.
இன்னமும் அந்த ஷூக்கள் அங்கேயே இருந்தன.
‘யாரானும் என்னைக் கவனிக்கிறார்களா?’ என்று பார்த்தேன்.
ஒருவரும் கவனிக்கவில்லை.
செடி மறைவை ஒட்டினாற் போல் இருந்த திண்டில் குத்துக் காலிட்டு உட்கார்ந்து கொண்டேன். டிபன் பாக்ஸ் கொண்டு போகும் பையை விரித்து வைத்துக் கொண்டு சற்றுப் பின்னுக்குச் சாய்ந்து அந்த ஷூக்களை எடுத்தேன். விநாடி நேரத்திற்குள் சரேலென பைக்குள் போட்டுக் கொண்டேன்.
ஒரு நிமிஷம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். பிறகு மெல்ல எழுந்து வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்...தே...ன்....
“அங்கிள்!” எனக்குப் பின்னால் ஒரு குரல்.
திரும்பினேன்.
ஏழு வயது சிறுமி ஒருத்தி ப்ராக்கில் களையான முகத்தோடு நின்றிருந்தாள். இடுப்பில் கை வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து புன்னகைத்தாள். என்னை நெருங்கினாள். கான்வென்ட் ஆங்கில உச்சரிப்போடு தமிழையும் கலந்து பேசினாள்.
“அங்கிள்! மை நேம் ஈஸ் காவ்யா! எங்கப்பா ஸ்டேன்ஸ் மில்லில் ஜே.ஈ. யா இருக்கார். நான் இப்ப பிரசன்டேஷன் கான்வென்ட்ல பர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிச்சிட்டிருக்கேன். கோயிலுக்கு நானும் என்னோட கிரேண்ட்மாவும் மட்டுந்தான் வந்திருக்கோம்....”
சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசும் அந்தச் சிறுமியையே பார்த்தேன்.
“அப்படியா? சரி... பாட்டி தேடுவா... பாட்டி கிட்டப் போ..”
சொல்லிவிட்டுப் போகத் திரும்பினேன்.
“அங்கிள்!”
நின்றேன்.
“அங்கிள்! இப்ப நான் ஒண்ணு சொல்லுவேன்... அதுமாதிரி நீங்க செய்யணும்...?”
“என்ன?” - என்றேன்.
“உங்க ‘பேக்’ கில நீங்க எடுத்து வச்சிருக்கற என்னோட ஷூ ரெண்டையும் எடுத்து எனக்கு போட்டு விடணும்...”
நான் சட்டென்று வியர்த்தேன்.
சை! பார்த்து விட்டாள். ஓடி விடலாமா? யோசித்தேன்.
“என்ன அங்கிள், யோசனை பண்றீங்க? ஓடீடலாம்னா..! ப்ளீஸ். வேண்டாம் அங்கிள்! நீங்க ஓடினா நான் சத்தம் போடுவேன்.. அப்புறம் எல்லாரும் உங்களைப் பிடிச்சு சட்டை கிழியற மாதிரி அடிப்பாங்க...”- கெஞ்சுகிற மாதிரி அவள் சொன்னாள்.
உடம்பும் மனசும் பயத்தில் பட படத்தன.
அப்படியே கீழே உட்கார்ந்தேன். பையைப் பிரித்து ஷூக்களை எடுத்தேன்.
அவள் கால்களை நீட்டினாள் மாட்டி விட்டேன்.
“தேங்க்யூ அங்கிள்! குட்பை...”
கையை ஆட்டி விட்டு தன் பாட்டியைத் தேடிப் போனாள்.
என் உடம்பின் ஒவ்வொரு அங்குலமும் ரத்தத்தைச் சிந்தாத ஊமைக் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு ஏகமாய் வலிக்க ஆரம்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com