ஒரு மிஸ்டர் இரண்டு மிஸ்

அது ஒரு பிரபல அமெரிக்கக் கம்பெனி. அந்தக் கம்பெனியின் அக்கவுண்ட்ஸ் பிரிவில்
ஒரு மிஸ்டர் இரண்டு மிஸ்

அது ஒரு பிரபல அமெரிக்கக் கம்பெனி. அந்தக் கம்பெனியின் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்து வந்தான் ரகு. அந்தக் கம்பெனியின் அதே அக்கவுண்ட் பிரிவில்தான் அவனுடைய அப்பாவும் வேலை பார்த்து ரிடையர் ஆனார். அவர் காலத்திலேயே இந்த எஃகு மேசை நாற்காலிகள், ஃபைலிங்க் காபினெட்டுகள் ஆகியவை வந்துவிட்டன. கால்குலேட்டிங் மெஷின்கள் வந்துவிட்டன. இன்டர்காம் வந்து விட்டது. சென்ட்ரல் ஏர் கன்டிஷினிங் கூட.

ஆனால் ஒன்று அவர் காலத்தில் கிடையாது. புடவையுடுத்திய பெண்கள். அப்போதெல்லாம் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் தான் ஆபிஸ் வேலைகளுக்கு வருவது வழக்கமாக இருந்தது. அப்படி இரண்டு மூன்று பேர் அந்தக் கம்பெனியிலும் இருந்தார்கள். அப்பா காலத்தில். ஆனால் இவர்களும் கூட அக்கவுண்ட்ஸ் செக்‌ஷனில் இருந்ததில்லை.

இப்போதோ அந்த செக்‌ஷனில் ஒரு பெண் அல்ல இரண்டு பெண்கள் இருந்தார்கள். ஒருத்தி சியாமளா. இன்னொருத்தி நளினி. இருவருமே மிஸ்கள். அல்லது குமரிகள். தமிழ்க்குமரிகள். சியாமளா டைப்பிஸ்ட். சிவந்த நிறமும் மூக்கும் முழியுமாகப் பார்க்க நன்றாக இருப்பாள். நல்ல கெட்டிகாரியும் கூட. ரகுவுக்கு அவளைப் பிடிக்கும். ஆனால் அவளிடம் அவன் அதிகமாகப் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. பயம் தான் காரணம்.

நளினி டெஸ்பாட்ச் கிளார்க். பல விதங்களில் சியாமளாவுக்கு நேர் எதிரிடையானவள். குள்ளம். நிறம் கறுப்பு. முகத்திலும் லட்சணம் கிடையாது. மூஞ்சூரின் நினைவுதான் வரும் அவனுக்கு அவளைப் பார்க்கும் போதெல்லாம். அல்லது மிக்கி மெளஸ்.

இரவில் தன் அறையில் தனியாக இருக்கும் போது அவனுக்குச் சில சமயங்களில் சியாமளாவின் முகம் நினைவுக்கு வரும். சியாமளாவும் அவனும் கடைத்தெருவில் நடந்து போவது போலவும், ரெஸ்டாரண்டில் உட்கார்ந்திருப்பது போலவும், சேர்ந்து சினிமா பார்ப்பது போலவும் – ஏதேதோ கற்பனைகள் அவன் மனதில் தோன்றும். சில சமயங்களில், சியாமளா அவன் கனவுகளில் கூட இடம் பெற்றிருக்கிறாள். ஆனால் பகல் வேளையில் ஆபிசில் அவள் எப்போதாவது எதிரே வந்தால் அவன் அவள் முகத்தைப் பார்க்கக் கூட கூச்சப்பட்டுக் கொண்டு பார்வையைக் கீழே தாழ்த்திக் கொள்வான்.

நளினியின் முகத்தையும் அவன் பார்ப்பது கிடையாது. ஆனால் இவள் விஷயத்தில் காரணம் பயமோ கூச்சமோ அல்ல. இரக்கம். அவளுடைய முகத்தின் அவலட்சணம் அவனுள் அருவருப்பை ஏற்படுத்தும். அந்த அருவருப்பு எங்காவது அவன் முகத்திலும் பிரதிபலித்து அதை அவள் பார்க்க நேர்ந்தால் அவள் மனம் வீணே வேதனைப்படுமே! எனவே அவள் முகத்தை நேரிடையாக ஏறிட்டுப் பார்ப்பதையும் அவன் தவிர்த்து வந்தான். நளினி அவன் கற்பனைகளிலோ கனவுகளிலோ கூட இடம் பெற்றதில்லை.

ஒரு பக்கம் கூச வைக்கும் அழகு. இன்னொரு பக்கம் அருவருப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்தும் அவலட்சணம். நல்ல சேர்க்கை!

அந்த செக்‌ஷனில் அவனுடைய அப்பாவுடன் வேலைக்குச் சேர்ந்து ஆனால் இன்னமும் ரிடையர் ஆகாதவர்கள் சில இருந்தார்கள். அவனுடைய அப்பாவின் நெருங்கின தோழர்கள், அடிக்கடி வீட்டுக்கு வருகிறவர்கள், இவர்களில் அவனுடைய நேரடி மேலதிகாரியான ரங்கசாமியும் அடக்கம். இவர்களுக்கெல்லாம் ரகுவை அவன் ஒரு சின்னப் பையனாக இருந்த காலத்திலிருந்தே தெரியும். ரகுவுக்கு ஒரு கார்டியனாக நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் சியாமளாவுடனோ நளினியுடனோ அதிகம் பேசாமல் பழகாமல் இருந்ததற்கு இவர்களும் ஒரு காரணம். பெண்கள் வேலைக்கு வருவது தப்பு என்ற கொள்கையுடையவர்கள் அவர்கள். சியாமளாவும் நளினியும் செக்‌ஷனில் இல்லாத நேரங்களில் அவர்களைப் பற்றிக் கேலியாக பேசிக் கொள்வார்கள். அவர்களுடையே வேலையில் தமக்குத் தென்பட்ட சிறிய தவறுகளையும் பெரிதுபடுத்திப் பேசி விமரிப்பார்கள். வேலையில் நேரும் தவறுகளை அனுதாபத்துடன் நோக்குவார்கள் என்ற சுயநலம் காரணமாக, நாளாவட்டத்தில் இந்த நல்ல பிள்ளை வேடம் ஒரு சிறையாகி, அவன் அந்தச் சிறையில் அடைபட்டுப் போனான்.

ரகுவிடம் ஸ்கூட்டர் இருந்தது. ஆனால் என்ன பிரயோசனம்? இதுவரை ஒரு நாளாவது ஒரு பெண்ணுக்காவது லிஃப்ட் கொடுத்ததில்லை. தடிதடியான ஆண்கள்தான் அவனுடைய பிலியனில் உட்கார்ந்து அதைத் தேய்த்து வருகிறார்கள். இந்தச் சியாமளா ஒரு நாளாவது அவனுடைய பிலியனில் உட்கார்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஹூம், அவன் துரதிர்ஷடம் அவன் நகரின் தென்கோடி என்றால் அவள் வட கோடி. எப்படி லிஃப்ட் கொடுக்கிறதென்று சகஜமாய்க் கேட்பது. அவளும்தான் அதை எப்படி சகஜமாய் ஏற்றுக் கொள்வாள்.

தற்செயலாக ஒரு நாள் அவளுக்கு லிஃப்ட் கொடுக்கிறார்ப் போல சந்தர்ப்பம் வாய்த்தது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் (அல்லது துணிச்சல் போதாமல்) அவன் நழுவ விட்டான். ஒரு நாள் அவன் ஆபிஸை விட்டு வரும் போது அவள் – சியாமளா – அவன் திசையைச் சார்ந்த பஸ் ஸ்டாண்டிலேயே நின்றிருப்பதைப் பார்த்தான். இதயம் வேகமாகப் படபடக்க, ஸ்கூட்டரின் வேகத்தைக் குறைத்தான். உடனே வீட்டுக்குத்தானே? என்ற குரல்- திடுக்கிட்டுத் திரும்பினான். சியாமளாவுக்குச் சில அடிகள் முன்னால் நின்றிருந்த மோகன் தென்பட்டான். அவன் அட்மினிஸ்டிரேஷனில் இருந்தான். நெருங்கின சிநேகிதம் கூட இல்லை. எப்போதாவது வராந்தாக்களில் சந்தித்துக் கொள்ளும் போது குசலம் விசாரித்துக் கொள்வார்கள். அவ்வளவுதான். ‘என்னைக் கொஞ்சம் ஒடியனுக்கு பக்கத்தில் டிராப் பண்ண முடியுமா?’ என்றான் மோகன். ஒரு பப்ளிக் ரிலேஷன்ஸ் புன்னகையுடன். மடையன் இவனுக்காகத்தான் நான் நிறுத்தினதாக நினைக்கிறான்! என்று மனதுக்குள் அலுத்துக் கொண்டவாறு, ரகு அவனை உட்காருமாறு சைகை செய்தான்.

ஒடியனுக்குச் செல்லும் வழி எல்லாம் ரகு சியாமளாவையே நினைத்துக் கொண்டு சென்றான். பின்னால் உட்கார்ந்திருந்த மோகன் ஏதோ சளசளத்துக் கொண்டு வந்தான். அதொன்றும் இவன் நினைவில் பதியவில்லை. ‘சே, நான் ஒரு கோழை’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான். அதனால் தான் இந்த மோகன் என்னிடம் பேச்சுக் கொடுத்தும் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு அந்தக் கணத்தின் சவாலிலிருந்து அவசரமாக நழுவி ஓடி வந்தேன். இவனைப் பார்த்ததும் பாராததுபோல நடித்து நான் அவளிடமே சென்று ஸ்கூட்டரை நிறுத்தியிருக்க முடியாதா என்ன? சே! நான் ஒரு முட்டாள்.

ஒடியனில் மோகனை இறக்கியதும் அங்கிருந்து மறுபடி ஆபிஸ் ஸ்டாபிங்குக்குத் திரும்பி வந்தான். ஒருவேளை சியாமளா இன்னமும் அங்கேயே நின்று இருப்பாளோ என்ற நப்பாசையுடன். ஆனால் அவளை அங்கே காணோம். வாய்ப்புகள் மீண்டும் மீண்டுமா வரும்?

எங்காவது சினிமா, கச்சேரி, டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளிலோ கோவில் ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களிலோ சியாமளா தற்செயலாக எதிர்ப்பட்டாளானால் எவ்வளவு நன்றாகயிருக்கும்! அப்படி நடந்தால் அவளிடம் என்ன பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அவன் விஸ்தாரமாக யோசித்து வைத்திருந்தான். ஆனால் அப்படி எங்கேயும் அவள் கண்ணில் தட்டுப்படவில்லை. சரி, அவளுடைய நடமாட்டமெல்லாம் அவளுடைய ஏரியாவில் தான் போலும் என்று நினைத்து விடுமுறை நாட்களில் அவளுடைய ஏரியாவுக்குச் சென்று அங்கிருந்த கடைத்தெரு, கோவில், பார்க் ஆகியவற்றை ரெகுலராக வலம் வந்து பார்த்தான். ஆனால் அதுவும் பிரயோசனப்படவில்லை. அங்கேயும் அவள் எங்கும் தட்டுப்படவில்லை.

பாவம் வீட்டில் அளவு மீறிய கண்டிப்புப் போலிருக்கிறது எங்கும் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை போலிருக்கிறது என்று நினைத்து அவன் அவளுக்காக அனுதாபப்பட்டான். அவளை அவன் காப்பாற்ற வேண்டும். ஆனால் அதற்குமுன் தன்னையே தன் கோழைத்தனத்திலிருந்து அவன் மீட்டாக வேண்டும். ஈசுவரா! இதென்ன சோதனை (காதலில் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக அவன் கடவுள் பக்தனாகவும் மாறிப் போயிருந்தான்) செக்‌ஷனில் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறாள். ஆனால் அவளிடம் இரண்டு வார்த்தை பேச, ஈசுவரா எனக்கு நீ துணிச்சலை அருள மாட்டேன் என்கிறாயே!’

இன்னொரு நாள், கம்பெனியின் டைரக்டர்களில் ஒருவர் இறந்து விட்டதால் பகல் பன்னிரண்டு மணிக்கெல்லாம் ஆபிஸை மூடிவிட்டார்கள்.

கிட்டத்தட்ட ஒரு முழு நாள் ரகுவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சியாமளாவும் அன்றைக்கு வரவில்லை.

ஸ்கூட்டரில் உட்கார்ந்து மெல்ல ஆபிஸ் கேட்டுக்கு வெளியே வந்தான். காலியாக இருந்தது பஸ் ஸ்டாண்டு.

இல்லை; முழுதும் காலியாக இல்லை. ஒரே ஒரு ஆள்…..ஒரு பெண்…நளினி!

அவன் அவளைப் பார்த்த கணத்தில் அவளும் அவனைப் பார்த்தாள். சட்டென்று அவனுள் இரக்கம் சுரந்தது. பலவீனமானவர்களையோ அங்கஹீனர்களையோ பார்க்கும்போது ஏற்படுவது போன்ற இரக்கம். சட்டென்று அவளருகே சென்று ஸ்கூட்டரை நிறுத்தினான். ‘வீட்டுக்குத்தானே?’ என்று கேட்டான்.

‘உம்’ என்றாள் அவள்.

‘கம் ஆன், ஐ வில் ட்ராப் யூ’ அவன் இருந்த ஏரியாவுக்குப் பக்கத்தில் தான் அவள் வசித்தாள்.

‘நோ, இட்ஸ் ஆல் ரைட்’ என்று அவள் அங்கேயே அப்படியே நின்றாள்.

‘நானும் அங்கே தான் போகிறேன்….நோ பிராப்ளம்’

‘இல்லை….வேண்டாம்…’

அவளுடைய ஆணித்தரமான மறுப்பு அவனுக்கு அதிர்ச்சி அளித்தது. இது அவன் எதிர்பாராதது. பிச்சைக்காரனுக்குப் போட்ட காசை அவன் நம் மீதே திருப்பி எறிந்தாற் போன்ற உணர்ச்சி…. ஒரு எரிச்சல். ஒரு கோபம். வெயிலில் நிற்கிறாளே, போனால் போகிறதென்று இரக்கம் காட்டினோம். ரொம்பத்தான் ராங்கியடித்துக் கொள்கிறாள்! அப்படி தன்னிடம் என்ன பெரிதாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்? ஸ்டுபிட் கேர்ல்…

ரகுவுக்கு நிற்பதா போவதா என்று தெரியவில்லை. அவனையும் அறியாமல் ஒரு கெளரவப் பிரச்னையில் அவன் சிக்கிக் கொண்டுவிட்டான். இவள் – இந்த அவலட்சண சொரூபம் – அவனுக்கு ‘இல்லை’ சொல்வதா? அவன் இன்னொரு தடவை அவளை அழைத்தான். பலன் விபரீதமாகியது. ‘ப்ளீஸ், டோன்ட் டிஸ்டர்ப் மீ!’ ….எனக்கு இதெல்லாம் பிடிக்காது’ என்றாள் படபடவென்று.

ரகுவுக்கு எரிச்சல் தாளமுடியாமல் போயிற்று. இவளை அவன் பலாத்காரம் செய்யப் போவதாக நினைக்கிறாளா என்ன – இவளை! போயும் போயும் இவளை! ‘லிஸன், வெயிலாயிருக்கிறதே, வீணே இங்கு சிரமப்பட வேண்டி வருமே, நான் அந்தப் பக்கம் போவதால் அழைத்துச் செல்லலாமே என்ற நல்லெண்ணத்துடன் தான் கேட்டேன்….இது தப்பென்றால் வெரி ஸாரி’ என்று அவனும் படபடவென்று சொல்லிவிட்டு ஸ்கூட்டரை கிளப்பிச் சென்றான்.

பிறகு அன்றைய எஞ்சிய பொழுதெல்லாம் அந்தச் சம்பவம் மனதில் குடைந்த வண்ணமிருந்தது. ‘சே, நான் செய்தது மடத்தனம்… தான் அழகற்றவள் என்கிற எண்ணம் அவள் மனதில் ஆழப்பதிந்து, பல காம்ப்ளெக்ஸ்களை உருவாக்கியிருக்கும். தானும் ஒரு கிள்ளுக்கீரையல்ல எனக் காட்ட விரும்பினாளாக்கும். பாவம்….அல்லது என் அழகிய தோற்றம் அவளுள் குரோதத்தையும், பொறாமையையும் தூண்டி என் மீது வெறுப்பை உமிழச் செய்திருக்கலாம். அழகின் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுகோல்கள், மனித ரசனையின் அடிப்படைகள் ஆகிய எல்லாவற்றின் மீதும் அவளுள் கனன்று கொண்டிருந்த வெறுப்பு.

அவனுடைய அழைப்பு தற்செயலானது. நோக்கமில்லாதது என நுட்பமாகப் புரிந்து கொண்ட, அந்த அழைப்பையே ஒரு திரஸ்கரிப்பாகக் கண்ட, வெறுப்பு, ஆமாம்; அவன் உண்மையில், தன்னுடன் வருமாறு அழைக்க விரும்பும் சியாமளாவிடம், ‘ஹலோ’ சொல்லக் கூட அவனுக்குத் தைரியம் வருவதில்லை. ஆனால் நளினியிடம் அவனுக்கு எவ்வித ஆசையும் இல்லாததால் தைரியமாகப் பேச முடிந்தது. இதெல்லாம் அவளுக்குத் தெரியாமலா இருக்கும்?

மறுநாள் ஆபிஸில் தன் ஸீட்டில் உட்காரவே பிடிக்காமல் யார் யாரையோ பார்க்கப் போகிற சாக்கில் அவன் இங்குமங்குமாக வளைய வந்து கொண்டிருந்தான். தன் சீட்டில் உட்கார்ந்த சொற்ப நேரத்திலும் நளினி, சியாமளா இருந்த திசையில், பார்ப்பதைக் கவனமாக தவிர்த்தான். அப்படி இருவர் அந்த செக்‌ஷனில் இருப்பதையே மறந்துவிட அவன் முயன்றான். சே, இந்தப் பெண்களும் அவர்களுடைய வக்கிர புத்தியும்….போதும், போதும்!

இடைவேளைக்குச் சில நிமிடங்கள் முன்பாக ரங்கசாமி, அவனைக் கூப்பிட்டு அனுப்பினார். சென்றான்.

‘உட்கார்’ என்றார்.

உட்கார்ந்தான்.

‘எப்படியிருக்கிறாய் ரகு?’

‘ஃபைன், ஸார்’

‘வேலையெல்லாம்?’

‘கெட்டிங் ஆன் ஸார்’

‘உம்….என்று அவர் சற்று யோசித்தார். பிறகு ‘உனக்கெதிராக ஒரு புகார் வந்திருக்கிறது’ என்றார்.

அவன் திடுக்கிட்டு அவரைப் பார்த்தான்.

‘அஃப்கோர்ஸ், எந்தப் புகாரையும் நான் முழுவதுமாக நம்பி விடுவதில்லை. யாரும் யாரைப் பற்றியும் எது வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லவா? அதே சமயத்தில் இந்த செக்‌ஷனில் தலைமை அதிகாரி என்ற முறையில் எனக்கு சில கடமைகள் உண்டு…என்ற பீடிகைக்குப் பிறகு அவர் விஷயத்துக்கு வந்தார்.

‘இன்று காலை நளினி என்னிடம் வந்திருந்தாள். நீ அடிக்கடி ஆபிஸ் நேரத்துக்குப் பிறகு அவளைப் பின் தொடர்கிறாயாம். சினிமாவுக்குப் போகலாம் ஹோட்டலுக்குப் போகலாம் என்று தொந்தரவு செய்கிறாயாம்… விசித்து விசித்து அழத் தொடங்கியும் விட்டாள். அவளைச் சமாதானப் படுத்துவது பெரும்பாடாகிவிட்டது.

‘ஸார், ஸார். அவ்வளவும் பொய்’ என்று அவன் பதறினான். ‘அப்படியெல்லாம் நான் பேசவேயில்லை.’ என்றவன். முந்தின நாள் நடந்த சம்பவத்தை விவரித்தான். ‘அவ்வளவுதான் ஸார் நடந்தது; நேற்றுத்தான் முதல் தடவை…என் மனதில் எவ்விதமான கெட்ட நோக்கமும் இருக்கவில்லை…ப்ராமிஸ் ஸார்!’ இது தான்…இவ்வளவு தான் நடந்தது..’

ரங்கசாமியின் விரல்கள் மேஜையின் மேல் தாளம் போட்டன. ‘வெல்… இதைப்பற்றி நான் பெரிய விசாரணை எதுவும் மேற்கொள்வதாக இல்லை. நீ சொல்வது உண்மையாக இருக்கலாம். அவளுடைய பயமும் நியாயமாயிருக்கலாம்…அவள் என்னிடம் வந்து சொன்னதால் உன்னைக் கூப்பிட்டேன். மற்றபடி ஆபிஸ் நேரத்துக்கு வெளியே….வெல் நீங்களெல்லாம் வயது வந்தவர்கள்’

‘ஷீ இஸ் எ ஸைக்கலாஜிகல் கேஸ் ஸார்’ என்று அவன் படபடத்தான். அவர் அவனை அமைதியாயிருக்குமாறு சைகை செய்தார். ‘இந்த ஆராய்ச்சியில் எல்லாம் இப்போது நாம் இறங்க வேண்டாம். எப்படியோ இந்தச் சம்பவம் உனக்கு படிப்பினையாக இருக்கட்டும். பீ கேர்ஃபுல் இன் ஃப்யூச்சர்…தட்ஸ் ஆல். தாங்க் யூ’

தன் சீட்டுக்கு திரும்பிய அவனுக்கு நளினியின் மீது ஆத்திரம் பொங்கியது. அப்படியே அவள் கழுத்தை நெரிக்கலாம் போல….ஆனால் இவள் பொருட்டு எதற்காக இத்தகைய உணர்ச்சி விரயம் என்றும் நினைத்து அவன் தன்னைச் சுதாரித்துக் கொள்ள முயன்றான். அவள் ஒரு மனோதத்துவ கேஸ் என்பது தான் தெரிந்தாகிவிட்டதே! காதலுக்கு ஏங்கும் மனதின் இதமான ஜோடனைகள்…சே! இரக்கம் காட்டுவது எத்தகைய ஆபத்தில் கொண்டு விடுமென்பதற்கு இவள் ஒரு உதாரணம்… பச்சையான சுயநலமியாக இருந்தால் தான் வாழ்க்கையில் உருப்படலாம்….. மனம் தான் வேண்டுவதை ஒளிவு மறைவின்றி நிறைவேற்றிக் கொள்ளுதலே இயற்கையானது, ஆரோக்கியமானது. ஆமாம், சியாமளாவை நான் விரும்புவதும் நளினியை வெறுப்பதும் ஆரோக்கியமானது…. இது குறித்து நான் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. அழகுடன் அழகு சேர்வது தான் நியதி. எனக்குச் சியாமளா, சியாமளாவுக்கு நான் என்பது வெறும் கனவல்ல. இயற்கை வகுத்த நிஜம் என்பதை இந்த நளினி உணரட்டும்! நன்றாக வயிறெறியட்டும், பொறாமைத் தீயில் வெந்து சாகட்டும்! அழகற்றவர்கள் அனுதாபத்துக்குரியவர்கள் அல்லாவர்கள் பெருக்கி எறியவேண்டிய குப்பைகள், அழிக்கப்பட வேண்டிய எதிரிகள்!...

தினசரி அவனுள் ஆத்திரம் அதிகரித்துக் கொண்டே வந்தது. எதையோ நிரூபிக்கும் ஆத்திரம். பழிவாங்கும் ஆத்திரம்.

இப்போதெல்லாம் சியாமளா எதிரே வரும் போது அவன் தலையைத் தாழ்த்திக் கொள்வதில்லை. அலுவலக வேலையாக அவளுடன் பேச வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்தால் அவற்றை நன்கு பயன்படுத்தத் தவறுவதில்லை…

ஒரு நாள் ஆபிசை விட்டு அவன் வெலியே வரும் போது அவனுடைய திசையில் செல்கிற பஸ்ஸுக்காக சியாமளா நிற்பதைப் பார்த்தான். அவன் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த வேளை…!

இதயம் படபடக்க அதைக் காட்டிக் கொள்ளாமல் ஸ்கூட்டரை அவளருகே கொண்டு போய் நிறுத்தினான். ‘கான் ஐ ட்ராப் யூ ஸம்வேர்?’ என்றான்.

‘நோ தாங்க்ஸ். டோன்ட் பாதர்’

‘நோ பாதரேஷன். பஸ்ஸில் கூட்டமாயிருக்குமே! ஏறக் கூட முடியாது, இந்நேரத்தில்!’

‘பரவாயில்லை…. கூட்டமாயிருந்தாலும் பஸ்ஸில் பயமிருக்காது’

அவனுக்கு அவள் சாதாரணமாய்ச் சொல்கிறாளா அல்லது பொடி வைத்துப் பேசுகிறாளா என்று தெரியவில்லை. ஒரு வேளை இவளிடமும் நளினி ஏதாவது? தமாஷ் பண்ணிச் சமாளிக்க முயன்றான். ‘என் ஸ்கூட்டரிலும் பயமில்லை…. ரொம்ப ஸ்லோவாய்த்தான் போவேன்’

‘ரொம்ப ஸ்லோ தான், தெரியும்’ என்றாள் அவள். நளினியைத் தாண்டி என்னிடம் வர இத்தனை நாள் பிடித்திருக்கிறது.’

‘லுக்’ என்று அவன் முகம் சிவந்து போனவனாய் நளினியைப் பற்றி படபடக்கத் தொடங்கினான். ‘நான் அவளை வெறுமனே லிஃப்ட் கொடுக்க நினைத்துத் தான் கூப்பிட்டேன். ஆஸ் எ கலீக்… அவள் உடனே இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டிப் பரப்பி வருகிறாள், என்னைப் பத்தி…’

‘ஆனால், இத்தனை நாளிலே ஒரு தடவை கூட என்னை இப்படி நீங்க கூப்பிட்டதில்லை. ஆச்சரியமா இருக்கு….நானும் உங்க கலீக் தானே?’

அவள் ஏதோ சொல்ல வாய் எடுத்தான். ஆனால் அவள் ஒரு ராணியின் தோரணையுடன் அலட்சியமாக அவனைக் கையமர்த்தி தொடர்ந்து பேசினாள். ‘உங்க பிஹேவியரே வேடிக்கையா இருக்கு மிஸ்டர் ரகு…முன்னெல்லாம் நான் எதிர் வந்தால் என் மூஞ்சியைக் கூட பார்க்காமல் போகிறது உங்க வழக்கம். இப்ப திடீர்னு லிஃப்ட் கொடுக்கறேங்கிறீங்க? வாட் இஸ் ஆன் யுவன் மைண்ட்?’ நளினி கூட ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாடிங்க் ஆனவுடனே எங்கிட்ட வந்து நிக்கறீங்க. அப்படித்தானே?’ ஏதோ இங்கே எல்லாரும் உங்களுக்காகத் தான் தவம் கிடக்கிற மாதிரி!’ நான் நம்பர் டூவாக இல்லை, நம்பர் ஒண்ணாக இருக்கத்தான் விரும்பறேன்…’ அண்டர்ஸாண்ட்?’

அவள் பேசி முடித்து சில அடிகள் தள்ளி நின்று கொண்டாள். அவனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென வெளியுலகத்துக்கு தெளிவாக்க விரும்பியவள் போல.

ரகு இடிந்தவனாய் ஸ்கூட்டரைத் தள்ளியவாறு மெல்ல நடக்கத் தொடங்கினான். வழியில் ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை. ஸ்கூட்டரை நிறுத்தி வைத்து, ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்தான். அங்கேயே நடைபாதையில் அமர்ந்து சிகரெட்டை மெல்ல ரசித்துக் குடிக்கத் தொடங்கினான். சாலையில் நடந்து சென்றவர்கள் ஒரு விசித்திரப் பிறவியைப் பார்ப்பது போல அவனைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். அந்த பார்வைகள் அவனை ஒரு கதாநாயகனாக உணரச் செய்ய அவன் தொடர்ந்து அப்படியே அதே நிலையில் உட்கார்ந்திருந்தான்.

தினமணி கதிர் - 23.1.1981

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com