புரிந்தது

ரோஸியின் மாலை நேரக் கடமை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருந்தது. காப்டனுக்கு அவள் உடம்பு மிதித்து விடும்போது சில சமயம் அவர் சிடுசிடுப்பார்
புரிந்தது

ரோஸி அப்படிச் செய்வாளென்று யாரும் நினைக்கவில்லை. உண்மை எதிரே வந்து மோதிய போது ஒவ்வொருவர் மனத்திலும் ஆத்திரம் பொங்கியது. நன்றி கெட்ட பெண்! வளர்த்து ஆளாக்கியவர்கள் முகத்தில் கரியைப் பூசி விட்டுப் போய் விட்டாளே!
அந்த வீட்டில் எடுபிடி வேலை செய்யும் பெண்ணாகவா ரோஸியை நடத்தினார்கள்? கிறிஸ்துமஸ், ஈஸ்டர்- எந்தப் பண்டிகை வந்தாலும் ரோஸிக்கு புது டிரெஸ் வாங்காமல் இருக்க மாட்டார்களே! அவளை ஸ்கூலில் சேர்த்து அவள் நன்றாகப் படித்து முன்னேறுவதற்கு எல்லா வசதியும் செய்யவில்லையா? சுமை புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கிக் கொடுத்து பஸ் பாஸுக்குப் பணம் கொடுத்து அவளுடைய படிப்பில் எப்படியெல்லாம் அக்கறை காட்டி வந்தார்கள்.
ரோஸி வேலையை முடித்தாலும் சரி, முடிக்காவிட்டாலும் சரி, பள்ளிக்கூட நேரத்துக்குச் சரியாக பஸ்ஸைப் பிடிப்பதற்கு தயாராகி விட வேண்டும். சிறிது தாமதமானாலும் மேரி அம்மாள் குரல் கொடுப்பாள். ‘ரோஸி ஏன் மச மசன்னு நின்னுகிட்டிருக்கே? ஸ்கூலுக்கு நேரமாகல்லே! பஸ் போயிடுச்சுன்னா அப்புறம் ஸ்கூலுக்கு லேட்டா போய் நிப்பே உம்! கிளம்பு சீக்கிரம்!” - தன் கையாலேயே ரோஸிக்குத் தலை வாரி ரிப்பன் கட்டி அழகு பார்த்து அனுப்புவாள் மேரி அம்மாள்.
அனாதையாக வீட்டுக்கு வந்த பெண்ணுக்குத் தாயும் தகப்பனுமாக இருந்தவர்கள் மேரி அம்மாளும், காப்டன் டேனியலும், அவ்வளவெல்லாம் அன்பைப் பொழிந்தவர்களுக்கு துரோகம் செய்து விட்டுப் போக ரோஸிக்கு எப்படி மனம் துணிந்தது? அவள் அவ்வளவு கல் நெஞக்காரி என்று யார் தான் அவளைப் பற்றி நினைத்திருக்க முடியும்.?
மென்மையான மலர் போன்று இருந்தவள் ரோஸி, அவள் அதிர நடந்து யாரும் கண்டதில்லை. குரலை உயர்த்திப் பேசி யாரும் கேட்டதில்லை. அவளுடைய களங்கமற்ற குழந்தை முகத்தில் இனிய புன்னகை எப்போதும் தவழ்ந்து கொண்டிருக்கும். அமைதியாக, அடக்க ஒடுக்கமாக, ஒவ்வொன்றும் செய்து கொண்டிருப்பால். அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி யார் தான் தப்பாக நினைக்க முடியும்?
ஜானகி தான் முதன் முதலில் தியாகுவுக்குக் கோடி காட்டினாள். ஏதோ உள்ளுணர்வு அவளுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.
“ நீங்க கவனிச்சீங்களா? ரோஸி எப்பவும் போல இல்லை. அவளோட பார்வை எப்படியெப்படியோ எங்கெங்கயோ போகுது.
தியாகுவும் கவனித்தான். காலையில் வீட்டு முன்புறத்தைக் கூட்டும் போதும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் போதும் ரோஸியின் விழிகள் எதிர் வீட்டுப் பக்கம் அலையத்தான் செய்தன. அந்த நேரத்துகுச் சரியாக எதிர் வீட்டுக் குமார் ஸ்கூட்டரைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வந்து விடுவான். ஆனால் அவன் நொடிக்கொரு தரம் ரோஸியைத் திரும்பிப் பார்ப்பது மட்டுமில்லை. அர்த்தம் நிறைந்த புன்னகை புரிவதும் சைகைகள் செய்வதுமாக ரோஸியுடன் ஏதேதோ சங்கேத உரையாடல் நடத்தினான். என்று தியாகுவுக்குத் தோன்றியது.

ரோஸி அப்போது பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். வீட்டு வேலை உண்டு, படிப்பு உண்டு என்று இருந்த பெண்ணை குமார் வீணாக வம்புக்கு இழுத்து அவளது மனதைக் கலைத்துக் கொண்டிருந்ததை நினைத்து தியாகுவுக்கு கோபமே வந்தது.

குமார் படிப்பை மூட்டை கட்டி வைத்து எத்தனையோ ஆண்டுகளாகியிருந்தன. வீட்டுக்கு ஒரே பிள்ளை. பெற்றோர் அவனுக்கு அளவுக்கு மிஞ்சி செல்லமும் சலுகைகளும் கொடுத்து அவனைத் தறுதலையாக்கி வைத்திருந்தார்கள். வசதி படைத்தவர்கள். தங்கள் பிள்ளை படிக்க வேண்டும். உத்தியோகம் பார்க்க வேண்டும். என்று அவர்கள் கவலைப்படவில்லை. குமாரும் ஏதேதோ பட்டறைகளில் தொழில் கற்றுக் கொள்வதாகச் சொல்லிக் கொண்டு ஸ்கூட்டரில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.

அப்படிப்பட்ட உதவாக்கரைப் பையன் விரித்த வலையில் ரோஸி விழுந்து விடக்கூடாதே என்று கவலைப்பட்டனர் ஜானகியும், தியாகுவும்.

ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த காப்டன் டேனியலும் அவர் மனைவி மேரியம்மாளும் பல வருஷங்களாக தியாகு தம்பதியருடன் மனம் விட்டுப் பழகிக் கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரர்கள். இரண்டு வீடுகளுக்கும் இடையே இருந்த முள் வேலியருகே நின்று கொண்டு மேரியம்மாள் ஜானகியுடன் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பாள். வெகுளி. தன்னுடைய சுக துக்கங்கள் ஒன்று விடாமல் அவள் ஜானகியுடன் பகிர்ந்து கொள்ளத் தவறுவதில்லை.

ஓய்வு நேரத்தை வீணாக்காமல் காப்டன் டேனியல் ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி ஆபீஸராகப் பணியாற்றி வந்தார். அந்தத் தம்பதிக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண். பிள்ளை தாமஸ் ஏர்ஃபோர்ஸில் ஆபீஸராகச் சேர்ந்து பம்பாயில் இருந்தான். பெண் ஜூலி ஒரு டாக்டருக்கு வாழ்க்கைப்பட்டு, கணவனுடன் ஸ்டேட்ஸில் இருந்தாள். தனித்துவிட்ட டேனியல் தம்பதிக்கு ரோஸி சொந்தப்பெண்ணுக்குச் சமமாக வீட்டில் இருந்தது மனநிறைவை அளித்தது.

ஆறு வருஷங்களுக்கு முன்பு தியாகுவும் ஜானகியும் அங்கே குடி வந்த சமயத்தில் ரோஸி பத்துப் பதினோரு வயதுச் சிறூமியாயிருந்தாள். ஃபிராக் மட்டும் அணிந்து குடுகுடுவென்று அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பாள். பள்ளிக்கூட நேரம் வந்ததும் வேறு நல்ல ஃபிராக் அணிந்து கொண்டு பரக்க பரக்க பஸ்ஸைப் பிடிக்க ஓடுவாள். அதே ரோஸி இந்த ஆறு வருஷத்தில் எப்படி மதமதவென்று வளர்ந்து விட்டாள்!

காப்டனின் வீட்டு வெளி வராந்தாவில் பழைய காலத்து மரக்கட்டில் ஒன்று மெத்தை தலையணை சகிதம் நிரந்தரமாகப் போடப்பட்டிருந்தது. பகல் நேரங்களில் மேரியம்மாள் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் அதில் வந்து தலையைச் சாய்த்துக் கொள்வாள். ஆனால் மாலை நேரத்தில் அதன் ஏகபோக உரிமை காப்டனுக்குத் தான். தமது வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்து தேநீர் அருந்தியதும் காப்டன் இடுப்பில் லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு வெற்றுடம்புடன் அந்தக் கட்டிலே தஞ்சமென்று அதில் மல்லாந்து படுத்து விடுவார்.

ரோஸியின் மாலை நேரக் கடமை அப்போது துவங்கும். காப்டனுக்கு உடம்பு பிடித்து விடும் வேலை. அவருடைய பாரி சரீரத்துக்கு ரோஸியின் கைகளால் அமுக்கி விட்டால் எப்படிப் போதும்! அவரது உடம்பின் மீதே ஏறி நின்று கால்களால் மிதித்தால் தான் இதமாக இருக்கும் அவருக்கு. விட்டத்து வளையத்தில் கட்டப்பட்டு தொங்கிய ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு ரோஸி அவருடைய உடம்பின் மீது அங்குமிங்கும் நடந்து தேவைப்பட்ட இடங்களில் அழுத்தி மிதிக்கும் போது காப்டன் “அப்பா! அப்பப்பா!” என்று அவ்வப்போது கூறிக்கொண்டு அந்த இதத்தை ரசித்துக் கொண்டிருப்பார்.

ஒருநாள் மாலை  வழக்கப் போல் ரோஸி காப்டனுக்கு உடம்பு மிதித்துக் கொண்டிருந்த போது மேரியம்மாள் கூச்சலிட்டது தியாகுவுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது.

“ஏ ரோஸிப்பொண்ணே! உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? இன்னமும் பாதித் தொடை தெரியும்படியா ஃப்ராக்கைப் போட்டுக்கிட்டு உடம்பு மிதிக்கறயே! பாவாடை தாவணி எதுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன்! எடுத்துக் கட்டிக்கிட்டு வந்து அப்புறம் மிதி. ஓடு!”

“ரோஸி போன வாரம் தான் பெரிய மனுஷி ஆனாளாம். மேரியம்மாள் எனக்குச் சொன்னாள்!” என்று தியாகுவின் காதில் கிசுகிசுத்தாள் ஜானகி.

ரோஸியின் மாலை நேரக் கடமை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருந்தது. காப்டனுக்கு அவள் உடம்பு மிதித்து விடும்போது சில சமயம் அவர் சிடுசிடுப்பார் - “ ஏ ரோஸி! இப்படி பெரளறாப்பல பாவடை கட்டிகிட்டா மூஞ்சியில கிச்சுகிச்சு மூட்டறாப்பல இருக்கு. தும்மல் கூட வந்திடுது!”

இந்தத் தொந்திரவைத் தவிர்ப்பதற்காக ரோஸி பாவாடை விளிம்பைத் தூக்கிச் செருகிக் கொண்டு காப்டனுக்கு உடம்பு மிதித்து விடுவாள். அவளுடைய பாதம் பட்டு உடம்பு வலி விட்டுப் போகும் இதத்தைக் கண்களை மூடி ரசித்துக் கொண்டிருப்பார் காப்டன்.

இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகுதான் ரோஸியின் கண்கள் எங்கெங்கோ அலைபாய்வதை ஜானகி தியாகுவுக்குச் சுட்டிக் காட்டும் நிலை உருவாயிற்று. எதிர் வீட்டுக் குமாருடன் அவள் நடத்திய கண் ஜாடை உரையாடல்கள் ஒருபடி மேலே போய் ரகசியச் சந்திப்புக்கும் வழிவகுத்து விட்டன!

தியாகுவும் ஜானகியும் ஒருநாள் மாலையில் மார்கெட்டுக்குப் போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு மரத்தடியின் இருண்ட பகுதியில் இரண்டு உருவங்கள் நின்று ரகசியமாக உரையாடிக் கொண்டிருப்பதைக் கவனித்தனர். ரோஸியும், குமாரும் தான்!

இது எங்கே கொண்டு போய் விடுமோ என்று கவலைப்பட்டாள் ஜானகி. மேரியம்மாளிடம் சொன்னால் அந்த அனாதைப் பெண்ணை அடித்து துரத்தி விடப் போகிறாளோ என்ற பயம் அவளுக்கு. அப்படி ஒரு பாவத்தைக் கட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை. அதே சமயம் அந்த தறுதலைக் குமார் அந்த அறியாப் பெண்ணை மோசம் செய்து விடக் கூடாதே என்றும் அவள் கவலைப்பாட்டாள். தியாகுவிடம் அவள் தன் கவலையைத் தெரிவித்த போது. தியாகு, “ இந்த ஊர்க்கவலையெல்லாம் உனக்கெதுக்கு? நம்ம பாடு தலைக்கு மேல கிடக்கு!” என்று அலட்சியமாகக் கூறி விட்டான்.

இதற்கு ஒருமாதத்துக்குள் அது நடந்து விட்டது. பெற்ற தாய் தந்தையர்களுக்கும் மேலாக இருந்தவர்களைத் தூக்கியெறிந்து விட்டு உதவாக்கரை குமாருடன் எங்கோ மறைந்து விட்டாள் ரோஸி.

“நன்றி கெட்ட, கழுதை! கெட்டழிஞ்சிட்டு மறுபடியும் இவங்க கிட்டத்தான் வந்து நிக்கப் போகுது” எப்று குமுறினாள் ஜானகி.
ஆனால் மேரியம்மாளோ, காப்டன் டேனியலோ அவளைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அந்த நன்றி மறந்த செயலுக்கு விளக்கம் தேவை இல்லையென்று இருந்து விட்டார்களோ?

இது நடந்து ஒரு வருஷத்துக்கு மேல் ஓடி விட்டது. ஜானகியும், தியாகுவும் தீவுத் திடலில் நடந்த சுற்றுலா கண்காட்சிக்குப் போயிருந்த போது தற்செயலாக ரோஸியைச் சந்தித்தனர். நிறைமாத கர்ப்பிணியாயிருந்த அவளுடன் குமாரும் வந்திருந்தான். இருவரும் வெட்கப்பட்டுக் கொண்டு கூட்டத்துள் மறைந்து விட முயற்சி செய்யவில்லை. தாங்களாகவே அவர்களருகில் வந்து வணக்கம் தெரிவித்தனர்.
“நல்லா இருக்கியா ரோஸி?”
“ ரொம்ப நல்லா இருக்கேம்மா” என்று கூறிய ரோஸி சற்றுத் தயங்கிய பிறகு கூறினாள்- “எங்க வீட்டுக்கு நீங்க ரெண்டு பேரும் கட்டாயம் வரணும். புதுப்பேட்டை நடுத்தெரு, ஆறாம் நம்பர்ல இருக்கோம்.”

ஆவல் உந்தித் தள்ள மறுநாளே தியாகுவை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள் ஜானகி. வீட்டை அவர்கள் வைத்துக் கொண்டிருந்த விதமும், அவர்களை உபசரித்த விதமும் இருவரையும் பிரமிக்க வைத்தன.

குமாரா இப்படி மாறி விட்டான்? ரோஸி போட்ட சொக்குப் பொடியின் மகிமையா?

“சொந்தப் பட்டறை ஆரம்பிச்சிருக்காரம்மா. நல்ல வருமானம்!” என்றாள் ரோஸி.
“கலியாணம் எப்போ ஆச்சு!”

“அப்பவே பதிவுத் திருமணம் செய்துகிட்டோம். யாரு என்ன பேசறாங்கன்னு நாங்க கவலைப்படலே. செழிப்பா சந்தோசமா இருக்கோம்” என்று கூறிய குமார். தியாகுவும், ஜானகியும் எவ்வளவு தடுத்தும் கேளாமல் அவர்களுக்கு சிற்றுண்டி வாங்கி வர ஸ்கூட்டரில் விரைந்து சென்றான்.

“இவரோட அப்பா அம்மா இவரோட முகத்திலே முழிக்கிறதில்லேன்னு வைராக்கியமா இருக்காங்க, எத்தனை நாளைக்கு அப்படி இருக்கப் போறாங்களோ தெரியலே!” என்றாள் ரோஸி.

ஜானகி பிடித்துக் கொண்டாள். “வைராக்கியமா இருக்கறவங்க அவங்க மட்டும் இல்லையே! பெத்த மகளுக்குச் சமமா உன்னை வளர்த்தவங்க! என்ன இருந்தாலும்...”

“நீங்க என்ன சொல்ல நினக்கறீங்கன்னு எனக்குப் புரியுதம்மா. நான் நன்றி கெட்டவ- உப்புக்குத் துரோகம் செய்தவ- இப்படித் தான் எல்லோரும் என்னைப்பற்றி பேசறாங்க. ஆனா வயசுப் பொண்ணோட மனசைப் புரிஞ்சுக்க யாருக்கும் தோணலையே? நான் அனாதை தான். அவங்களை நம்பித்தான் வாழ்ந்துகிட்டு இருந்தேன். பெத்த தாய் தகப்பனாருக்குச் சமமா தான் அவங்களை மதிச்சிருந்தேன். அவங்க காலால இட்ட வேலையை தலையால செய்யக் கடமைப்பட்டவ தான் நான். ஆனால் அப்பாவுக்கு தினமும் உடம்பு மிதிக்கிற வேலை... நான் சின்னப் பெண்ணா இருந்த வரைக்கும் சரி. எனக்கு வயசு வந்தப்புறமும்...”

“ரோஸி!”

“யாரையும் நான் தப்பாச் சொல்லலீங்க. ஆனா நான் மரக்கட்டை இல்லையே! வயசுப் பொண்ணோட மனசும், உணர்ச்சிகளும் எனக்கும் உண்டு இல்லையா? அம்மாகிட்டே ஜாடையா சொல்லியும் பார்த்தேன். அந்த உடம்பு மிதிக்கிற வேலை மட்டும் எனக்கு கொடுக்க வேண்டாம்னு. ஆனா அம்மா என்னோட தவிப்பைப் புரிஞ்சுகிட்டாதானே!”

“தவிப்பா! நீ என்ன சொல்லறே ரோஸி!”

“பெத்த தகப்பானாருக்கும் மேலே உன்கிட்டே பாசம் காட்டறாரே. அவருக்காக நீ இது கூடச் செய்யக் கூடாதா?’ அப்படின்னு அம்மா என் வாய் மேல போட்டுட்டாங்க. என் மனசு பட்ட பாட்டை அவங்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும்? அப்பா என்ன தான் வயசில் பெரியவரானாலும் அவரோட உடம்பு ஆம்பிள்ளை உடம்பு தானே! நெருப்பு மேலே நடக்கற மாதிரி தான் நான் அந்த உடம்பை மிதிக்கிற வேலையைச் செய்துகிட்டிருந்தேன். அந்த அரைமணி நேரமும் என்னோட உடம்பில் ஒவ்வொரு அணுவும் அனல் பறக்கறாப்பல நான் தவிச்ச தவிப்பு...! அதை நான் யார் கிட்ட சொல்ல முடியும்? என்னோட தவிப்புக்கு வடிகாலா குமார் எனக்கு வாய்ச்சாரோ நான் பிழைச்சேனோ!” விம்மலினிடையே கூறிய ரோஸியை ஆதரவுடன் அணைத்துக் கொண்டாள் ஜானகி.

தினமணி கதிர்- 03.04.81

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com