40. ஆண்டானை அடியேனை - பாடல் 9

நாரணனாகவும், பிரமனாகவும் பெருமான் விளங்கும் தன்மை குறிப்பிடப்படுகின்றது.

பாடல் 9

பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப் படர்சடை
                                                       மேல் புனல் கரந்த படிறன் தன்னை
நண்ணியனை என்னாக்கித் தன்னானானை நான்மறையின்
                                                                   நற்பொருளை நளிர் வெண்திங்கள்
கண்ணியனைக் கடியநடை விடை ஒன்று ஏறும் காரணனை
                                                                                நாரணனைக் கமலத்து ஓங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே
                                                                                      ஆற்ற நாள் போக்கினேனே

விளக்கம்

பண்ணியான் = ஆக்கியவன். படிறன் = வஞ்சகன், மறைப்பது வஞ்சகர் செய்யும் தொழில் என்பதால் கங்கையைச் சடையில் மறைத்த இறைவனை படிறன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நண்ணியவன் = நெருங்கி நின்று துணையாக இருந்தவன். நளிர் = குளிர்ச்சி.

இந்த பாடலில் நாரணனாகவும், பிரமனாகவும் பெருமான் விளங்கும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு பெருமான் உள்ள நிலை பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.1.1) அப்பர் பிரான், கரியானாகவும் நான்முகனாகவும் பெருமான் திகழும் நிலையினை உணர்த்துகின்றார். பரம்பரை பரம்பரையாக தங்களை பெருமானின் வழிபாட்டில் ஈடுபடுத்திக்கொண்டதில்லை வாழ் அந்தணர்களை இங்கே நினைவுகூர்ந்து, அவர்களது சிந்தையில் திகழும் பெருமான் என்று இந்த பதிகத்தைத் தொடங்கும் அப்பர் பிரான், நமது முயற்சியால் பெருமானை நாம் அறிந்துவிடலாம் என்று நினைத்தால் அவனை நாம் அறியமுடியாது என்றும், அவன் எளிதில் உணரமுடியாத மெய்பொருள் என்றும் இங்கே உணர்த்துகின்றார். இவ்வாறு பல சிறப்புகள் கொண்டவனாக இருக்கும் தில்லைச் சிற்றம்பலவனைப் பேசாத நாட்கள் வீணான நாட்கள் என்று உணர்த்தி, நாம் நித்தம் அவனது புகழினை சிந்திக்க வேண்டும் என்றும் பேச வேண்டும் என்றும், அவனை பணிந்து வணங்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்லும் பாடல்.

அரியானை அந்தணர் தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை
                                                                                                    அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்
                                                                                                தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக்
                                                                                       குலவரையை கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம்
                                                                                                                 பிறவா நாளே

அதிகை தலத்தின் மீது அருளிய ஏழைத் திருத்தாண்டகத்தின் முதல் பாடலில், இந்த செய்தி கூறப்படுகின்றது. பறவைகளின் அரசன் என்று கருதப்படும் கருடனை வாகனமாகக் கொண்ட திருமால் என்றும் பொன் நிறத்தினை உடைய பிரமன் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் இவர்கள் இருவரையும் குறிப்பிடுகின்றார். 
  
வெறிவிரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டத்தானை வெள்ளேற்றினானைப்
பொறி அரவினானைப் புள்ளூர்தியானைப் பொன் நிறத்தினானைப் புகழ் தக்கானை அறிதற்கரிய சீர் அம்மான் தன்னை அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை எறிகெடிலத்தானை இறைவன் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே.

பொழிப்புரை

எல்லாப் பொருட்களையும் ஆக்கியவனும், பசுமையான கொடி போன்று உடல் அமைப்பினைக் கொண்ட பார்வதி தேவியைத் தனது உடலின் ஓர் பாகத்தில் வைத்தவனும் படர்ந்த தனது சடையில் கங்கை நங்கையை மறைத்து வைத்து வஞ்சகர்கள் செய்யும் செயலைச் செய்தவனை, என்னுடன் நெருங்கி நின்று எனக்குத் துணையாக இருந்தவனை, எனது குற்றங்களைக் களைந்து என்னைத் திருத்தி தன்னுடன் நிலையாக அணைத்துக் கொண்டவனும், நான்மறையின் உட்பொருளாக இருப்பவனும், குளிர்ச்சி உடையதும் வெண்மை நிறத்தில் உள்ளதுமாகிய திங்களைத் தனது தலையில் மாலையாக சூடியவனும், விரைந்து நடக்கும் தன்மை கொண்ட இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவனும், உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்குபவனும், நாராயணனாகவும், பிரமனாகவும் இருப்பவனும், புண்ணியமே வடிவமாக உள்ளவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com