37. சொல்லானைப் பொருளானை  - பாடல் 10

முறையிட்டு புலம்பிய அப்பர் பிரானுக்கு,

பாடல் 10


    மீளாத ஆள் என்னை உடையான் தன்னை வெளி செய்த
                        வழிபாடு மேவினானை
    மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன்கூற்றின்
                    உயிர் மாள உதைத்தான் தன்னைத்
    தோளாண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள்வலியும்
                    தாள்வலியும் தொலைவித்து ஆங்கே
    நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை நாரையூர்     
                    நன்னகரில் கண்டேன் நானே

விளக்கம்

மீளாத ஆள் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தில் தன்னைக் கூறிக் கொள்கின்றார். தான் பாடிய முதல் பதிகத்தின் முதல் பாடலில் (4.1.1), அப்பர் பிரான், பெருமானே நீ என்னை ஏற்றுக்கொண்டாய், எனவே இன்றுமுதல் நான் உன்னை பிரியாது இரவும் பகலும் வணங்குவன் எப்பொழுதும் என்று அறிவித்தவாறு, தனது இறுதி வரை சிவபெருமானின் ஒப்பற்ற அடியாராகத் திகழ்ந்ததை அவரது வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. அவர் பல பாடல்களில் மீளா அடிமையாக தான் இருக்கும் நிலையினை குறிப்பிட்டு இறைவனை போற்றுவதை நாம் காணலாம்.

    கூற்றாயினவாறு விலக்கு அகிலீர் கொடுமை பல செய்தன
                                                                     நான் அறியேன்
    ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன்
                                                                     எப்பொழுதும்
    தோற்றாது என் வயிற்றின் அகம் படியே குடரோடு துடக்கி
                                                                      முடக்கியிட
    ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை
                                                                     அம்மானே

தான் பெருமானுக்கு மீளாத அடிமையாக மாறிய தன்மையை, அப்பர் பிரான், தனது இரண்டாவது பதிகத்தில் குறிப்பிடுகின்றார். சமண குருமார்களின் தூண்டுதலின் பேரில், பல்லவ மன்னன், தன்னை விசாரணை செய்வதற்காக, அவனது சேனைகளையும் மந்திரிகளையும் விடுத்து அழைத்தபோது, அப்பர் பிரான் பாடிய பதிகம் இது.

பெருமானின் மலர் போன்ற சேவடிகளை அடைக்கலமாக அடைந்து அவனுக்கு என்றும் மீளாத அடிமையாக தான் இருப்பதையும், அதனால் தன்னிடம் ஏற்பட்ட மாற்றங்களையும் இந்த பாடலில் எடுத்துரைக்கின்றார். இறைவனுக்கு அடிமையாக மாறிய தான், இனி எவருக்கும் அடிமை இல்லை என்றும், இயமனுக்கும் அஞ்சமாட்டேன் என்றும், நரகத்தில் புகுந்து இடர்ப்பட வேண்டிய அவசியம் தனக்கில்லை என்றும், தான் கூறும் சொற்கள் மெய்யானவை என்றும், இனி தனக்கு என்றும் இன்பமே அன்றி துன்பம் இல்லை என்றும். பிணி எதுவும் தன்னை அண்டாது என்றும், அறிவிக்கும் பாடல். சூலை நோய் வந்தபோது, கூற்றுவன் போல் தன்னை வருத்துகின்றது என்று பெருமானிடம் முறையிட்டு புலம்பிய அப்பர் பிரானுக்கு, மிகவும் அதிகமான தன்னம்பிக்கையை அவருக்கு அளித்தது, மீளா அடிமையாக அவர் இருந்த நிலை தான். இந்த நிலை தான் நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் என்று புரட்சிக்குரல், மன்னனின் ஆணைக்குத் தான் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று மறுமொழி, கொடுக்கும் அளவுக்கு அவரது மனதிற்கு உரம் ஏற்றியது என்று கூறினால் மிகையாகாது.

    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில்
                                                 இடர்ப்படோம் நடலை இல்லோம்
    ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே     
                                                   எந்நாளும்     துன்பமில்லை
    தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க     
                                                      வெண்குழை ஓர் காதில்
    கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர் சேவடி
                                                     இணையே குறுகினோமே     

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில், அப்பர் பிரான், சிவபெருமானுக்கு மீளாத அடிமையாக இருந்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அடையாத மனிதர்களை, வீணான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கூறுகின்றார். அறிவு வளர்ச்சி பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து பொருள் ஈட்டும் திறம் பெற்று, தனது காலில் நிற்கும் தன்மையை அடைந்த மனிதனை நாம் ஆளாகிவிட்டான் என்று கூறுகின்றோம். ஆனால் அப்பர் பிரான் ஆளாக கருதுவது, பெருமானது அடியார்களைத்தான்.

ஏனென்றால் அவர்கள் தானே, நிலையான இன்பம் அளிக்கக்கூடிய முக்தி நிலைக்கு செல்வதற்கான வழியில் அடியெடுத்து வைத்தவர்கள். அவ்வாறு ஆளாகாத ஒருவன், சிவபெருமானின் அடியார் ஒருவரை அணுகி, ஆளாகும் நிலையினை அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.

    ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
    மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
    தோளாத சுரையோ தொழும்பர் செவி
    வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

இறைவனிடம் அடிமைத்திறம் கொண்டுள்ள நாம், நமது வாழ்நாள் முழுவதும், அந்த அடிமைத் திறத்திலிருந்து மீளாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்ததால்தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார். இந்த பாடலில், மற்ற தெய்வங்களைத் தான் வேண்டாது இருந்த நிலையினையும், தனக்கு எத்தனை இடர்கள் வந்த போதிலும் சிவபெருமானுக்கு அடிமையாக இருந்த தனது நிலையிலிருந்து தான் மீளாது இருந்த தன்மையையும் சுந்தரர் கூறுகின்றார்.

தனது கண்பார்வையை இறைவன் பறித்ததால் தனது நெஞ்சம் மிகவும் வருந்துவதையும், அதனால் முகம் மிகவும் வாடி இருப்பதையும் கூறும் சுந்தரர், தான் ஏதும் கூறாமலே சிவபிரான் தனது வருத்தத்தின் காரணத்தை புரிந்துகொண்டு ஆவன செய்திருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்ததால் (தோழமை நிமித்தம்) தான் தனது குறையை சொன்ன பின்னரும் சிவபிரான் ஏதும் செய்யாமல் இருந்த நிலை சுந்தரரை மிகவும் கோபம் கொள்ளச் செய்கின்றது போலும்.

இந்த நிலை இன்றும் நிலவுவதை நாம் உலகினில் காண்கின்றோம், உணருகின்றோம். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் ஒருவரை நாம் அணுகும்போது, நமக்கு உதவக்கூடிய நிலையில் இருந்தும் அவர் நமக்கு உதவி செய்ய மறுத்தாலோ, தாமதம் செய்தாலோ, நாம் அவர் பால் கோபம் கொண்டு, நீர் எனக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, நன்றாக வாழுங்கள் என்று நாம் பல சமயங்களில் கூறுகின்றோம். இதே மன நிலையில் இருந்த சுந்தரர், சிவபெருமானை, எமக்கு உதவி செய்யாத நீர் வாழ்ந்து போதீரே என்று சொல்கின்றார்.

    மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
    மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
    ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
    வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

பட்டி என்ற சொல்லுக்கு மீளா அடிமை என்று பொருள். சோற்றுத்துறை மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (5.33.3) தனது நெஞ்சத்திற்கு, பட்டியாய் சிவபெருமானுக்கு பணி செய் மட நெஞ்சமே என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

இது நமக்கு உணர்த்தும் அறிவுரையாகும். தனது நெஞ்சத்திற்கு சொல்வதுபோல் நமக்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி. நமது உயிருடன் ஒட்டி இருக்கும் பிறவிப்பிணி எனப்படும் நோயினையும் உயிருடன் பிணைந்து இருக்கும் வினைகளையும், நாம் கழிக்க வேண்டும் என்று விரும்பினால், பெருமானின் திருவடிகளை மனதினால் தொட்டு இறைவனுக்கு அடிமையாக மாறி அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

    ஒட்டி நின்ற உடலுறு நோய் வினை
    கட்டி நின்ற கழிந்து அவை போயறத்
    தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே
    பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே

நமக்கு பல விதங்களிலும் துணையாக இருந்து நம்மைக் காப்பாற்றும், நமக்கு வழிகாட்டும இறைவனுக்கு மீளா அடிமையாக இருப்பதன்றி அவனுக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு வேறெதுவும் இல்லை, என்று நமக்கு அறிவுறுத்தும் பாடலை (4.40.7) நாம் இங்கே காண்போம். பார்வையால் சுட்டெரிக்கக்கூடிய நெற்றிக் கண் இருப்பினும், அந்த நெற்றிக் கண் வேறு எவரையும் அழிப்பதற்கு பயன்படவில்லை என்பதை இங்கே மிகவும் நயமாக, மன்மதனைத் தவிர நெற்றிக் கண்ணால் காயப்பட்ட வீரர்கள் எவரும் இல்லை என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

    கீள் அலால் உடையும் இல்லை கிளர்பொறி அரவம் பைம்பூண்
    தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில்
    வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா
    ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

வெளி செய்த வழிபாடு = அறிவு ஒன்றி செய்யும் வழிபாடு. மாளாமை = என்றும் இறக்காமல் சிரஞ்சீவியாக இருக்கும் தன்மை. மேவுதல் = விரும்புதல்.

பொழிப்புரை

என்றும் தன்னை விட்டு நீங்காமல், தனக்கு அடிமையாக என்னை மாற்றி, மறுபடியும் தீயநெறிக்கு நான் செல்லாத வண்ணம் என்னை ஆட்கொண்ட பெருமான் சிவபெருமான்; அறிவு ஒன்றி மனம் ஒன்றி செய்யப்படும் வழிபாட்டினை மிகவும் விரும்புவன் சிவபெருமான்; தனக்கு விதிக்கப்பட்டிருந்த பதினாறு ஆண்டுகள் வாழ்நாள்முடிந்து விட்ட நிலையில், இயமன் வீசிய காலபாசத்தில் கட்டுண்டு இருந்த சிறுவன் மார்க்கண்டேயனுக்கு, என்றும் வாழும் சிரஞ்சீவித் தன்மை அளித்தவன் சிவபெருமான்; மிகுந்த வலிமை உடையவனாக விளங்கும் இயமன், இறந்து விழுமாறு அவனைத் தனது காலால் உதைத்தவன் சிவபெருமான்; தனது தோள்வலிமையில் மிகுந்த செருக்கு கொண்டும கயிலை மலையினை எடுக்க முயற்சி செய்த கொடியவனான அரக்கன் இராவணனின் தோள் வலிமையையும் அவனது கால்களின் வலிமையையும் அடக்கி அவன் இடர் விளைவித்தவன் சிவபெருமான், இவ்வாறு இடரில் ஆழ்ந்தவன், தன்னைப் புகழ்ந்து சாமகானம் பாடி இறைஞ்சியபோது, அவனுக்கு வாழ்நாள் மற்றும் சந்திரகாசம் எனப்படும் வாளினை அளித்தவன் சிவபெருமான். இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன்.

முடிவுரை

பெருமானின் பல வீரச்செயல்களையும் பண்புகளையும் இந்த பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிட்ட அப்பர் பிரான், சிவபிரானின் கருணைச் செயல்களையும் இங்கே நமக்கு உணர்த்துகின்றார்.

திருமால், விஜயன், சந்திரன், தேவர்கள், தன்னை நினைக்கும் அடியார்கள் இராமபிரான், உமையம்மை, சிலந்தி, திரிபுரத்தில் தன்னைத் தொழுது வாழ்ந்த மூன்று அரக்கர்கள், சனகாதி முனிவர்கள், சிறுவன் மார்க்கண்டேயன், அரக்கன் இராவணன் என்று பலரையும் குறிப்பிடும் அப்பர் பிரான், தனக்கு அருள்புரிந்த செயலையும் இங்கே நமக்கு உணர்த்துகின்றார். இதன்மூலம், பெருமானை நம்பி, உள்ளன்புடன் நினைத்து வழிபட்டால் நாமும் பயன்களை பெறலாம் என்பதை நமக்கு உணர்த்தும் பதிகமாக இந்த பதிகம் திகழ்கின்றது. அப்பர் பிரானின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு நாமும் சிவபெருமானை வழிபட்டு பயன்கள் பெறுவோமாக.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com