59. ஒருவராய் இரு மூவராய் - பாடல் 2

வன்னி ஊமத்தம் ஆகிய மலர்களை

வன்னி மத்தம் வளரிளம் திங்கள் ஓர்
கன்னியாளைக் கதிர் முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர்முலையாளொடும்
மன்னினான் கடம்பூர்க் கரக்கோயிலே
 

விளக்கம்

புணர் = ஒன்று சேர்த்து இறுக்கமாக கட்டப்பட்ட. கதிர்முடி = ஒளிரும் முடி. பொன்னின் மல்கு = பொன்னினால் செய்யப்பட்ட அணிகலன்களால் இறுக்கமாக கட்டப்பட்ட. மன்னினான் = நிலையாக வீற்றிருந்தான். இந்த பாடலில் உமையம்மையுடன் எப்போதும் பெருமான் கூடி இருப்பதாக கூறப்படுகின்றது. பெருமான் எப்போதும் பிராட்டியுடன் கூடியிருக்க வேண்டும் என்பதற்கு மணிவாசகர் திருச்சாழல் பதிகத்தின் ஒரு பாடலில் விளக்கம் அளிக்கின்றார். உகத்தல் = விரும்புதல். இருநிலம் = பூமி. யோகு எய்தி = யோக மார்கத்தில் சென்று. வீடுவர் = அழிவர்.

தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண் பால் உகந்திலனேல் பேதாய் இரு நிலத்தோர்
விண் பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ

மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் இன்பம் துய்க்காமல் யோகியராக மாறினால், அவர்களால் ஏற்படவிருந்த இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும். எனவே இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, மனிதர்கள் இன்பம் துய்க்கும் வழியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக, இறைவனும் தான் போகம் துய்ப்பது போன்று காட்சி அளிக்கின்றான். நமக்கு ஒரு ஐயம் எழலாம். ஏன் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற ஐயம்தான் அது. மனிதப் பிறவி தான் அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்தது என்று சொல்வதன் காரணம், மனிதப் பிறவிதான், உயிர் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொண்டு உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைய வழி வகுக்கும் பிறவியாகும். இந்த மனிதப் பிறவியின் பெருக்கம் தடைப்பட்டால், எண்ணற்ற உயிர்கள் என்றென்றும் மலங்களுடன் பிணிக்கப்பட்டு விடுதலை அடைய முடியாமல் போய்விடும். மேலும் உயிர்கள் முக்தி நிலை அடைந்து தன்னுடன் வந்து இணைந்து என்றென்றும் பேரின்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பமும் ஈடேறாமல் போய்விடும். எனவே, அத்தகைய உயிர்கள் பொருத்தப்படுவதற்கான தகுந்த உடல்கள் இனப்பெருக்கத்தின் மூலம் தான் உருவாக்கப்பட முடியும் என்பதால், உயிர்கள் போகிகளாக வாழ்ந்து இன்பம் துய்க்கவேண்டிய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் இறைவன் பிராட்டியுடன் கூடியிருந்து, உலகம் தொடர்ந்து வளரும் பொருட்டு நமக்கு முன்மாதிரியாக விளங்குகின்றான் என்ற செய்தி மேற்கண்ட திருவாசகப் பாடலில் உணர்த்தப்படுகின்றது.

இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதை கருவூர்த் தேவர் ஒரு திருவிசைப்பா பாடலில் விளக்குகின்றார்.

மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளம்
            திங்களை முடிமேல்
கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட
            சோளேச்சரத்தானை
அங்கை ஓடு ஏந்திப் பலி திரி கருவூர் அறைந்த சொல்
            மாலையால் ஆழிச்
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும்
            சிவனருள் கடலே

பொழிப்புரை

வன்னி ஊமத்தம் ஆகிய மலர்களையும், தன்னிடம் வந்து சரணடைந்த சந்திரனை வளரும் நிலைக்கு மாற்றி தேய்ந்த நிலையில் வந்த இளம் திங்களையும் கங்கை நங்கையையும் தனது ஒளிவீசும் சடையில் ஏற்ற இறைவன், பொன்னால் செய்யப்பட்ட நகைகளையும், இறுக கட்டப்படிருக்கும் கச்சினையும் மார்பினில் அணிந்த உமை அம்மையுடன் கலந்து நிலையாக இருப்பது கடம்பூர் தலத்தில் கரக்கோயிலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com