70. நம்பனை நால்வேதம் - பாடல் 8

வஞ்சகரோடு கலவாது
70. நம்பனை நால்வேதம் - பாடல் 8


மெய்யானைப் பொய்யரொடு விரவாதானை
         வெள்ளிடையைத் தண்ணிழலை வெந்தீ ஏத்தும்    
கையானைக் காமன் உடல் வேவக் காய்ந்த
         கண்ணானைக் கண் மூன்று உடையான் தன்னைப்
பையாடரவ மதியுடனே வைத்த சடையானைப்
         பாய்புலித் தோல் உடையான் தன்னை
ஐயானை ஆவடு தண்துறையுள் மேய அரன்
        அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

விளக்கம்:
வெள்ளிடை = வெற்றிடம்.

பொழிப்புரை:
மெய்ப்பொருளாகத் திகழ்பவனும், வஞ்சகரோடு கலவாது இருப்பவனும், ஏதும் இல்லாத வெற்றிடத்திலும் பரவி இருப்பவனும், குளிர்ந்த நிழல் வெம்மையிலிருந்து காப்பது போன்று அடியார்களைத் துன்பங்களிலிருந்து காப்பவனும், மிகுந்த வெப்பம் கொண்ட தீயினைக் கையினில் ஏந்தியவனும், காமனின் உடலை எரித்த கண்ணினை உடையவனும், மூன்று கண்களை உடையவனும், படம் எடுத்தாடும் பாம்பினையும் சந்திரனையும் அவர்களுக்கு இடையே இருந்த பகைமையைத் தீர்த்துத் தனது சடையில் ஒருங்கே வைத்தவனும், கொல்லும் நோக்கத்துடன் பாய்ந்து வந்த புலியினைக் கொன்று அதன் தோலினைத் தனது உடையாக அணிந்தவனும், எல்லோருக்கும் தலைவனாகத் திகழ்பவனும் ஆகிய திகழும் பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com