70. நம்பனை நால்வேதம் - பாடல் 10

மெல்லிய விரல்களை
70. நம்பனை நால்வேதம் - பாடல் 10


பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப்
          பாடலோடு ஆடல் பயின்றான் தன்னைக்
கொந்தணவு நறும் கொன்றை மாலையானைக்
          கோலமா நீல மிடற்றான் தன்னைச்
செந்தமிழோடு ஆரியனைச் சீரியானைத் திருமார்பில்
          புரி வெண்ணூல் திகழப் பூண்ட
அந்தணனை ஆவடு தண்துறையுள் மேய அரன்
          அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

விளக்கம்:
கோலமாம் = அழகான.

பொழிப்புரை:
ஐந்து விரல்களையும் ஒன்று சேர்த்தால் பந்து பொருந்துவது போன்று அழகாக பொருந்தும் மெல்லிய விரல்களை உடைய பிராட்டியைத் தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனும், தொடர்ந்து கீதங்கள் பாடுபவனாகவும் நடனம் ஆடுபவனுமாக இருப்பவனும், நறுமணம் வீசும் கொத்தான கொன்றை மலர்களை மாலையாகக் கோத்து அணிந்தவனும், அழகிய நீல வண்ணத்தில் கழுத்தினை உடையவனும், செந்தமிழிலும் ஆரியத்திலும் சிறப்பான புலமை பெற்றவனும், தனது மார்பினில் வெண்ணூல் பூண்ட அந்தணனும் ஆகிய பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com