71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 3

தருமதேவதை
71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 3

பாடல் - 3
காருடைக் கொன்றை மாலை கதிர்மணி அரவினோடு
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதியாய
போருடை விடையொன்று ஏற வல்லவர் பொன்னித் தென்பால்
ஏறுடைக் கமலம் ஓங்கு இடைமருது இடம் கொண்டாரே

விளக்கம்:
ஆவடுதுறை சென்று இறைவனை வழிபட்ட அப்பர் பிரான், அங்கிருந்து இடைமருது வந்ததாக பெரிய புராணம் கூறுகின்றது. ஆவடுதுறை தான், தருமதேவதை, பெருமானை வேண்டிக்கொண்டு அவரது வாகனமாக மாறிய தலம். ஆவடுதுறை தலத்தினை விட்டு இடைமருது தலத்திற்கு வந்த பின்னரும், அப்பர் பிரானின் நினைவிலிருந்து ஆவடுதுறை தலத்தின் சிறப்புகள் நீங்கவில்லை போலும். அந்த தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியினை. இந்த பாடலில், நீதியாய விடை என்ற சொற்றொடர் மூலம் உணர்த்துகின்றார். நீதி வழுவாது இருந்தாலும் போர்க்குணம் கொண்ட விடை என்று கூறுவதை நாம் காணலாம்.

காருடைக் கொன்றை மாலை என்று கார் காலத்தில் அதிகமாக பூக்கும் கொன்றை மாலையின் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. கதிர்மணி=மாணிக்கக் கல்; நாகப் பாம்பின் கழுத்தில் மாணிக்க மணி இருப்பதாக நம்பிக்கை பண்டைய நாளில் நிலவி வந்தது. பொன்னித் தென்பால் இருந்த தலம் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதன் மூலம், அவரது காலத்திலேயே, சோழ நாட்டுத் தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள் என்றும் காவிரித் தென் கரைத் தலங்கள் என்றும் பிரிக்கப்பட்டிருந்தன என்பதை நாம் அறிகின்றோம். கமல வேலி என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலிலும் தாமரை மலர்கள் அதிகமாக விளைந்து, நீர்வளமும் நிலவளமும் மிகுந்த தலமாக இடைமருது விளங்கியதை நமக்கு உணர்த்துகின்றார்.     
 
பொழிப்புரை:
கார்க்காலத்தில் மிகவும் அதிகமாக பூக்கும் கொன்றை மாலையை, மாணிக்கத்தைத் தன் பால் கொண்ட பாம்பினோடும், கங்கை நதியினோடும் தனது சடையில் வைத்தவர் சிவபெருமான். நீதிநெறி வழுவாது நீதிநெறியின் மொத்த உருவமாக விளங்கும் பெருமான், நீதி தேவதையின் வேண்டுகோளுக்கு இணங்கி, நீதி தேவதையை போர்க்குணம் கொண்ட இடபமாக மாற்றித் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவர் ஆவார். அவர் காவரி நதியின் தென் கரையில் அமைந்ததும் அழகு நிறைந்ததும் ஆகிய இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com