71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 4

கற்றவர்களும் கேட்டவர்களும்
71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 4

பாடல் - 4

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள்
                                                               நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம்
                                                              தீர்க்கும்
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமர்
                                                              காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்க இடைமருது இடம்
                                                              கொண்டாரே

விளக்கம்:
விண்ணுலகம் என்றும் சொர்க்கம் என்றும் தேவர்கள் வாழும் உலகத்தை சொல்வதுண்டு. சிவபெருமான் உறையும் சிவலோகம், தேவலோகத்தை விடவும் சிறந்ததாக கருதப் படுவதால், விண்ணின் மிக்கார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு ஞானசம்பந்தப் பெருமானின் சாய்க்காடு தலத்து பதிகத்த்ன் முதல் பாடலை (2.43.1) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் சம்பந்தர் சாய்க்காடுத் தலத்தின் தலைவனாகிய பரமனின் தாள் சார்ந்த அடியார்கள், அவனது புகழினைக் கற்றவர்களும் கேட்டவர்களும் ஆகிய அடியார்கள், மறுபடியும் பிறப்பெடுத்து மண்ணுலகம் புக மாட்டார்கள், பேரின்பம் அடைவார்கள், மனத்தால் சோர்வு அடையமாட்டார்கள், பசி துன்பம் இடுக்கண் ஆகியவற்றை அறிய மாட்டார்கள், விண்ணுலகம் செல்ல மாட்டார்கள் அதற்கும் உயர்ந்ததகிய சிவலோகம் செல்வார்கள் என்று குறிப்பிடுகின்றார். கண்=இடுக்கண்; 
    
    மண் புகார் வான்புகுவர் மனம் இளையார் பசியாலும்
    கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்
    விண் புகார் என வேண்டா வெண்மட நெடுவீதித்
    தண் புகார்ச் சாய்க்காட்டெம் தலைவன் தாள் சார்ந்தாரே

பண்ணின் மிக்க பாடல்கள்=மேம்பட்ட பண்களைக் கொண்ட பாடல்கள்; நுதல்=நெற்றி: எண்ணின் மிக்கார்=மேம்பட்ட எண்ணங்களை உடைய அடியார் மனதினில்; கண்=கருத்து; 
   
பொழிப்புரை:
தேவர்கள் வாழும் தேவலோகத்தை உடையவராகிய பெருமான், அந்த தேவலோகத்தை விடவும் உயர்ந்ததாகிய சிவலோகத்தைத் தனது இருப்பிடமாக உடையவர். நான்கு வேதங்களையும், அவற்றை பாதுகாக்கும் அரணாக உள்ள ஆறு அங்கங்களையும் உலகம் அறியச் செய்தவர் சிவபெருமான்; அவர் சிறப்பான பண்களை உடைய தேவாரப் பாடல்களையும் மற்ற பாடல்களையும் உடையவர் ஆவார்; அவர் அடியார்களின் பாவங்களைப் போக்கும் கருத்தை உடையவர்; இரண்டு கண்களுக்கும் மேலாக உள்ள மூன்றாவது கண்ணினை நெற்றியில் உடையவர் ஆவார்; அந்த நெற்றிக் கண்ணினால் காமனை வெகுண்டு எரித்த பெருமான், அடியார்களின் மேம்பட்ட எண்ணத்தில் உறைகின்றார். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com