81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 5

மறைமுகமாக இறைவனிடம்
81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 5

பாடல் 5:
மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண் பொருந்து தேவர்க்கும் வீடு பேறாய் நின்றானைப்
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என்
கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ

விளக்கம்:
தீர்த்த=புனிதம் உடைய; மாதீர்த்த=மிகவும் புனிதமான; இசை பாடும் என்ற வினைச் சொல்லை, அப்பனை என்ற பெயர்ச் சொல்லுடன் சேர்த்து, பண் பொருந்த இசை பாடும் இறைவன் என்று பொருள் கொள்ள வேண்டும். ஊழிக்காலத்தில் தசை கழிந்த, பிரமன் மற்றும் திருமாலின் உடலில் எஞ்சிய எலும்புக்கூடுகளை தோளில் அணிந்தவண்ணம் சிவபிரான் வீணை வாசித்தபடியே, ஒடுங்கிய உலகினை மறுபடியும் தோற்றுவிக்கும் எண்ணத்தில், இருப்பதாக அப்பர் பிரான் ஒரு பதிகத்தில் (4.112.7) கூறுகின்றார்
   
    பெருங்கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய்
    இருங்கடன் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
    கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
    வரும் கடன் மீள நின்று எம் இறை நல்வீணை வாசிக்குமே

நாம் இறக்கும் சமயத்திலும் சிவபிரானது நினைவு இருக்க வேண்டும் என்ற தனது கவலையை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த கவலை நமக்கும் இருக்கவேண்டும், திருப்புகலூர் தலத்தில் இறைவனைப் பற்றிய சிந்தைனையில் இருந்தபோதே இறைவனின் திருவடிகளில் சேர்ந்த அப்பர் பிரானுக்கு அருளியது போல், நமக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று நாம் இறைவனை வேண்டும் முகமாக, தினமும் சிவபூஜை செய்யும் அன்பர்கள் தாங்கள் பூசையினை முடிக்கும் சமயத்தில், இந்த பாடலை சொல்லவேண்டும் என்று பெரியோர்கள் கருதுகின்றனர்.

கண் பொருந்துதல்=இறப்பினைக் குறிக்கும் மங்கலச் சொல். கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ என்று (இறக்கும் சமயத்தில் பழனத்து அப்பனின் நினைவை நான் கை விட்டு விடுவேனோ) தனது அச்சத்தை வெளிப்படுத்தும் அப்பர் பிரான், தான் இறக்கும் சமயத்திலும் சிவபிரானைப் பற்றிய நினைவு தனக்கு இருக்கவேண்டும் என்ற தனது விண்ணப்பத்தை, மறைமுகமாக இறைவனிடம் தெரிவிக்கின்றார். அப்பர் பிரான் பல பாடல்களில், தனது உடலிலிருந்து உயிர் பிரியும் சமயத்தில் இறைவனைப் பற்றிய எண்ணங்கள் தனது மனதில் தோன்றவேண்டும் என்றும், சிவபிரானின் திருநாமத்தைத் தான் சொல்ல வேண்டும் என்றும் வேண்டுகின்றார். அத்தைகைய நேரத்தில், இறைவனும் தனக்கு அருள் புரிய வேண்டும் என்று கோரும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (4.113.3 -- வெள்ளிக் குழைத் துணி என்று தொடங்கும் பதிகம்):

    முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இம்மூவுலகுக்கு
    அன்னையும் அத்தனும் ஆவாய் அழல் வணா நீ அலையோ
    உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததற்பின்
    என்னை மறக்கப் பெறாய் எம்  பிரான் உன்னை வேண்டியதே    


பொழிப்புரை:
இந்த மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கும், தூய்மையான வேதியர்களுக்கும், மற்றும் விண்ணுலகத்தில் வாழும் தேவர்களுக்கும் முக்திநிலை அளிக்கக்கூடிய சிவபிரானை, அவனது அடியார்கள் பண்ணோடு பொருந்திய பாடல்களைப் பாட அதனைக் கேட்டு இன்பமுறும் பழனத்து அப்பனை, நான் இறக்கும் தருவாயில் நினைக்காமல் போய்விடுவேனோ என்று அஞ்சுகின்றேன். அவ்வாறு ஏதும் ஏற்படாதவாறு, நான் அந்த சமயத்திலும் உன்னை நினைக்குமாறு நீ அருள் புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com