83. பெருந்திரு இமவான் - பாடல் 3

தீவிரமாக தவம்
83. பெருந்திரு இமவான் - பாடல் 3


பாடல் 3:

    ஒன்றிய தவத்து மன்னி உடையனாய்
                                                    உலப்பில் காலம்
    நின்று தம் கழல்கள் ஏத்து நீள் சிலை
                                                   விசயனுக்கு
    வென்றி கொள் வேடனாகி விரும்பி வெம்
                                                   கானகத்துச்
    சென்று அருள் செய்தார் சேறைச் செந்நெறிச்
                                                  செல்வனாரே


விளக்கம்:


மனம் ஒன்றி அர்ஜுனன் தவம் செய்ததாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தவத்தினில் மனம் ஒன்றி இருந்ததால் தான், மூகாசுரன் என்ற அரக்கன் பன்றி வடிவம் கொண்டு தன்னைத் தாக்க வந்ததையும் உணராதவனாக முதலில் அவன் இருந்தான். பின்னர் வேடன் அம்பு எய்ததைக் கண்ட தானும் அந்த பன்றியின் மீது அம்பு எய்தான். மனம் ஒன்றி இறைவனை நினைப்பவர்களுக்கு ஊனம் ஏதும் இல்லை என்ற அப்பர் பிரானின் வாக்கிற்கு இணங்க, சிவபிரான் தனது பக்தனைக் கொல்ல வந்த பன்றியை அம்பினால் வீழ்த்தினார். அர்ஜுனனது தவத்திற்கு இடையூறாக வந்த பன்றியை கொன்று வெற்றி கொண்ட வேடன் என்பதை உணர்த்தும் வகையில், வென்றிகொள் வேடன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தவம் செய்யும் காலத்தும் வில்லினை விட்டுப் பிரியாமல் இருந்த விஜயன் என்பதைக் குறிக்க, நீள்சிலை விசயன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

உமையம்மையும் சிவபிரானை அடைவதற்காக மிகவும் தீவிரமாக தவம் செய்தாள். அந்த தவத்தின் தீவிரம் இந்த பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்தப்பட்டது. அர்ஜுனன் செய்த தவத்தின் தீவிரம், மற்றவர்களால் நினைத்தற்கும் அரிய தவம் என்று சம்பந்தர் ஒரு பதிகத்தில் (1.20.6) குறிப்பிடுகின்றார். மேலும் இந்த தவத்தின் தீவிரத்தையும் விசயனின் உடல் பலத்தையும் உமையம்மை உணரவேண்டும் என்பதற்காக. உமை அம்மையை உடன் அழைத்துச் சென்றதாகவும் சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பாசுபத அத்திரம், எவரிடமும் தோற்காத படை என்பதை, அசைவில படை என்ற சொல்லின் மூலம் சம்பந்தர் உணர்த்துகின்றார். வனசரஉரு=வனங்களில் திரியும் வேடர்கள் கொள்ளும் கோலம். மிடல்=வலிமை  
 
    வசையறு வலி  வனசர உரு அது கொடு
                                       நினைவரு தவ முயல் 
    விசையன திரள் மலைமகள் அறிவுறு திறல்
                                      அமர் மிடல் கொடு செய்து 
    அசைவில படை அருள் புரி தரும் அவன் உறை
                                      பதி அது மிகு தரு
    திசையின் நன்மலர் குலவிய செறிபொழில்
                                      மலி தரு திரு மிழலையே  

பொழிப்புரை:

மனம் ஒன்றி பல காலங்கள் சிவபிரானின் திருப்பாதங்களையே நினைத்து தவம் செய்த, நீண்ட வில்லினை உடைய அர்ஜுனனனுக்கு அருள் புரிவதற்காக, வெற்றி கொள்ளும் வேடுவ கோலத்தை விரும்பி ஏற்று, தான் உறையும் குளிர்ந்த கயிலாயத்தை விட்டு நீங்கி வெம்மை மிகுந்த காட்டின் இடையே சென்று அருள் செய்தவர், சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com