83. பெருந்திரு இமவான் - பாடல் 9

லிமையும் ஒளியும்
83. பெருந்திரு இமவான் - பாடல் 9


பாடல் 9:

    ஒருவரும் நிகரிலாத ஒண்திறல் அரக்கன்
                                                                    ஓடிப்
    பெருவரை எடுத்த திண்தோள் பிறங்கிய
                                                                    முடிகள் இற்று
    மருவி எம் பெருமான் என்ன மலரடி மெல்ல
                                                                    வாங்கித்
    திருவருள் செய்தார் சேறைச் செந்நெறிச்
                                                                    செல்வனாரே


விளக்கம்:

பெருவரை=கயிலாய மலை; அனைத்து மலைகளிலும் சிறந்த மலையாக கருதப்படுவது. பிறங்கிய=ஒளியுடன் விளங்கிய: இற்று=அறுந்து கீழே விழுதல்; தலைகளும் தோள்களும் அழுத்தப்பட்டு கழன்று விழும் அளவுக்குத் துன்பம் அடைந்த நிலை இங்கே விளக்கப் பட்டுள்ளது. மருவி=மிக்க அன்போடு: வாங்கி=அழுத்திய திருவடியை மெதுவாக எடுத்து
   
பொழிப்புரை:

தனக்கு எவரும் இணை இல்லாதவாறு வலிமையும் ஒளியும் கொண்டு விளங்கிய இலங்கை மன்னன் இராவணன், விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட போது, அவனுடைய வலிமையான தோள்களும் தலைகளும் சிதறி விழுமாறு, சிவபெருமான் தனது கால் விரலால் தான் அமர்ந்திருந்த கயிலை மலையினை மெல்ல அழுத்தினார்: அப்போது அன்புடன் இறைவனை எம்பெருமானே என்று இராவணன் வழிபட, தனது அழுந்திய கால் விரலை மெல்ல வாங்கி, அழுத்ததலைத் தவிர்த்து அரக்கனின் உயிரினைக் காத்து அருள் புரிந்தார். இவ்வாறு அருள் செய்தவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார். 

முடிவுரை: 

இந்த பதிகத்தில் ஒன்பது பாடல்களே கிடைத்துள்ளன. செந்நெறிச் செல்வன் என்பது தலத்து இறைவனின் திருநாமம். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் இந்த பெயர் இடம் பெறுகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com