52. கானறாத கடிபொழில் - பாடல் 7

கையினில் சூலப் படையை

கை கொள் சூலத்தர் கட்டுவாங்கத்தினர்
மை கொள் கண்டத்தர் ஆகி இரு சுடர்
செய்ய மேனி வெண்ணீற்றர் செம்பொன்பள்ளி
ஐயர் கையதோர் ஐந்தலை நாகமே

விளக்கம்

கட்டுவாங்கம் = மழு ஆயுதம். செய்ய மேனி = சிவந்த நிறத்து மேனி. ஐயர் = தலைவர். இரு சுடர்களும் இறைவனின் இரண்டு கண்களாக இருப்பதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. ஆலுதல் = அசைதல், களித்தல். நெருப்பின் இயல்பு மேல் நோக்கி எரிதல், அதனை உணர்த்தும் வண்ணம் அக்னியை நெடிதா பொங்கு ஏரி என்று கூறுகின்றார். விண்டார்கள் = பகைவர்கள். திரிபுரத்தை எரித்தபின்னர் சிவபெருமான் ஆடிய கூத்தினை பண்டரங்கக் கூத்து என்று அழைப்பார்கள். இந்த பாடலில் அம்மையார், அக்னி, சூரியன், சந்திரன் ஆகியவை இறைவனின் மூன்று கண்களாக உள்ளன என்று கூறுகின்றார்.

நெடிதாய பொங்கு எரியும் தண்மதியும் நேரே
கடிதாம் கடும் சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் தீயினில் அழியக்
கண்டு ஆலும் முக்கணான் கண்
 

பொழிப்புரை

கையினில் சூலப் படையை ஏந்தியவராயும், மற்றொரு கையினில் மழுப் படையை உடையவராகவும் விளங்கும் பெருமான், பாற்கடலிலிருந்து எழுந்த விடத்தை தேக்கியதால் கறுத்த கண்டத்தை உடையவராகவும், சூரிய சந்திரர்களை இரண்டு கண்களாக உடையவராகவும், சிவந்த மேனியில் வெண்ணீறு பூசியவராகவும், தனது கையினில் ஐந்தலை நாகத்தை கங்கணமாகஏந்தியவராகவும் உள்ளார். இவ்வாறு காணப்படும் நமது தலைவர் சிவபெருமான் செம்பொன்பள்ளி தலத்தில் உறைகின்றார்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com