53. கொள்ளும் காதன்மை -  பாடல் 5

திரண்டு எழுந்த நஞ்சினை உண்டதால்

குறைவிலோம் கொடு மானுட வாழ்க்கையால்
கறை நிலாவிய கண்டன் எண் தோளினான்
மறை வலான் மயிலாடுதுறை உறை
இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே

விளக்கம்

கொடு வாழ்க்கை = கொடுமையான மனித வாழ்க்கை. நீள் = நீண்ட, என்றும் நிலைபெற்று இருக்கும். சென்ற பாடலில் குறிப்பிடப்பட்ட செய்தி, பிறப்பிறப்பு சுழற்சியினைத் தவிர்க்கும் வழி இந்த பாடலிலும் உணர்த்தப்படுகின்றது. மறுபடியும் பிறப்பதற்கு வழி வகுப்பதால், கொடிய மானிட வாழ்க்கை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அத்தகைய மானிட வாழ்க்கையால் ஏற்படும் குறை, அதாவது மீண்டும் பிறந்து துன்பப்படுவது, இல்லாமல் இருக்க இறைவனின் திருப்பாதங்களை வழிபட வேண்டும் என்று அறிவுரை நமக்கு கூறப்படுகின்றது. நீண்ட = அழிவில்லாத.

பொழிப்புரை

பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த நஞ்சினை உண்டதால் ஏற்பட்ட கறையினை உடைய கழுத்தினை உடையவனும், எட்டு தோள்களை உடையவனும், மறைகளில் வல்லவனாகத் திகழ்பவனும், மயிலாடுதுறை தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனின் அழிவில்லாத திருப்பாதங்களை வாழ்த்தி வணங்கும் அடியார்கள், மறுபடியும் மறுபடியும் உலகத்தில் பிறந்து உழல்வதற்கு வழி வகுக்கும் குறையினை உடைய மானிட வாழ்க்கையின் குறை நீங்கி, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைவீர்களாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com