53. கொள்ளும் காதன்மை -  பாடல் 6

அனைத்துக் கலைகளும் கற்று தேர்ந்தவன்

நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்
கலைகள் ஆய வல்லான் கயிலாய நன்
மலையன் மா மயிலாடுதுறையன் நம்
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே

விளக்கம்

தலையின் மேலும் மனத்துளும் தங்க என்று அக வழிபாடும் புற வழிபாடும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. தனது நெஞ்சினை நோக்கி விளித்த பாடலாக இருப்பினும், பெருமானை வழிபடும் அடியார்களை நோக்கி அப்பர் பிரான் வினவும் பாடலாக இதனைக் கொள்ளலாம். மூன்றாவது பாடலில் தொண்டர்களின் சிறப்பினை உணர்த்தும் அப்பர் பிரான், அந்தத் தொண்டர்கள் பெற்ற பேற்றினை, பெருமானை வழிபடும் நிலையை நினைத்து, இந்த நிலையை அடைவதற்கு எத்தகைய தவம் செய்தார்கள் என்று வினவும் பாடல். தலையின் மேலும் மனத்துள்ளும் இறைவன் இருக்கும் தன்மையை, பெருமான் தனது அடியவர்களின் மனத்தினுள்ளே புகுந்து அவர்களை இயக்கும் செய்கையையும், அடியார்களின் அருகில் இருந்து அவர்களை பல இடர்களிலிருந்து காக்கும் செய்கையையும் குறிப்பிடுவதாக விளக்கம் கூறுவதுண்டு. அப்பர் பிரானின் வாழ்கை இத்தகைய பெருமானின் அருளுக்கு சான்றாக திகழ்ந்ததை நாம் அறிவோம்.

தலையின் மேலும் மனத்துள்ளும் தங்கவே என்று அப்பர் பிரான் கூறுவது அவர் காளத்தித் தலத்தின் மீது அருளிய பாடலை (6.8.5) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் தனது மனதினிலும், தலையின் மேலும், வாக்கிலும் இருக்கும் இறைவன் என்று, தனது மனம் மொழி மெய்களுடன் ஒன்றி இருக்கும் இறைவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அவன், தன் புகழினை வாயாரப் பாடும் தொண்டர்களின் இனத்தைச் சார்ந்தவன் என்று இறைவனின் புகழினைப் பாடும் அடியார்களின் சிறப்பினையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். செம்பொன் புனம் = பொன்னைப் போன்று வளம் கொழிக்கும் குறிஞ்சி நிலம். பொருப்பு = மலை. கனத்தகத்தான் = உடனிருந்து செயல்படுதல்.

மனத்தகத்தான் தலை மேலான் வாக்கின் உள்ளான்
            வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர்
இனத்து அகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான் ஏழ்
    அண்டத்து அப்பாலான் இப்பால் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதின் உள்ளான் பொருப்பு
   உடையான் நெருப்பு இடையான் காற்றின் உள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காலத்தியான்
            அவன் என் கண்ணுளானே

பொழிப்புரை

அனைத்துக் கலைகளும் கற்றுச் தேர்ந்தவன், கயிலாய மாமலையினைத் தான் வாழும் இருப்பிடமாகக் கொண்டவன், சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை தலத்தில் உறைபவன் ஆகிய சிவபெருமான், நமது தலையின் மேலும் உள்ளத்திலும் தங்குவதற்கு, நெஞ்சமே நீ என்ன தவம் செய்தாய், எனக்கு சொல்வாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com