49. பண்காட்டி படியாய - பாடல் 4

வெண்மை நிறத்தில் தந்தங்களை உடையதும்

பரு வெண் கோட்டுப் பைங்கண் மத வேழத்தின்
உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே
பெரு வெண்காட்டு இறைவன் உறையும் இடம்
திரு வெண்காடு அடைந்து உய்ம் மட நெஞ்சமே
 

விளக்கம்

வெண் கோட்டு = வெண்மையான தந்தங்களை உடைய. வெண்காடு என்று மூன்றாவது அடியில் குறிப்பிடப்படும் இடம், உடல்கள் எரிந்த பின்னர் சாம்பலால் நிறைந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் மயானமாகும். பெரு வெண்காடு என்று குறிப்பிடுவதன் மூலம் முற்றூழிக் காலத்து மயானம் உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை

பருத்த உடலினை உடையதும், வெண்மை நிறத்தில் தந்தங்களை உடையதும் பசிய கண்களை உடையதும் ஆகிய மத யானையின், தோலை உரித்துக் கொன்ற இறைவன், தான் உரித்த அந்த யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்த்திக்கொண்டு யானையின் உருவத்தினை நினைவூட்டியவாறு உமை அம்மையை அச்சம் கொள்ளச் செய்தார். அவ்வாறு விளையாடிய பெருமான், முற்றூழிக் காலத்தில், அனைத்து உயிர்களும் இறந்து உலகமே பெரிய மயானமாக மாறும் நேரத்திலும், அந்த பெரிய மயானத்தை விட்டு அகலாமல் உறைகின்றார். இவ்வாறு அனைவரும் அழிந்த பின்னரும் தான் அழியாமல் நிலை பெற்றிருக்கும் இறைவன், உறையும் தலமாகிய திருவெண்காட்டினை அடைந்து, இறைவன வணங்கி வழிபட்டு, நெஞ்சமே நீ வாழ்வினில் உய்வினை அடைவாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com