49. பண்காட்டி படியாய - பாடல் 6

வெண்காடு தலம் சென்று நெஞ்சமே

கூடினான் உமையாள் ஒரு பாகமாய்
வேடனாய் விசயற்கு அருள் செய்தவன்
சேடனார் சிவனார் சிந்தை மேய வெண்
காடனார் அடியே அடை நெஞ்சமே
 

விளக்கம்

சேடன் என்ற சொல் சேஷன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. சேஷம் என்றால் எஞ்சியது என்று பொருள். உலகம் அனைத்தும் அழிந்த பின்னர் எஞ்சியிருப்பன் பெருமான் ஒருவன் தான் என்பதை உணர்த்தும்வண்ணம் சேடன் என்று பெருமான் அழைக்கப்படுகின்றார். சேடன் என்ற சொல் ச்ரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் என்று கருதினால் பெருமைமிக்கவன், பெரியவன் என்று உணர்த்தும் பொருட்களும் பொருத்தமாக உள்ளதை நாம் அறியலாம். சிந்தை மேய = தனது அடியார்களின் சிந்தைனையில் உறையும்.

பொழிப்புரை

உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து அருள் புரிந்த பெருமான், வேடன் உருவம் தாங்கி, தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை அணுகி அவனுக்கு பாசுபத அத்திரம் அருள் செய்தான். அனைத்து உலகங்களும் அழிந்த பின்னரும் எஞ்சி நிற்கும் பெருமை படைத்த அந்த இறைவன், தன்னை நினைந்துருகும் அடியார்களின் சிந்தைனையில் உறைகின்றான். தான் மிகவும் பெரியவனாக இருந்தாலும், அடியார்களுக்கு மிகவும் எளியவனாக உள்ள பெருமான் உறையும் வெண்காடு தலம் சென்று நெஞ்சமே, அவனை வழிபட்டு பயன் அடைவாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com