49. பண்காட்டி படியாய - பாடல் 10

அன்னைக்கு மீனாட்சி என்பது திருநாமம்

பாலை ஆடுவர் பன்மறை ஓதுவர்
சேலை ஆடிய கண் உமை பங்கனார்
வேலையார் விடம் உண்ட வெண்காடர்க்கு
மாலை ஆவது மாண்டவர் அங்கமே

விளக்கம்

பாலை ஆடுவர் = பாலில் நீராடுவார். சேலை ஆடிய = மீன் போன்ற கண்கள். வேலை = கடல். சிவபெருமானுக்கு விடம் அளித்த கடல் என்பதால் இகழ்ச்சி குறிப்பு தோன்ற ஆர் விகுதி சேர்க்கப்பட்டு வேலையார் என்று கடலினை அப்பர் பிரான் அழைக்கின்றார். மாண்டவர் அங்கமே = இறந்தவர்களின் எலும்புகள்; மீன் போன்ற கண்களை உடையவள் என்று அம்மையை அழைப்பது திருவிளையாடல் புராணத்தின் ஒரு பாடலை (தடாதகை பிராட்டியார் திருவவதாரப் படலம்) நினைவூட்டுகின்றது. செவ்வியுற = பக்குவம் அடையும்படி. அளியால் = கருணையால். ஆவி அன்னம் = தடாகத்தில் இருக்கும் அன்னங்கள். பூவை = நாகண வாய் பறவை. தெளியா = பொருள் அறியாத.

மதுரையில் கோயில்கொண்டுள்ள அன்னைக்கு மீனாட்சி என்பது திருநாமம். அங்கயற்கண்ணி என்று தமிழில் அழைக்கப்படுகின்றாள். மீனாட்சி என்பதற்கு மீன் போன்ற கண்களை உடையவள் என்று பொருள். மீனை உவமையாக கூறியது, கண்களின் தோற்றத்திற்கு மட்டுமல்ல, கண்களின் செயல்பாட்டிலும் மீனை ஒத்து அம்மை இருப்பதாக இந்த பாடலில் கூறப்படுகின்றது. கடலில் எப்போதும் நீந்திக்கொண்டே இருக்கும் மீன் எவ்வாறு தனது குஞ்சுகளை பொரிக்க இயலும். தனது முட்டைகளின் மீது தனது கண்களால் வெப்பத்தினை பாய்ச்சி, குஞ்சு பொரிப்பதாக பரஞ்சோதி முனிவர் இந்த பாடலில் கூறுகின்றார். அவ்வாறே அங்கயற்கண்ணி அன்னையும், தனது கண்களின் அருள் விழியாலே அடியார்களை பார்த்த வண்ணம் அருள் புரிகின்றாள் என்பது இந்த பாடலின் செய்தியாகும். சிறு குழந்தையாகிய தடாதகை பிராட்டி, அன்னம், மயில், பூவை, கிளி ஆகிய பறவைகளை வளர்ப்பதாக இந்த பாடலில் கூறப்படுகின்றது.

ஒளியால் உலகு ஈன்று உயிர் அனைத்து மீன் போல் செவ்வி
                    உற நோக்கி
அளியால் வளர்க்கும் அங்கயற்கண் அன்னே கன்னி அன்னமே
அளியால் இமவான் திருமகளாய் ஆவி அன்னம் மயில் பூவை
தெளியா மழலைக் கிளி வளர்த்து விளையாட்டு அயரும்
                                                                   செயல் என்னே

விடம் உண்ட பெருமானுக்கு மாலையாவது மாண்டவர் அங்கம் என்று நயமாக, விடம் உண்டவன் இறக்காமல் நிலையாக இருக்கும் தன்மையும், அமுதத்தினை உண்ட தேவர்கள், பிரமன் திருமால் இந்திரன் உள்ளிட்டோர் இறக்கும் தன்மையும் ஒரே இடத்தில் குறிப்பிடப்படும் நயம் ரசிக்கத்தக்கது.

பொழிப்புரை

பாலினில் விரும்பி நீராடும் சிவபெருமான் பல வேதங்களையும் ஓதுவார். மீன்கள் போன்ற கண்ணினை உடைய உமையம்மையைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றவர் சிவபெருமான். அவர் பாற்கடலிலிருந்து திரண்டெழுந்த விடத்தினை உண்டவர் ஆயினும் என்றும் இறவாது நிலையாக நின்று, இறந்தவர்களின் எலும்புகளை மாலையாக அணிந்து, என்றும் தான் ஒருவன்தான் உலகினில் நிலையாக உள்ளவன் என்பதை உணர்த்துகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com