50. தூண்டு சுடர்மேனி - பாடல் 1

சீர்காழியிலிருந்து கோலக்கா சென்ற


(திருவெண்காடு – திருத்தாண்டகம்)

முன்னுரை

சீர்காழியிலிருந்து கோலக்கா சென்ற அப்பர் பிரான், பல சோழ நாட்டுத் திருத்தலங்கள் சென்று பெருமானை தரிசனம் செய்ய ஆவல் கொண்டார். அப்பர் பிரான் திருவெண்காடு சென்றதாக, தனியாக பெரியபுராண குறிப்பு ஏதும் காணப்படவில்லை; என்றாலும், நனிபள்ளி முதலா பல தலங்கள் என்ற குறிப்பில் இந்த தலமும் அடங்கும் என்று பெரியபுராண உரை ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய இரண்டு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. அவற்றில் ஒன்றான திருத்தாண்டகப் பதிகத்தை நாம் இங்கே காண்போம். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் வெண்காடு மேவிய விகிர்தனாரே என்று முடிகின்றன.

ஆண்ட அரசு எழுந்தருளக் கோலக்காவை அவரோடும் சென்று
                இறைஞ்சி அன்பு கொண்டு
மீண்டு அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால்
             வேதநாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடூர் நீடு திருக்குறுக்கை
                திருநின்றியூரும்
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல்
               தொழுது வணங்கிச் செல்வார்

இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் இறைவனை விகிர்தன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். விகிர்தன் என்றால் மற்றவரிலிருந்து மாறுபட்டவன் என்று பொருள். தான் உண்ணும் உணவு (நஞ்சு), உறைவிடம் (காடு), உடுக்கும் உடை (தோலாடை), அணிகலன் (பாம்பு, ஏனக்கொம்பு, ஆமையோடு) உடலில் பூசும் பொடி (மயானத்து சாம்பல்), நடனமாடும் நேரம் (இரவு) நடமாடும் அரங்கு (காடு) ஏறும் வாகனம் (எருது) மற்றும் பல அம்சங்களில் வேறுபட்டு காணப்படும் இறைவனை விகிர்தா என்று அழைத்து அப்பர் பிரான் மகிழ்கின்றார். இவ்வாறு விகிர்தன் என்று அனைத்துப் பாடல்களிலும் அழைக்கும் பதிகங்கள் சில உள்ளன; வீழிமிழலையுள் விகிர்தனார் என்று அழைக்கும் அப்பர் பிரான், வீழிமிழலை நேரிசைப் பதிகத்தில் (4.64) தான் விகிர்தன் என்று அழைப்பதற்கான காரணங்களையும் கூறுகின்றார். வெண்ணித் தலத்தின் மீது அமைந்த பதிகத்தின் (6.59) அனைத்துப் பாடல்களிலும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனார் என்று பதிகத்தின் அனைத்துப் பாடல்களையும் முடிக்கின்றார். அப்பர் பிரானை பின்பற்றிய சுந்தரர், தனது வெஞ்சமாக்கூடல் பதிகத்தின் (7.42) அனைத்துப் பாடல்களிலும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா என்று அழைக்கின்றார்.

இவ்வாறு மாறுபட்டு காணப்படும் இறைவனின் மாறுபட்ட நிலைக்கு காரணங்களை ஆராய்ந்து அறிந்த அப்பர் நாயகி, இறைவனின் மீது தீராத ஆசை கொள்கின்றாள். இவ்வாறு மாறுபட்டுள்ள நிலைதான், பெருமான் மீது காதல் கொள்ளுமாறு அவளைத் தூண்டியதோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு, ஒவ்வொரு பாடலிலும் விகிர்தா என்று அழைத்து, மாறுபட்ட குணத்தினை வெளிப்படுத்தி, அத்தகைய இறைவன் தன்னைவிட்டு பிரிந்துவிட்டானே என்ற ஏக்கத்தையும் வெளிபடுத்துகின்றாள். அந்த ஆசை வெளிப் படுத்தப்படும் அகத்துறை பாடல்கள் கொண்ட பதிகமாகவும் இந்த பதிகம் திகழ்வது பதிகத்தின் மற்றொரு சிறப்பாகும். தான் இறைவனின் மீது வைத்துள்ள ஆசையினை புறக்கணித்த பெருமான் வெண்காடு தலத்தை அடைந்து அங்கேயே தங்கியதால், தான் வருத்தம் அடைந்ததையும் அப்பர் நாயகி இந்த பதிகத்தின் பாடல்களில் நமக்கு உணர்த்துகின்றாள்.

பாடல் 1

தூண்டு சுடர் மேனித் தூநீறாடிச் சூலம் கையேந்தி ஓர்
                சுழல்வாய் நாகம்
பூண்டு பொறி அரவம் காதில் பெய்து பொன் சடைகள் அவை
                தாழப் புரி வெண்ணூலர்
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடுந்தெருவே வந்து
            எனது நெஞ்சம் கொண்டார்
வேண்டு நடை நடக்கும் வெள்ளேறு ஏறி வெண்காடு மேவிய
                    விகிர்தனாரே

 

விளக்கம்

சுழல்வாய் நாகம் = சுழல்கின்ற நாக்கினை உடைய நாகம். தனது நாக்கினை அடிக்கடி பல கோணங்களில் வெளியே நீட்டுவது பாம்பின் இயல்பு. அந்த இயல்பு இங்கே உணர்த்தப்படுகின்றது. பொறி அரவம் = படத்தில் புள்ளிகளை உடைய பாம்பு. வேண்டு நடை நடக்கும் = பெருமான் விரும்பிய வண்ணம் நடக்கும் இடப வாகனம். வெண்ணீற்றினை தனது உடலில் பூசியவராய், பாம்பினை உடலில் சுற்றியவராய், பாம்பினை அணிகலனாக காதினில் அணிந்தவராய், தாழ்ந்த சடையினை உடையவராய், முன்னம் காலால் தேய்த்த சந்திரனை தலையில் சூடியவராய், எருதினை வாகனமாக உடையவராய், உலகியலுக்கு மாறுபட்ட தன்மை கொண்ட இறைவனை மிகவும் பொருத்தமாக விகிர்தனார் என்று அப்பர் பிரான் அழைப்பதை நாம் இந்த பாடலில் உணரலாம். இவ்வாறு மாறுபட்ட கோலத்தில் காட்சி அளித்தமை தான், அப்பர் நாயகியின் நெஞ்சத்தை கொள்ளை கொள்வதற்கு காரணமாக அமைந்ததோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

பொழிப்புரை

தூண்டப்பட்ட விளக்கின் ஒளியினைப் போன்று பிரகாசிக்கும் திருமேனியில் முழுவதும் திருநீறு பூசியவராய், கையினில் சூலத்தினை ஏந்தியவராய், தனது நாக்கினை அடிக்கடி சுழற்றும் இயல்பினை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் சுற்றியவராய், படத்தினில் புள்ளியினை உடைய பாம்பினைத் தனது காதில் அணிகலனாக அணிந்தவராய், பொன்னின் நிறத்தில் மிளிரும் சடைகள் தாழ்ந்த நிலையில் உள்ளவராய், மார்பினில் வெண்ணூல் பூண்டவராய், நீண்ட காலமாக சந்திரனைத் தனது சடையில் சூடியவராய் காணப்படும் சிவபெருமான், நீண்ட தெருவின் வழியாக நான் இருக்கும் இடத்திற்கு வந்தார். அவ்வாறு வந்த அவர், எனது நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டார். இவ்வாறு எனது நெஞ்சத்தைக் கொள்ளை கொண்ட பெருமான், சிறிது நேரம் கூட என்னுடன் இராமல், தனது விருப்பத்தை புரிந்துகொண்டு நடக்கும் தன்மை வாய்ந்த இடப வாகனத்தின் மீதேறி வெண்காடு தலத்திற்கு விரைந்து சென்று அங்கேயே தங்கிவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com