67.மாயிரு ஞாலம் எல்லாம் - பாடல் 9

பூமியை வெளிக்கொணர்ந்த
67.மாயிரு ஞாலம் எல்லாம் - பாடல் 9

    பானமர் ஏனமாகிப் பார் இடந்திட்ட மாலும்
    தேன் அமர்ந்து ஏறும் அல்லித் திசைமுகம் உடைய கோவும்
    தீனரைத் தியக்கு அறுத்த திருவுரு உடையார் போலும்
    ஆனரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே

விளக்கம்

தீனர் = இறைஞ்சி வழிபடுவோர். துயக்கு = துயரம். அல்லி = ஒன்றின் மேல் ஒன்றாக இதழ்கள் அடுக்கப்பட்ட மலர். இங்கே தாமரையை குறிக்கும். பான் = பத்து. பானமர் = பான்+அமர், பத்து அவதாரங்களில் ஒன்றாகிய. இரண்யாக்ஷன் என்ற அரக்கனால் கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூமியை வெளிக்கொணர்ந்தவர் திருமால். அத்தகைய வல்லமை வாய்ந்த திருமால், பன்றியாக மாறி நிலத்தைத் தோண்டி கீழே சென்ற போதும் அவரால், சிவபெருமானின் திருவடியைக் காண முடியவில்லை என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. திருமால் மற்றும் பிரமனின் மயக்கத்தைத் தீர்த்ததாக இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தாங்கள் இருவரும் சிவபெருமானை விட பெரியவர் என்ற மயக்கத்தில் ஆழ்ந்து, தங்களில் யார் உயர்ந்தவர் என்று ஒருவருக்கொருவர் வாதம் செய்துகொண்டு இருந்தபோது அவர்களின் முன்னே தோன்றிய சோதியின் அடியையும் முடியையும் காண முடியாமல் தவித்த பின்னர் அவர்களது மயக்கமும் தீர்ந்தது. இந்த நிலை இங்கே அப்பர் பிரானால் குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை

பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரம் எடுத்து, கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பூமியை வெளிக்கொணர்ந்த திறமை வாய்ந்த திருமாலும், தேன் நிறைந்து காணப்படுவதும், ஒன்றின் மேல் ஒன்றாக இதழ்கள் அடுக்கப்பட்ட தாமரை மலரின் மேல் அமரும் திசைமுகன் என்று அழைக்கப்படும் பிரமனும், தங்களால் முடிந்த முயற்சிகள் செய்த போதிலும், சோதிப் பிழம்பாக எழுந்த சிவபிரானின் அடியையோ அல்லது முடியையோ காண முடியாமல் துயருற்று இருந்தார்கள். அப்போது சிவபெருமான் அவர்கள் முன்னே தோன்றி. அவர்களின் துயரத்தைத் தீர்த்ததும் அன்றி, அவர்களின் மயக்கத்தையும் போக்கினார். அவர் வெண்மை நிறம் கொண்ட காளையை வாகனமாக ஏற்றுள்ளார். அவர்தான் ஆவடுதுறை தலத்தில் உறையும் பெருமான் ஆவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com