68.மஞ்சனே மணியும் ஆனாய் - பாடல் 1

வாழ்நாளின் கடைப்பகுதியில்
68.மஞ்சனே மணியும் ஆனாய் - பாடல் 1

முன்னுரை
இந்த பதிகத்தின் முதல் பாடலில், தான் இறக்கும் சமயத்தில் இறைவன் துணையாக நிற்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து, அடுத்து வரும் நான்கு பாடல்களில் அவ்வாறு இறைவன் தனக்கு அஞ்சேல் என்று சொல்வதற்கு ஏற்ற தகுதியைத் தான் பெற வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுகின்றார். நமக்கும் இத்தகைய ஆசைகள் இருப்பது நியாயம் என்பதால், இந்த ஆசைகள் நிறைவேற நாம் தினமும் சொல்ல வேண்டிய பதிகமாக கருதப்படுகின்றது. 


    மஞ்சனே மணியும் ஆனாய் மரகதத் திரளும் ஆனாய்
    நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினானே
    துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று
    அஞ்சல் என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே

விளக்கம்:
மஞ்சன் = மைந்தன் என்ற சொல்லின் திரிபு. மைந்தன் என்பதற்கு மகன் என்ற பொருளும் வலிமை மிக்கவன் என்ற பொருளும் உண்டு. நமது இறுதிக் காலத்தில் இறைவனது அருள் இருக்கவேண்டும் என்று கோரும் இந்த பாடல் நாம் தினமும் சொல்ல வேண்டிய திருப்பாடல்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. நமது உடலுக்கு வெளியே இருப்பவர் எவராலும் நமது உள்ளத்துள் புகுந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. உயிருக்கு உயிராக நம்முடன் கலந்து இருப்பவன் இறைவன் என்பதால், அவன் ஒருவனால்தான், நமது நெஞ்சத்தில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே இறைவன்பால் நமது சிந்தனைகள் செல்லாமல் இருக்கும் சமயத்திலும், இறைவன் அருள் பாலித்தால், நமது நெஞ்சத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, இறைவனைப் பற்றிய சிந்தைனையில் நாம் ஈடுபடமுடியும். அதனால்தான் மணிவாசகர் அவன் அருளாலே அவன் தான் பணிந்து என்று சிவபுராணத்தில் கூறுகின்றார். இதே கருத்துதான் அப்பர் பிரானால் இங்கே கூறப்படுகின்றது.

துஞ்சுதல் என்றால் பொதுவாக உறங்கும் நிலையை குறித்தாலும், இலக்கியங்களில் மங்கல வழக்காக, துஞ்சுதல் என்ற சொல், மீளா தூக்க நிலையாகிய, இறப்பினை குறிக்கும். உறக்கத்தினை, இறப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டவே, உறக்கத்தினை துஞ்சுதல் என்று கூறாமல், கண் வளர்தல் என்று இலக்கியங்களில் கூறுவார்கள். தாலாட்டுப் பாடல்களில் கண் வளராய் என்று பாடுவதை நாம் அறிவோம். இறக்கும் தருவாயில், நமது புலன்கள் ஒவ்வொன்றாக செயலிழிக்கும் நேரத்தில், சிவபிரானைப் பற்றிய நினைவு நமது நெஞ்சினில் தோன்ற வேண்டும் என்றால் இறைவனின் அருள் இருத்தல் மிகவும் அவசியம்.

எனவேதான் பல பாடல்களில் இறக்கும் சமயத்தில் இறைவனின் நினவு தனக்கு வர வேண்டும் என்றும், அந்த சமயத்தில் இறைவன் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுகோள் விடுக்கின்றார். நாமும் அவ்வாறே இருக்க வேண்டும் என்பதால்தான், அங்கமாலை பதிகத்தில், இறக்கும் சமயத்தில் நமது உற்றவராக இறைவன் ஒருவன்தான் இருக்க முடியும் என்பதனை நமக்கு உணர்த்துகின்றார்.
    
உற்றார் ஆர் உளரோ உயிர்கொண்டு போம் பொழுது
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர்
                                                                                                      உளரோ 

தான் இறக்கும் சமயத்தில், தான் இறைவனை நினைக்க மறந்தாலும், இறைவன் தன்னை கைவிடாது கண்டுகொண்டு, அருள் புரிய வேண்டும் என்ற வேண்டுகோள் வீழிமிழலை பதிகத்தின் (4.95.10) கடைப் பாடலிலும் விடுக்கப்படுகின்றது, இந்த பாடலில் சிவபிரானின் திருவடி செய்த இரண்டு செயல்கள், அரக்கன் இராவணனின் வலிமையை அடக்கியது மற்றும் காலனை உதைத்து வீழ்த்தியது ஆகிய இரண்டு செயல்கள் குறிப்பிடப்படுகின்றன.

    கறுக்கொண்டு அரக்கன் கயிலையைப் பற்றிய கையும்
                                                                                   மெய்யும்
    நெறுக்கென்று இறச் செற்ற சேவடியால் கூற்றை நீறு
                                                                                  செய்தீர்
    வெறிக் கொன்றை மாலை முடியீர் விரிநீர் மிழலை
                                                                                  உள்ளீர்

    இறக்கின்று நும்மை மறக்கினும் என்னைக்
                                                                                 குறிக்கொண்மினே

இறைவன், தனது வாழ்நாளின் கடைப்பகுதியில் கண்டுகொண்டு அருள் வேண்டும் என்று இங்கே வேண்டும் அப்பர் பிரான், அந்த இறைவன் நம்மை கைவிட்டால் என்ன ஏற்படும் என்ற எச்சரிக்கையினை மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில் (5.90.4) விடுத்து நமக்கு அறிவுறுத்துவதை நாம் உணரலாம். மற்றவர்க்கு நஞ்சாக இருந்த ஆலகால விடம், சிவபிரானுக்கு அமுதமாக மாறியதால், கடலில் எழுந்த நஞ்சமுது என்று நயமாக இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். 
    
    நடலை வாழ்வு கொண்டு என் செய்தீர் நாணிலீர்
    சுடலை சேர்வது சொல் பிரமாணமே
    கடலின் நஞ்சமுது உண்டவர் கைவிட்டால்
    உடலார் கிடந்து ஊர் முனி பண்டமே. 


இறைவன் அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுவது நமக்கு திருவாசகம் ஆசைப் பத்து பதிகத்தின் கடைப் பாடலை நினைவூட்டுகின்றது. அஞ்சேல் என்று சொல்வதற்கு தக்க துணையாக எவரையும் காணாத மணிவாசகர், சிவபெருமான் ஒருவர்தான் அத்தகைய துணைவர் என்பதை நமக்கு இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
    
     வெஞ்சேல் அனைய கண்ணார் தம் வெகுளி வலையில்
                                                                                                  அகப்பட்டு
    நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நான் ஓர் துணை
                                                                                                  காணேன்
    பஞ்சேர் அடியாள் பாகத்து ஒருவா பவளத் திருவாயால்
    அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே


இதே கருத்து ஒரு திருமந்திரப் பாடலிலும் கூறப்படுகின்றது. நாம் இறக்கின்ற தருவாயில் சிவபிரானை நினைத்தால் பிறவித்துன்பம் இல்லாமல் நமக்கு பேரின்ப வாழ்வு கிடைக்கும் என்று திருமூலர் கூறுகின்றார். எப்போதும் உடம்பை விட்டு பறந்தோடிவிட தயாராக இருக்கும் உயிர்ப்பறவை, நமது உடலை விட்டு பறந்து போவதற்கு முன்னர், நாம் இந்த உலகினில் வாழ்ந்த பயனை அடைய விரும்பினால் ஈசனை நினைக்க வேண்டும் என்று திருமூலர் கூறுவதை நாம் இங்கே காணலாம்.
    
    பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
    இறக்கின்ற காலத்து ஈசனை உள்கும்
    சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
    பிறப்பொன்று இலாமையும் பேருலகு ஆமே

பொழிப்புரை:
ஆவடுதுறைப் பெருமானே, மிகுந்த வலிமை உடையவனே, மாணிக்கம் போன்று ஒளி வீசுபவனே, மரகத மணிக் குவியல் போன்று பிரகாசிப்பவனே, அடியேன் உன்னை நினைக்குமாறு, எனது உள்ளத்தினுள் புகுந்து அருள் புரிபவனே, நான் இறக்கும் தருவாயில் நீ எனக்குத் துணையாக இருந்து, அஞ்சேல் என்ற உறுதிமொழி அளித்து அருள்புரிய வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com