68.மஞ்சனே மணியும் ஆனாய் - பாடல் 4

68.மஞ்சனே மணியும் ஆனாய் - பாடல் 4

உண்மையான ஏக்கத்தை

    பெருமை நன்றுடைய தில்லை என்று நான் பேச மாட்டேன்
    ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏற மாட்டேன்
    கருமை இட்டாய ஊனைக் கட்டமே கழிக்கின்றேன் நான்
    அருமையா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே

விளக்கம்:
கருமை = ஆணவ மலம். உயிரின் உண்மையான ஏக்கத்தை புரிந்துகொண்டு, உண்மையான மெய்பொருள் ஆகிய சிவபெருமானை நினைக்காமல், ஆணவ மலத்தால் செயல்படுத்தப் படும் ஐம்பொறிகளின் தேவைகளை நிறைவேற்றும் உடலின் தன்மையைக் கண்டு உயிர் வருத்தம் அடைவது இங்கே குறிப்பிடப்படுகின்றது. அருமையா நஞ்சம் = உண்ண முடியாத நஞ்சு. தனது வருத்தத்தை எடுத்துக் கூறும் அப்பர் பிரான், தனது துயரத்தைத் தீர்க்குமாறு இறைவனிடம் வேண்டுவது இங்கே குறிப்பால் உணர்த்தப்படுகின்றது. முந்தைய பாடலிலும் தனது நிலையை இறைவனுக்கு உணர்த்தி அப்பர் பிரான் வருந்துவதை நாம் கண்டோம். 

தில்லையம்பதியின் சிறப்பு இந்த பாடலில் கூறப்படுகின்றது. தில்லை நகரம் இருக்கும் திசை நோக்கித் தொழுதால், நமக்கு தொல்லை தரும் வினைகள் நம்மை விட்டு விரைவாக ஓடும் என்று அன்னம் பாலிக்கும் என்று தொடங்கும் பதிகத்தில் (5.1.9) குறிப்பிடும் அப்பர் பிரான் தில்லையின் பெருமையை நாம் பேச வேண்டும் என்பதை உணர்த்துகின்றார். 
    
    வில்லை வட்டப்பட வாங்கி அவுணர் தம்
    வல்லை வட்டம் மதில் மூன்றுடன் மாய்த்தவன்
    தில்லை வட்டம் திசை கை தொழுவார் வினை
    ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே

தில்லையின் சிறப்பு வேதங்களால் கூறப்பட்டு தொழப்படுகின்றது என்று மணிவாசகர், கண்டப்பத்து என்ற பதிகத்தின் கடைப் பாடலில் கூறுகின்றார். வேதங்களால் போற்றப்படும் தில்லையின் பெருமையைப் பேசுவதை நமது கடமையாக கொள்ள வேண்டும் என்ற கருத்தினை அப்பர் பிரான் இங்கே வெளிப்படுத்துகின்றார். 
    
    பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
    பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
    கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
    வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லை கண்டேனே 

பொழிப்புரை:
உண்ணுதற்கு அரிய, எவரும் உண்ணமுடியாத நஞ்சினை உண்டு தேவர்களைக் காப்பாற்றி அருள் புரிந்த ஆவடுதுறை இறைவனே, அடியேன் பெருமைகள் பல படைத்த தில்லை நகரை பற்றிப் பேசி புண்ணியத்தை தேடிக்கொள்ளமாட்டேன். ஒன்றுபட்ட உள்ளத்தால் உன்னை நினைந்து, மகிழ்ந்து பேசி, வீடுபேற்றினை அடைந்து உய்யும் வழியினில் செல்லமாட்டேன். கருமையான மலம் என்று சொல்லப்படும் ஆணவ மலத்தால் கட்டுண்ட உடலினால் எனது வாழ்க்கையை மிகவும் துயரத்துடன் கழிக்கின்றேன். சிவபெருமானே நீதான் என்னை காப்பாற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com