63. மூவிலை நற்சூலம் வலன் - பாடல் 7

கஞ்சனூர் தலத்தை ஆளும்

நாரணனும் நான்முகனும் அறியாதானை நால்வேதத்து
        உருவானை நம்பி தன்னைப்
பாரிடங்கள் பணி செய்யப் பலி கொண்டு உண்ணும்
      பால்வணனைத் தீவணனைப் பகல் ஆனானை 
வார் பொதியும் முலையாள் ஓர் கூறன் தன்னை மான் இடம்
        கை உடையானை மலிவார் கண்டம்
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்
        கண்ணாரக் கண்டு உய்ந்தேனே

விளக்கம்

பாரிடங்கள் = பூதங்கள். தான் விரும்பும் பணியினைச் செய்வதற்கு பூத கணங்கள் இருந்த போதிலும், உலகெங்கும் திரிந்து தானே பலி ஏற்பது பரமனின் செயல். அடியார்கள் தான் ஏந்திச்செல்லும் பிச்சைப் பாத்திரத்தில் தங்களுடைய மலங்களை பிச்சையாக இட்டால் அதனை ஏற்று அவர்களை உய்விக்கும் திறன் படைத்தவன் அவன் ஒருவன் தான் என்பதால், இந்த பணிக்கு வேறு எவரையும் நியமிக்காமல் தானே இறைவன் செல்கின்றான் என்பது பெரியோர்களின் விளக்கம். நம்பி = ஆடவருள் சிறந்தவன்.

பொழிப்புரை

திருமாலும் பிரமனும் காணமுடியாத வகையில் தீப்பிழம்பாக மண்ணுக்கும் விண்ணுக்கும் நிறைந்து நின்றவனும், நான்கு வேதங்களிலும் காணப்படும் மந்திரத்தின் உருவாக அமைந்தவனும், ஆடவருள் சிறந்தவனும், தான் இட்ட பணியைத் தங்கள் தலை மேல் ஏற்றுச் செய்ய வல்ல பூத கணங்கள் இருந்தும், உயிர்கள் பால் கொண்டுள்ள கருணையால் தானே உலகெங்கும் திரிந்து பலி கொள்வானும், உடலெங்கும் திருநீறு பூசியமையால் வெண்மை நிறத்துடன் காணப்படுபவனும், கொழுந்து விட்டெரியும் தீ போன்று சிவந்த திருமேனியை உடையவனும், சூரியனாகத் திகழ்பவனும், கச்சு பொதிந்த மார்பகங்களை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், தாருக வனத்து முனிவர்கள் ஏவிய மானின் முரட்டுத் தன்மையை மாற்றித் தனது இடது கையில் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தவனும், நஞ்சினை உண்டதால் கருமை நிறம் மலிந்து காணப்படும் கழுத்தினை உடையவனும். கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com