64. நெற்றி மேல் கண்ணினானே - பாடல் 8

பசுக்கொலை போன்ற கொடிய

ஏவடு சிலையினானே புரம் அவை எரி செய்தானே 
மாவடுவகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே
ஆவடுதுறை உளானே ஐவரால் ஆட்டப்பட்டேன்
கோவடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே

விளக்கம்

கோவடு குற்றம் = புலன்களின் கட்டுபாட்டில் இருந்து செய்த குற்றங்கள். கோவடு குற்றம் என்பதற்கு கோவினை அட்ட குற்றம் என்று பிரித்துக்கொண்டு, பசுவினை கொன்றதற்கு சமமான கொடிய குற்றங்கள் என்று பொருள் கொள்வார்கள். ஏ = அம்பு. அடு = கொல்லும் தன்மை உடைய. சிலை = வில், வில்லாக வளைக்கப்பட்ட மேரு மலை. மாவடு வகிர் கொள் கண்ணாள் = பிளவுபட்ட மாவடுவைப் போன்ற கண்கள்.

பொழிப்புரை

அடுத்தவரைக் கொல்லும் தன்மை கொண்ட கூர்மையான அம்பினை வில்லாக வளைக்கப் பட்ட மேரு மலையில் பொருத்தி, பறந்துகொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் எரித்தவனே, பிளந்த மாவடு போன்று அழகாக வளைந்து காணப்படும் கண்களை உடைய உமை அம்மையைத் தனது உடலினொரு பாகத்தில் கொண்டவனே, ஆவடுதுறையில் உறையும் இறைவனே, ஐந்து பொறிகளின் ஆளுமையில் சிக்குண்ட அடியேன், பசுக்கொலை போன்ற கொடிய குற்றங்களையும் செய்யும் தன்மையில் உள்ளேன். கோடிகா தலத்தின் தலைவனாக விளங்கும் இறைவனே, நீ தான் அத்தைகைய குற்றங்கள் அடியேன் செய்யாதவாறு காப்பாற்ற வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com