65. சங்குலா முன்கைத் தையல் - பாடல் 3

தில்லைக் கூத்தனின் சிரிப்பு

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்றில்லையே

விளக்கம்

முல்லை நன் முறுவல் = முல்லை அரும்பினை ஒத்த பற்களைக் கொண்டு புன்முறுவல் பூக்கும் உமை அம்மை. முல்லை என்பது ஐவகை நிலங்களில் ஒரு வகை. காட்டையும் காடு சார்ந்த இடத்தையும் முல்லை என்று அழைப்பார்கள். கொல்லை = முல்லை நிலம். இறைவனை நினைத்தால் நமது வாழ்வினில் ஊனம் ஏதும் இருக்காது என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துவது நமக்கு தில்லைப் பதிகத்தின் பாடல் ஒன்றினை நினைவுக்கு கொண்டுவருகின்றது (4.81.2). தனக்கு மரணம் வெகு விரைவினில் நேர இருக்கின்றது என்பதையும் மறந்து மனம் ஒன்றி இறைவனை வழிபட்ட சிறுவன் மார்க்கண்டேயனின் பொருட்டு, இறைவன் சிறுவனின் உயிரினைக் கவர வந்த காலனை உதைத்தான். எனவே மனம் ஒன்றி வழிபடுவதால், நமக்கு வாழ்வினில் எந்த விதமான குறையும் ஏற்படாத வண்ணம் இறைவன் காப்பாற்றுவான் என்பதை அப்பர் பிரான் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். தன்னை அனைத்து உயிர்களும் வந்தடைய வேண்டும் என்று விரும்பும் இறைவனின் விருப்பம், நாம் அவனைச் சென்று தொழுவதால் ஈடேறுவதால், புன்முறுவலுடன் என்று வந்தாய் என்று கேட்கும் விதமாக தில்லைக் கூத்தனின் சிரிப்பு உள்ள நிலையை, நாம் ஒன்றி அவனை வழிபடுவதன் மூலம் உணர முடியும் என்றும் அப்பர் பிரான் இங்கே கூருகின்றார். தில்லை காண முக்தி என்று கூறும் பெரியோர்களின் சொல்லுக்கு ஏற்ப, தில்லை கூத்தபிரானின் நடனக் கோலத்தைக் காணப் பெற்றவர்கள் முக்தி அடைந்தால் அவர்கள் சென்று சேரும் இடம் பெருமானின் திருவடிகள் தாமே. 

ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனம் இல்லை
கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான் திருக்குறிப்பே 

வேறு எவரும் அளிக்க முடியாத முக்திச் செல்வத்தை அளிக்கும் பெருமான் என்பதால் அப்பர் பிரான் இங்கே இறைவனை செல்வனார் என்று அழைக்கின்றார். செல்வர் என்று பல தேவாரப் பாடல்களில் இறைவன் அழைக்கப்படுகின்றார். பராய்த்துறை பதிகத்தின் கடைப் பாடலில் (1.135.11) இறைவனை செல்வர் என்று சம்பந்தர் அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். பொருட் செல்வம் நிறைந்து காணப்படும் பராயத்துறை தலத்தில் சிவஞானச் செல்வர்கள் வாழ்கின்றார்கள் என்று உணர்த்தும் ஞான சம்பந்தர், பராயத்துறை செல்வர் மேல் தான் அருளிய அழிவற்ற இந்த பாடலை பாடினால், இவ்வுலகில் அனைத்துச் செல்வமும் பெற்று, மறுவுலகில் முக்திச் செல்வமும் அடையலாம் என்று உணர்த்துகின்றார். பெருமானின் அருளைப் பூரணமாக பெற்ற அருட்செல்வரின் வழியை நாம் பின்பற்றுவோமாக. 

செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறை 
செல்வர் மேல் சிதையாதன
செல்வன் ஞான சம்பந்தன செந்தமிழ்
செல்வமாம் இவை செப்பவே

பொழிப்புரை

முல்லை அரும்புகள் போன்று வெண்மை நிறத்தில் அழகாக காணப்படும் பற்களைக் கொண்டு புன்முறுவல் பூக்கும் உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான், தில்லை அம்பலத்தில் உறைகின்றார். அவர் அனைத்துச் செல்வங்களிலும் மிகவும் உயர்ந்ததாகிய வீடுபேறு எனப்படும் செல்வத்தை உடையவர் ஆவார். முல்லை நிலத்திற்கு உரிய எருதினைத் தனது வாகனமாக ஏற்ற, அவரை விரைந்து உடனே நாம் கோடிகாவா என்று அழைத்து புகழ்ந்தால், நமது வாழ்வினில் எந்த விதமான குறையும் ஏற்படாது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com