65. சங்குலா முன்கைத் தையல் - பாடல் 6

தில்லைத் தலத்தின் மீது அருளிய

நாடி நாரணன் நான்முகன் வானவர்
தேடி ஏசறவும் தெரியாததோர்
கோடிகாவனைக் கூறாத நாளெலாம்
பாடி காவலில் பட்டுக் கழியுமே

விளக்கம்

இறைவனின் திருநாமத்தை, அவனது புகழினைக் கூறாத நாட்கள் எல்லாம் வீணடிக்கப்பட்ட நாட்கள் என்பதால், அந்த குற்றத்திற்காக நமக்கு தண்டனை வாங்கித் தரும் நாட்கள் என்று அந்த நாட்களை அப்பர் பிரான் குறை கூறுகின்றார். இறைவனின் திருநாமத்தைக் கூறாத நாட்கள் வீணாக கழிந்த நாட்கள் என்று அப்பர் பிரான் கூறுவது, அவர் தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தினை (6.01) அரியானை அந்தணனை என்று தொடங்கும் பதிகத்தினை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான், பெரும்பற்றப் புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். 

அரியானை அந்தணர் தம் சிந்தையானை அருமறையின்
           அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத்
        தேவர்கள் தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக்
            குலவரையை கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத
                    நாளெல்லாம் பிறவா நாளே

சிவபெருமான், தங்களது முயற்சியால் கண்டுகொள்ளலாம் என்று நினைப்பவர்க்கு (அவர்கள் எவ்வளவு தகுதி படைத்திருந்தாலும்), அவன் மிகவும் அரியவன்; பரம்பரை பரம்பரையாக, தங்களைத் தில்லை சிற்றம்பலத்து இறைவனின் திருப்பணியில் ஈடுபடுத்திக் கொண்ட அந்தணர்களின் சிந்தையில் வசிப்பவன்; சிறப்பான வேதங்களின் உட்பொருளாக உள்ளவன், பகுத்துப் பார்க்க முடியாத அணுவினும் நுண்ணியன், தங்களது முயற்சியால் எவரும் உணரமுடியாத மெய்ப்பொருள், தேன் போலும் பால் போலும் மிகவும் இனிமையாக இருப்பவன், சுயம் பிரகாசமாக தானே ஒளிரும் ஒளியான்; திருமாலாகவும் பிரமனாகவும் தீயாகவும் காற்றாகவும் ஒலிக்கும் கடலாகவும், உயர்ந்த மலைகளாகவும் உடன் இருந்து செயல்படுபவன்; இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபெருமான் பெரும்பற்றப் புலியூர் என்று அழைக்கப்படும் தில்லையில் உறைகின்றான். அவனது புகழினைப் பேசாத நாட்கள் எல்லாம் பயனற்ற நாட்களாகும், என்பதே இந்த பாடலின் திரண்ட கருத்தாகும். 

இந்த பாடல் நமக்கு ஞானசம்பந்தர் அருளிய திருப்புகலூர் பதிகத்தின் ஒரு பாடலை (2.115.4) நினைவூட்டும். இந்த பதிகத்தில் சம்பந்தர், இறைவனை வழிபடும் அடியவர்கள், இறைவனை நினைக்காத நாட்களை, இறைவனைப் பற்றி பேசாத நாட்களை பயனில்லாத நாட்கள் என்று கருதுவார்கள் என்று கூறுகின்றார். பூவும் நீரும் கொண்டு இறைவனை வழிபட்டு, நாவினால் அவனது புகழினை பாடும் அடியார்கள் அவனது புகழைத் தவிர தங்கள் செவிகளால் வேறு எதனையும் கேளார் என்று கூறுகின்றார். 

பூவும் நீரும் சுமந்து புகலூரையே
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார் செவித்துளைகளால் 
யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள் தாம்
ஓவும் நாளும் உணர்வொழிந்த நாள் என்று உள்ளம்                                         கொள்ளவே 

திருவே என் செல்வமே என்று தொடங்கும் பதிகத்தின் கடைப் பாடலில் (ஆவடுதுறை பதிகம் - 6,47.10), சிவபிரானின் திருவருளைப் பற்றி பேசாத நாளெல்லாம் பிறவா நாள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். 

துறந்தார் தம் தூநெறிக் கண் சென்றேன் அல்லேன்                       துணைமாலை சூட்ட நான் தூயேன் அல்லேன்     
பிறந்தேன் நின் திருவருளே பேசின் அல்லால் பேசாத
        நாளெல்லாம் பிறவா நாளே
செறிந்தார் மதில் இலங்கைக் கோமான் தன்னைச் செருவரைக்
    கீழ் அடர்த்து அருளிச் செய்கை எல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண் துறை
        உறையும் அமரர் ஏறே

உலகப் பற்றினைத் துறந்து வாழும் அடியார்கள் காட்டிய வழி செல்லாவிட்டாலும் பரவாயில்லை, இறைவனுக்கு மலர் மாலைகள் சூட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை, இறைவனது திருவருளைப் பேசாத நாட்கள் எல்லாம் பயனற்ற நாட்கள் என்று கணக்கிட்டு, அவரது திருவருளைப் புகழ்ந்து பேசி நமது வாழ்நாட்களை கழித்தாலே போதும்; அஞ்சேல் என்று இறைவன் சொல்ல வேண்டும் என்ற விண்ணப்பம் வைப்பதற்கு நமக்கு தகுதி ஏற்படும் என்பதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். வேண்டும் அடியார்க்கு வேண்டுவது ஈயும் கருணை உள்ளம் படைத்தவன் அல்லவா சிவபிரான். எனவே இறைவனிடம் அஞ்சேல் என்று வேண்டும் தகுதி அடைவதற்கு நாமும் இன்று முதல் சிவபிரானின் புகழினைப் பேசி நமது வாழ்நாட்களைக் கழித்து, நமது உயிர் உய்யக்கூடிய வழியினில் செல்வோமாக. 

சுந்தரரும் தனது நமச்சிவாயப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.48.2) பெருமானை நினைப்பதற்கு மறந்த நாட்களை நான் அழிந்த நாட்களாக கருதுவேன் என்று கூறுவதை நாம் உணரலாம். நட்டவா = நட்பு பூண்டவனே, தோழமை பூண்டவனே.

இட்டன் உன்னடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல்                                     காவிரி
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து                                     பாண்டிக்கொடுமுடி
நட்டவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா                                     நமசிவாயவே 

பொழிப்புரை

திருமாலும் நான்முகனும் வானவர்களும் உன்னைத் தேட முற்பட்டு, உன்னைக் காண முடியாமல் வருந்தினார்கள். அத்தகைய திறம் வாய்ந்த பெருமானை, கோடிக்காவனை கூறாத நாட்கள் வீணாக கழித்த நாட்களாக கருதப்பட்டு, அதற்குரிய தண்டனையை எமனுலகத்தில் அடையும். எனவே அனுதினமும் கோடிக்காவா என்று அவனது திருநாமத்தைக் கூறுவீர்களாக. . 

***
பாடல்கள் 7, 8, 9 சிதைந்துவிட்டன 
***
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com