65. சங்குலா முன்கைத் தையல் - பாடல் 10

கயிலாய மலையினை பேர்த்து

***
பாடல்கள் 7, 8, 9 சிதைந்துவிட்டன 
***

வரங்களால் வரை எடுத்தான் தனை
அரங்க ஊன்றி அருள் செய்த அப்பன் ஊர்
குரங்கு சேர் பொழில் கோடிகாவா என
இரங்குவேன் மனத்து எதங்கள் தீரவே 

விளக்கம்

அரங்க = கெடுமாறு. ஏதங்கள் = குற்றங்கள். இரங்குதல் = இறைவனை நினைந்து மனம் உருகி மனம் நையும் நிலையினை அடைதல். மனதினில் உள்ள குற்றங்கள் நீங்கினால், நமது மனம் சுத்தம் அடைவதுடன், நமது சொற்கள், செயல்கள் ஆகியவையும் மாசுகள் நீங்கி நல்லவையாக அமையும். 

பொழிப்புரை

பிரமனிடம் பெற்ற வரங்களால், வலிமை மிகுந்தவனாக விளங்கிய அரக்கன் இராவணன், தனது வலிமை மீது அதிக நம்பிக்கை உடையவனாய், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்தபோது, அவனது வலிமை கெடும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலை மலையில் ஊன்றி, அரக்கனின் வலிமையை கெடுத்து, பின்னர் அரக்கன் தன்னைப் புகழ்ந்து சாமகானம் பாடியதால் மகிழ்ந்து அவனுக்கு பல வரங்கள் அளித்தவனும், அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக இருந்து காப்பவனும் ஆகிய பெருமான் உறையும் ஊர் யாதெனில், பலவகையான கனிகளைக் கொண்ட மரங்கள் நிறைந்து செழித்து காணப்படுவதால், குரங்குகள் அதிகமாக நடமாடும் சோலைகள் நிறைந்த கோடிகா தலமாகும். இவ்வாறு பெருமை வாய்ந்த இறைவனின் திருநாமத்தை மறுபடியும் மறுபடியும் மனதினில் நினைத்து, உருகி, மனம் நைதலையும் பொருட்படுத்தாமல் அடியேன் இருப்பேன். அவ்வாறு இருக்கும் எனது மனதினில் உள்ள குற்றங்கள், மாசுகள் களையப்பட்டு, நான் இறைவனிடம் சென்று சேர்வதற்கான தகுதியினை அடைவேன். 

முடிவுரை
கா என்றால் சோலை என்று பொருள். கா என முடியும் ஐந்து தலங்களில் இந்த தலம் ஒன்று. அவை ஆவன கோடிக்கா, கோலக்கா, நெல்லிக்கா, ஆனைக்கா மற்றும் குரக்குக்கா. பொருப்பள்ளி வரை வில்லா எனத் தொடங்கும் அடைவு திருத்தாண்டகப் பதிகத்தில் ஆறு, கா, குளம், களம் என முடியும் தலங்களை பட்டியல் இட்டு காட்டும் அப்பர் பிரான் இந்த தலத்தின் பெயரையும் அந்த பதிகத்தின் பத்தாவது பாடலில் குறிப்பிட்டு உள்ளார். இந்தப் பாடலில் வரும் கோட்டாறு, நாலாறு, தெள்ளாறு, வளைக்குளம், தனிக்குளம், இடைக்குளம், திருக்குளம், என்பன வைப்பு தலங்களாகும்.

நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு நலம் திகழும்
            நாலாறும் திருவையாறும்
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல் இடைக்குளமும்
            திருக்குளத்தோடு அஞ்சைக்களம்
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்காஞ
            ஆனைக்கா வியன் கோடிகா 
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என
                அனைத்தும் கூறுவோமே

இறைவனின் நாமத்தை கூறுவதால், வேறு எங்கும் கிடைக்காத இன்பம் நமக்கு கிடைக்கும் என்று பதிகத்தில் முதல் பாடலில் கூறி நம்மை ஊக்குவிக்கும் அப்பர் பிரான், அவனைப் புகழ்ந்து பாடுவதால் நமது வாழ்வு ஊனம் இல்லாத வாழ்வாக அமையும் என்று மூன்றாவது பாடலில் உணர்த்துகின்றார். பதிகத்தின் நான்காவது பாடலில், அன்பினால் இறைவனைச் சென்று அடையலாம் சொல்லிக் கொடுக்கும் அப்பர் பிரான், இறைவன் நம்மை, நமது அன்பினை ஏற்றுக்கொண்டு அருள் புரியும் வரையில் நாம் அவனது திருநாமங்களை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று பதிகத்தின் ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். இறைவனின் திருநாமங்களைச் சொல்லாத நாட்கள் வீணாக கழிக்கப்பட்ட நாட்களாக கருதப்பட்டு. நமக்கு தண்டனை வாங்கித் தரும் நாட்கள் என்று பதிகத்தின் இரண்டாவது மற்றும் ஆறாவது பாடல்களில் எச்சரிக்கை விடுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், தனது உள்ளம் கசிந்து உருகி பெருமானின் திருநாமங்களைச் சொல்வதால், தனது மனதினில் இருந்த மாசுகள் களையப்பட்டு, மலங்கள் நீங்கியவானாக தான் விளங்கியதாக அப்பர் பிரான் கூறுகின்றார். நாமும் அப்பர் பிரானின் அடிச்சுவட்டில் சென்று, இறைவனின் திருநாமங்களை உச்சரித்து, நமது மலங்கள் களையப்பெற்று, இறைவனின் திருவடிகளில் சென்று இணைவதற்கான தகுதியை பெறுவோமாக. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com