66. வேழம்பத்து ஐவர் - பாடல் 1

ஆவடுதுறைக்கு அருகில் இருப்பதால்

(கோழம்பம் – குறுந்தொகை)

முன்னுரை

அப்பர் பிரான் இந்த தலம் சென்ற செய்தி பெரிய புராணத்தில் தனியாக குறிப்பிடப்படவில்லை. ஆவடுதுறைக்கு அருகில் இருப்பதால், கஞ்சனூர் கோடிகா ஆகிய தலங்கள் சென்ற அப்பர் பிரான் அங்கிருந்து ஆவடுதுறை செல்லும் வழியில் இந்த தலம் சென்றிருக்கலாம் என்று உரை ஆசிரியர்கள் கருதுகின்றனர். இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் பாடிய ஒரு குறுந்தொகைப் பாடலும் ஞானசம்பந்தர் அருளிய பதிகமும் நமக்கு கிடைத்துள்ளன. ஒரு முறை கயிலையில் பெருமானும் பிராட்டியும் சொக்கட்டான் ஆட்டம் ஆடியபோது ஏற்பட்ட பிணக்கினால், மண்ணுலகத்திற்கு பசுவாக வந்த உமையம்மை, ஆவடுதுறை தலத்தை நோக்கிச் சென்றபோது, இந்த தலத்தினில் ஓரிடத்தில் அம்பிகையின் குளம்பு பட்ட இடத்திலிருந்து ஒரு இலிங்கம் தோன்றியது. குளம்பின் வடு இலிங்கத்தின் பின்புறத்தில் இருப்பதை நாம் இன்றும் காணலாம். அதனால் கொளம்பியம் என்ற பெயரினைப் பெற்ற இந்த தலம் நாளடைவில் மருவி, கோழம்பம் என்று தேவார ஆசிரியர்கள் காலத்தில் அழைக்கப்பட்டது. பின்னர் மேலும் மாறுதல் அடைந்து இந்த தலம் இப்போது கொழம்பியம் என்று அழைக்கப்படுகின்றது. 

பாடல் 1

வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய்
ஆழம் பற்றி வீழ்வார் பல ஆதர்கள்
கோழம்பத்து உறை கூத்தன் குரை கழல்
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே

விளக்கம்

வேழம்பம் = உயிரினை ஏளனம் செய்யும், பரிகாசம் செய்யும். இந்த பாடலில் அப்பர் பிரான் மனிதர்களை இருவகையாக பிரிக்கின்றார். மூடர்கள் என்றும் சதுரர்கள் என்றும், ஐந்து புலன்களையும் தங்களது ஆளுகைக்கு உட்படுத்தும் திறமையின் வழியே இந்த பாகுபாடு செய்யப்படுகின்றது. உயிரின் உண்மையான விருப்பம் என்றும் நிலையாக இருக்கும் மெய்ப்பொருளை அறிந்துகொண்டு, தன்னை பிணைத்திருக்கும் மலங்களிலிருந்து விடுதலை பெற்று, மெய்ப் பொருளினை நாடிச் சென்று அடைதலே ஆகும். ஆனால் இந்த விருப்பத்திற்கு தடையாக உள்ள ஐந்து பொறிகளும், இந்த விருப்பத்தினைக்
கொண்டுள்ள உயிரினை ஏளனம் செய்து, தங்கள் வழியே உயிரினைச் செலுத்த முயற்சி செய்கின்றன. புலன்களின் விருப்பத்திற்கும் உயிரின் விருப்பத்திற்கும் இடையே நடைபெறும் இந்த போராட்டத்தில், புலன்களை அடக்கி உயிரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் உண்மையான மெய்ப்பொருளாகிய இறைவனின் திருவடிகளை வணங்கும் அடியார்களை சதுரர் என்றும், புலன்களின் சேட்டைகளில் மயங்கி புலன்களின் வழியே சென்று சிற்றன்பத்தை நாடி, அதனில் ஆழ்ந்து இறைவனைப் பற்றி சிந்தியாது இருக்கும் மாந்தர்களை மூடர்கள் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் பிரிக்கின்றார். 

புலன்களை வெற்றிகொள்ள முடியாது, அதன் வழியே இழுத்துச் செல்லப்படும் மனிதர்கள், புலன்கள் மகிழ்ச்சி அடையும் செயல்களை புரிந்துகொண்டு, மேன்மேலும் தங்களது வினைகளைப் பெருக்கிக்கொண்டு, நரகத்திலும் பிறப்பிறப்புச் சுழற்சியிலும் அகப்பட்டு ஆழ்ந்த துன்பத்தில் உழல்வதால் அவர்களை மூடர்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். புலன்களை வெற்றிகொள்ளும் மனிதர்கள் பிறவிப் பிணியை போக்கிக்கொண்டு, இறைவனின் திருப்பாதங்களைச் சென்றடைந்து நிலையான இன்பத்தினை அனுபவிப்பதால், அவர்களை சதுரர் என்று அழைக்கின்றார். 

உயிரின் விருப்பத்திற்கு மாறுபட்டு, உயிரினைத் தன் வசப்படுத்த முயற்சி செய்யும் புலன்களை மாறி நின்று மயக்கும் வஞ்சப் புலன்கள் என்று மணிவாசகர், திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் முதல் பாடலில் கூறுகின்றார். இந்த புலன்கள் உயிருடன் மாறுபட்டு இருப்பதன்றி தங்களுக்குள்ளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு நிற்பன. ஒன்று போன வழியில் மற்றொன்று போகாமல் உயிரினை பல விதத்திலும் அலைக்கழிப்பதால் வஞ்சகப் புலன்கள் என்று கூறுகின்றார். ஒரு அறையில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள தீபம் அலை பாய்ந்து அணையாமல் இருப்பதற்கு காற்று வரும் வழியாகிய ஜன்னல்களை நாம் மூடி வைப்பது போன்று, நமது மனதில் ஏற்றி வைக்கும் ஞான தீபம் அணையாமல் இருக்க வேண்டும் என்றால் ஐந்து புலன்களும் நமது நெஞ்சினில் புகுந்து கொண்டு அட்டகாசம் செய்வதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அதாவது அந்த புலன்கள், நமது நெஞ்சின் உள்ளே வரும் வழியை நாம் அடைத்து விட வேண்டும். நமக்கு அந்த வல்லமை இல்லை. இறைவனால் தான் அது நடக்கக் கூடிய செயல் என்பதால், புலன்கள் வரும் வழியினை அடைத்து அமுதமாக ஊறி நின்று மனதினில் எழுகின்ற பரஞ்சோதி என்று இறைவனை மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். அந்த இறைவனின் உண்மை நிலையை நாம் உணர அவனது அருள் தேவை என்பதால், உள்ளவா காண வந்து அருளாய் என்று இறைவனிடம் நாம் விண்ணப்பம் வைக்க வேண்டும். அதனைத் தான் மணிவாசகர் இந்த பாடலின் முதல் இரண்டு அடிகளில் உணர்த்துகின்றார். 

மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின்
                வழியடைத்து அமுதே 
ஊறி நின்று என்னுள் எழு பரஞ்சோதி உள்ளவா காண வந்து
                    அருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை
                    சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை
                                          அன்பே 

அப்பர் பிரான் மனிதர்களை இரண்டு வகையாக பிரிப்பது நமக்கு திருஞானசம்பந்தப் பெருமானின் நெடுங்களம் பதிகத்தினை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடலில் (1.52.1) மனிதர்களை குறை உடையார் என்றும் நிறை உடையார் என்றும் இரண்டாக சம்பந்தர் பாகுபடுத்துகின்றார். மறையை உடையவனே, தோல் ஆடையை அணிந்தவனே, பின்னப்பட்ட நீண்ட சடையினில் பிறைச் சந்திரனை அணிந்தவனே, பிஞ்ஞகனே என்று பலவாறு இறைவனை அழைக்காதவர்கள் குறை உடையவர்கள் என்றும், இறைவனை பலவாறும் போற்றிப் புகழும் அடியார்கள் நிறை உடையவர்கள் என்றும் இரு பிரிவாக பிரிக்கும் ஞான சம்பந்தர், குறை உடைய மாந்தர்களை மன்னித்து அருளுமாறு இறைவனிடம் வேண்டும் பதிகம். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் அடியார்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று அடையாளம் காட்டி, அவர்களுக்கு எத்தகைய இடர்களும் ஏற்படாத வண்ணம் நெடுங்களம் மேய இறைவன் காக்கவேண்டும் என்று மற்ற அடியார்களுக்காக வேண்டும் பதிகம். அடியார்களின் குணங்களை கூறுவதன் மூலம், நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டும் பதிகமாக இந்த விளங்குகின்றது.
 
மறை உடையாய் தோல் உடையாய் வார் சடை மேல் வளரும்
பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று உனைப் பேசின்
                அல்லால் 
குறை உடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே 

இந்த பாடலில் பத்தர்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பத்தர்கள் என்ற சொல் பக்தர்கள் என்ற பொருளை உணர்த்துவதுடன், பத்து மேன்மையான குணங்களைக் கொண்டவர்கள் என்பதையும் உணர்த்துகின்றது. சான்றோர்கள் இந்த குணங்களை அக குணங்கள் என்றும் புற குணங்கள் என்று இரண்டு வகையாக பிரிக்கின்றனர். பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும். 

பொழிப்புரை
உயிரின் விருப்பத்தை அடைவதற்கு உதவாமல், உயிரினை ஏளனம் செய்து, உயிரினைத் தங்களது வழியில் இழுத்துச் சென்று தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் ஐந்து புலன்களின் வலையில் கட்டுண்டு, புலன்கள் விரும்பும் செயல்களையே தானும் செய்து, புலன்கள் ஏற்படுத்தும் மாயையில் விழுந்து இறைவனைத் தொழாது இருப்பவர்கள் மூடர்கள் ஆவார்கள். அவ்வாறு இல்லாமல், புலன்களின் வழியே செல்லாமல், கோழம்பத்தில் உறையும் கூத்தனாகிய இறைவனின் ஒலிக்கும் கழல்களை வணங்கும் பக்தர்கள் மிகுந்த திறமை உடைய சாமர்த்தியசாலிகள் ஆவார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com