55. பட்ட நெற்றியர் பாய்புலி - பாடல் 9

மணஞ்சேரியில் உறையும் பெருமான்

சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
புத்தர் சேர் அமண் கையர் புகழவே
மத்தர் தாம் அறியார் மணஞ்சேரி எம்
அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே
 

விளக்கம்

சேர் = புத்த மதத்தினோடு சேர்ந்த. புத்தர் சேர் அமண் கையர் என்பதை, மத்தர் தாம் அறியார் என்ற தொடருடன் கூட்டி பொருள் கொள்ள வேண்டும். மத்தர் = உன்மத்தர் என்ற சொல்லின் சுருக்கம்.

பொழிப்புரை

சித்தர்கள், தேவர்கள், திருமால், பிரமன் ஆகியோர் ஒரு புறம் பெருமானைப் புகழ, நிலையில்லாத உலகப் பொருட்களை நிலையாக கருதி மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் புத்தர்களும் சமணர்களும் பெருமானை அறியாமல் இருகின்றார்கள். அவ்வாறு உலகப் பொருட்கள் தரும் மயக்கத்தில் ஆழாது, பெருமானின் பெருமைகளை புரிந்துகொண்டு அவரைத் தொழுது வாழும் அடியார்களுக்கு அல்லல் இல்லாத வண்ணம் செய்பவர், மணஞ்சேரியில் உறையும் பெருமான் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com