56. நோதங்கம் இல்லாதார் - பாடல் 2

உண்கலனாக வைத்திருப்பது மண்டையோடு

காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று
         உரிவை மெய் போர்த்தார் கலனதாக
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறுபிணியும்
    செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
பீடு உலாம் தனை செய்வார் பிடவ மொந்தை குட முழவம்
        கொடுகொட்டி குழலும் ஓங்கப்
பாடலார் ஆடலார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார்
            பந்தணைநல்லூராரே
 

விளக்கம்

இந்த பாடலின் முதல் இரண்டு அடிகளில், காடு அலால் என்றும் ஓடு அலால் என்றும் அப்பர் பிரான் கூறுவது நமக்கு சம்பந்தப் பெருமானின் ஆலவாய் பதிகத்தின் (3.52) முதல் பாடலை நினைவூட்டுகின்றது. ஆலவாய் (மதுரையின் பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பாடலில், நான்கு அடிகளிலும் ஆலவாயிலாய் என்ற சொல் இடம் பெற்றாலும், முதல் மூன்று அடிகளில் அலால் அவா இலாய் என்று பிரித்து நாம் பொருள் கொள்ள வேண்டும். வீடுபேறு அடைவதன்றி வேறு எதிலும் அவா (ஆசை) இல்லாத சிறந்த தொண்டர்கள் பெருமானைப் போற்றி பாட, அவர்களது பாடலைக் கேட்பதைத் தவிர வேறு ஆசை ஏதும் இல்லாதவனாக விளங்கும் பெருமான், காட்டில் வாழ்வதைத் தவிர வேறு எதிலும் ஆசை அற்றவனாக உள்ளான். அந்த கபாலி தான், கூடல் என்று அழைக்கப்படும் ஆலவாயில் நகரத்தில் குலாவி விளையாடுவதை நான் அறிந்துகொண்டேன் என்று சம்பந்தர் இந்த நயமான பாடலில் கூறுகின்றார்.

வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின் கழல்
பாடலால வாயிலாய் பரவ நின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலி நீள் கடிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயது என்ன கொள்கையே

கருதாதார் = தனக்கு உகந்த உறைவிடமாக கருதார். களிறு = ஆண் யானை. மெய் = உடல். கலன் = உண்ணும் பாத்திரம். செறுபகை = உட்பகைகள். காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய ஆறும் மனிதனின் உட்பகைகளாக கருதப்படுகின்றன. காமம் என்பது ஒரு பொருளின் மீது வைக்கும் அளவு கடந்த ஆசை. அந்த ஆசை நிறைவேறுவதற்காக நாம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு, விரும்பிய பொருளை அடைய விரும்பி, பல தவறுகள் செய்கின்றோம். குரோதம் என்றால் கோபம், நாம் விரும்பிய பொருளை அடைவதில் நமக்குத் தடையாக இருப்பவர் மீது நமக்கு ஏற்படும் தீராத கோபம், அவர்களை நமது எதிரிகளாக கருதி அவர்களை அழிக்க நம்மைத் தூண்டுகின்றது. மோகம் என்பது நமது தகுதிக்கு மீறிய பொருள் மீது கொண்டுள்ள ஆசை. உலோபம் என்றால் கஞ்சத் தனம்; மதம் என்றால் கர்வம், செருக்கு. நமது வலிமையின் மீது செருக்கு கொண்டு, எவரும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் பல தவறுகள் செய்கின்றோம்.

மாற்சரியம் = பொறாமை. அடுத்தவரின் நிலை கருதி பொறாமை கொண்டு, அவரை எப்படியேனும் வீழ்த்த நினைத்து தவறுகள் செய்கின்றோம். எனவே இந்த ஆறு உட்பகைகளை வென்றால், நாம் பல தவறுகளை தவிர்த்து உயர்ந்த நிலையை அடையலாம். இந்த பகைகளை ஒழிப்பதற்கு நமக்கு இறையருள் கூட வேண்டும் என்பதால் நாம் இறைவனைத் தொழவேண்டும் என்பதை உணர்த்தவே, அப்பர் பிரான் இங்கே தனது நெற்றிக் கண்ணால் பெருமான் இந்த பகைகளை அழிப்பார் என்று கூறுகின்றார். பீடுலாம் = வலிமையை கெடுத்தல். பிடவம், மொந்தை, குடமுழவம், கொடுகொட்டி, குழல் ஆகியவை பல வகையான் இசைக் கருவிகள்.

குடமுழவம் = குடத்தின் வடிவத்தில் அமைந்த முழவு இசைக் கருவி. முழவு = மத்தளம் போன்று அமைந்த இசைக் கருவி. கொடுகொட்டி = கிடுகிட்டி என்று இப்போது அழைக்கப்படும் தோற்பறை.

மொந்தை = பறை. ஒற்றியூர் = அடமானம் வைக்கப்பட்ட ஊர். இந்த பாடலில், பெருமான் எவ்வாறு மற்றவர்கள் ஒதுக்கும் பொருட்களை ஏற்றுக்கொண்டு இருப்பதை உணர்த்தும் அப்பர் பிரானுக்கு,  பெருமானின் வல்லமையில், திறமையில், பெருமையில் நமக்கு ஐயம் ஏற்படுமோ என்ற அச்சம் தோன்றியது போலும். பாடலின் கடைப் பகுதியில், நமது பிணிகளையும் உட்பகைகளையும் தீர்க்கவல்லவர் என்றும், பலவிதமான இசைக் கருவிகளின் இசைக்கு ஏற்ப நடமாடும் திறமை கொண்டவர் என்றும் கூறுகின்றார். பீடு = பெருமை. பீடுலாம் தனை = பெருமை உடைய செயல்களை.

பொழிப்புரை

சுடுகாடு அல்லாமல் தனது உறைவிடமாக வேறு எந்த இடத்தையும் கருதாத பெருமானார், தனக்கு உணவாக பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டார். மதங்கொண்ட யானையின் தோலைப் போர்த்துக்கொள்வது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ளாமல், தன்னை நோக்கி வெறியுடன் வந்த யானையின் தோலை உரித்து போர்த்துக்கொண்டார். அவர் தனது கையில் உண்கலனாக வைத்திருப்பது மண்டையோடு. அடமானம் வைக்கப்பட்ட ஒற்றியூர் தான் அவர் மிகவும் உகந்து தங்கும் ஊர். ஆனால் இவ்வாறு, மற்றவர்களால் தவிர்க்கப்பட்ட பொருட்களை ஏற்றுக்கொள்ளும் பெருமான், அடியார்களின் பிணிகளையும், உட்பகைகளாக விளங்கும் காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய ஆறு தீய குணங்களை நீக்கி அடியார்கள் தவறான வழியில் செல்லாதவாறு பாதுகாக்கும் பெருமானாகவும் விளங்கி, பெருமை உடைய பல செயல்களை செய்கின்றார்.

பிடவம், மொந்தை, குடமுழவம், கொடுகொட்டி ஆகிய இசைக்கருவிகள் பேய்க் கணங்களால் இசைக்கப்பட, அந்த இசைக்கு ஏற்ப பாடிக்கொண்டே ஆடும் திறமை உடையவராக உள்ளார். அவர் பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்றவராய், பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். அவர்தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com