56. நோதங்கம் இல்லாதார் - பாடல் 5

இண்டை மலரை சடையில் சூடியுள்ளார்

தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா
            மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச்சடை முடியார் ஈமம் சூழ்ந்த இடுபிணக் காட்டு
            ஆடலார் ஏமம் தோறும்
அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதியானார் அருக்கனாய்
        ஆரழலாய் அடியார் மேலைப்
பண்டை வினை அறுப்பார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார்
            பந்தணைநல்லூராரே
 

விளக்கம்

தொழுது ஏத்தும் = தொழுவதற்கு ஏதுவாக, தொழுது வணங்குவதற்கு காரணமாக. நீற்றார் = நீற்றினை உடல் முழுதும் பூசியவர். துளங்கா = நடுங்காத. பெருமான் எவரிடமும் அச்சம் கொள்வதில்லை என்பதால் அவரது மணிமுடி அச்சத்தால் நடுக்கம் கொள்வதில்லை. ஈமம் = இடுகாடு, சுடுகாடு. ஏமம் = இரவு, இங்கே முற்றூழிக் காலத்தில் எங்கும் இருள் சூழ்ந்த தன்மையை குறிக்கின்றது. அனைத்துப் பொருட்களும் அழிந்த பின்னர், உலகமும் அனைத்து உயிர்களும் பெருமானின் உடலில் ஒடுங்கிய நிலையில், மீண்டும் உலகினை தோற்றுவிக்க திருவுள்ளம் கொண்டு பெருமான் நடமாடுகின்றார்.

இதனையே சங்கார நடனம் என்று கூறுகின்றார்கள். இந்த நடனம்தான் திருவாசகம் சிவபுராணத்தில், நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று குறிப்பிடப்படுகின்றது. மேலை = மேலுள்ள. இண்டை = ஒருவகை முள் செடி. துளங்கா மணிமுடி என்பதற்கு அசைவு இல்லாத இரத்தினம் போன்று ஒளி திகழும் சடைமுடியினை உடையவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

பொழிப்புரை

அடியார்கள் தம்மைத் தொழுவதற்கு காரணமாக ஞான ஒளியாகத் திகழ்பவர் சிவபெருமான். அச்சம் என்றால் என்ன என்பதை அறியாத பெருமானின் மணிமுடி அச்சத்தால் நடுங்காத மணிமுடியாகும்.

தூய்மையான திருநீற்றினை உடலெங்கும் பூசியுள்ள பெருமான், இண்டை மலரைத் தனது சடையில் சூடியுள்ளார். அவர், முற்றூழிக் காலத்தில் இடுகாட்டினைச் சூழுந்துள்ள சுடுகாட்டின் நடுவே நடனம் ஆடுகின்றார். பல அண்டங்களையும் கடந்து எங்கும் பரவி இருக்கும் பெருமான், எல்லோருக்கும் முற்பட்டவராக உள்ளார். அவரே சூரியனாகவும் அக்னியாகவும் விளங்குகின்றார். தனது அடியார்களைப் பற்றியுள்ள, பல பிறவிகளாகத் தோடர்ந்து வரும் வினைகளை அறுக்கும் அவர் பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்றவராய், பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார்.

இவர்தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com