59. ஒருவராய் இரு மூவராய் - பாடல் 8

கற்றவர்கள் சேரும் கடம்பூர்

உற்றாராய் உறவாகி உயிர்க்கெலாம்
பெற்றார் ஆய பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார்
கற்றார் சேர் கடம்பூர்க் கரக்கோயிலே
 

விளக்கம்

ஆன்மாவுக்கு நிரந்தரமான உறவினர்கள் சிவபிரானைத் தவிர வேறு எவரும் இல்லை. சென்ற பிறவியில் நாம் எவ்வாறு இருந்தோம், எவர் நமக்கு உறவினராக இருந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. அடுத்த பிறவி நமக்கு எவ்வாறு அமையும் என்பதும் நமக்குத் தெரியாது. இந்தப் பிறவியில் நமக்கு உறவினர்களாக இருப்பவர்களும், நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்முடன் இருப்பதில்லை. அவர்கள் அனைவரும் இடையில் வந்து சேர்பவர்களாகவோ, இடையில் நம்மை விட்டு போகின்றவர்களாகவோ இருக்கின்றனர். எனவே நாம், எப்போதும் நமக்கு உறவினனாக இருக்கும் இறைவனிடம் அன்பு செலுத்துவதை விட்டுவிட்டு, மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதால் நமக்கு பயன் ஏதும் இல்லை. இந்த உண்மையை வலியுறுத்தி, இறைவனை நமது உறவினனாக மதித்து, அவனிடம் அன்பு செலுத்தி உய்ய வேண்டும் என்று அறிவுரை கூறும் பாடல். எப்பொழுதும் நமக்கு உறவாக நின்று நம்மை காக்கும் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு, எல்லா உறவுமாக இறைவன் இருக்கும் நிலையை உணர்த்தும் அப்பர் பிரானின் வேறொரு பாடல் (6.95.1 நமது நினைவுக்கு வருகின்றது

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும்
                                        மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும்
                          சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ துணையா என்
                        நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ
                         ஏறூர்ந்த செல்வன் நீயே.

ஐயன் = தலைவன், குரு, முன்னோன். ஒப்புடைய மாதர் = நம்முடன் ஒத்த கருத்துகொண்டு பலவிதங்களிலும் நம்முடன் ஒத்துழைத்து இல்லறம் நடத்தும் மனைவி. ஒண்பொருள் = இல்லற வாழ்க்கையின் பயனாக நாம் அடையும் மக்கட்செல்வம் மற்றும் அறநெறியால் நாம் அடைந்த செல்வம். துய்ப்பன = நாம் அனுபவிக்கும் இன்பங்கள். உய்ப்பன = நாம் இன்பம் அனுபவிக்க உதவும் கருவிகள், வாகனம் முதலியன. இயல்பாகவே தங்களது குழந்தைகள் மீது தாய்க்கும் தகப்பனுக்கும் அன்பு இருப்பதை நாம் அறிவோம். அவ்வாறான அன்பு மாமனுக்கும் மாமிக்கும் நம் மேல் இருக்குமா என்ற ஐயம் கொள்ளவேண்டாம் என்பதை உணர்த்தவே அன்புடைய என்ற அடைச்சொல் இங்கே சேர்க்கப்பட்டுள்ளது. தங்களது மக்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு காரணமாக நமது மாமனுக்கும் மாமிக்கும் நம் மீது அன்பு இருக்கும் என்பதால் அன்புடைய மாமன் மாமி என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். அன்புடைய என்ற சொல்லை, அப்பன் நீ, அம்மை நீ என்ற சொற்களுக்கு முன்னர் வைத்து பொருள் கொள்ள வேண்டும் என்றும் கூறுவார்கள்.

துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் என்று, முன்னர் சொன்ன சுற்றங்கள், செல்வங்கள், போகப் பொருட்கள் அனைத்தையும் துறந்து, பந்த பாசங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு துணையாக இருப்பவன் சிவபெருமான் என்று மேற்கண்ட பாடலில் அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். தனக்குச் சுற்றம் சிவபெருமானைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும் சிவபெருமான்தான் தனக்குத் துணை என்றும் அப்பர் பெருமான் கூறுவதைப்போல், சுந்தரரும் கழுமலம் பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறுகின்றார். மறுமைக்கும் என்று, இந்த பிறப்பில் மட்டும் இல்லாமல், அடுத்த பிறவியிலும் தனக்கு சிவபெருமானைத் தவிர வேறு எவரும் துணை இல்லை என்று கூறுகின்றார். தன்னைச் சுற்றியுள்ள சுற்றம் எவரையும் சுற்றம் என்று கருதமாட்டேன் என்று இங்கே கூறுகின்றார்.

மற்றொரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன்
                மறவா வரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான்
                தொழப்பட்ட ஒண்சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல
                நெறிகளும் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வளநகர்க் கண்டு
                    கொண்டேனே

மறுமையிலும் துணை சிவபிரானே என்று சுந்தரர் கூறுவது நமக்கு, பஞ்சாக்கரப் திருப்பதிகத்தில் ஞானசம்பந்தர் அம்மையில் துணை அஞ்செழுத்துமே என்று கூறுவது நினைவூட்டுகின்றது.

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்திலும்
வெம்மை நரகம் விளைந்த போழ்திலும்
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்திலும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே

மணிவாசகரும் திருவாசகம் வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில், சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் துணையாக மனதினில் நினைக்கமாட்டேன் என்றும் வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுவதை நாம் காணலாம்.

பழுதில் தொல் புகழாள் பங்க நீ அல்லால் மற்று நான்
                        பற்று இலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை
                              உறை சிவனே
தொழுவனோ பிறரை துதிப்பனோ எனக்கோர் துணையென
            நினைவனோ சொல்லாய்
மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று
                                 அருள் புரியாயே

வேம்பினைப் பேசி என்று தொடங்கும் ஆரூர்ப் பதிகத்தின் (4.102) முதல் பாடலில், சுற்றத்தை நிலையான துணை என்று நம்பியிருக்கும் மாந்தர்களே என்று அழைத்து, சிவபிரானுக்கு வஞ்சனை இல்லாதத் தொண்டினைச் செய்து உய்யுமாறு அப்பர் பெருமான் கூறுகின்றார். வேம்பினைப் பேசுதல் என்ற சொற்றொடர் மூலம், உலகியல் பேச்சுக்கள் அனைத்தும் வெறுப்பைத் தருவன என்று குறிப்பிட்டு வேம்பினை ஒத்தது என்று கூறுகின்றார். விடக்கு என்றால் உடல். தூம்பு = வயிறு. தூம்பினைத் தூர்த்தல் = மறுபடியும் மறுபடியும் காலியாக உள்ள வயிற்றினை உணவு உட்கொண்டு நிரப்புதல்.

வேம்பினைப் பேசி விடக்கினை ஓம்பி வினை பெருக்கித்
தூம்பினைத் தூர்த்து அங்கோர் சுற்றம் துணை என்று
                                  இருத்திர் தொண்டீர்
ஆம்பலம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டு பட்டு உய்ம்மின்களே

இந்தப் பாடலில் அப்பர் பிரான், பயன் ஒன்றும் தராத, வெறுப்பினை வளர்க்கும் உலகியல் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு, உடலினை வளர்த்து, மேன்மேலும் வினைகளை பெருக்கிக்கொண்டு, மறுபடியும் மறுபடியும் காலியாகும் வயிற்றினை உணவு உட்கொள்வதன் மூலம் நிரப்பிக்கொண்டு, நமது சுற்றத்தார்கள் நமக்குத் துணை என்று இருக்கும் மாந்தர்களே என்று கூறி, மேற்கூறிய செய்கைகள் எல்லாம் நமக்கு உய்வினைத் தாராது என்று உணர்த்துகின்றார். நமது உடலில் திருநீற்றினைப் பூசிக்கொண்டு, வஞ்சனை ஏதும் இல்லாத தொண்டுகள் சிவபிரானுக்குச் செய்வதன் மூலம் நாம் உய்யலாம் என்று உய்யும் வழியினைச் சொல்லிக் கொடுக்கின்றார்.

இறைவனின் திருவடிகளின் சிறப்பினை எடுத்துரைக்கும் திருவையாறு பதிகத்தின் ஒரு பாடலில் (4.92.12), நமக்கு உதவி செய்ய உறவினர்கள் எவரும் இல்லையே என்று நாம் கவலை கொள்ள வேண்டாம் என்றும். உற்றார் இல்லாதவர்க்கு உறுதுணையாக இருப்பவன் பெருமான் என்றும் நமக்கு ஆறுதல் சொல்லும் பாடல் இது. மேலும் நமது உற்றார்கள் எவரும் செய்ய முடியாத உதவியை, மேன்மையான வீட்டுலகம் அளித்து நிலையான பேரானந்தத்தை தர வல்லது ஐயாறன் திருவடிகள் என்று கூறுகின்றார்.

உற்றார் இலாதார்க்கு உறுதுணை ஆவன ஓதி நன்னூல்
கற்றார் பரவப் பெருமை உடையன காதல் செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி வானகம் தான் கொடுக்கும்
அற்றார்க்கு அரும் பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே

அனைத்து உயிர்களுக்கும் உறவாகவும், அனைத்து உயிர்களையும் ஈன்றவாராக இருக்கும் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுவது, அவரின் திருப்பாதிரிப்புலியூர் பதிகத்தின் முதல் பாடலை (4.94.) நினைவூட்டுகின்றது.

ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே

உற்றார் = உற்ற சமயத்தில், தேவைப்படும் நேரத்தில் உதவி செய்வோர். முற்றார் = அறிவில் முதிர்ச்சி அடையாத திரிபுரத்து அரக்கர்கள். கற்றார்கள் = சிவநெறியை கற்று மெய்ப்பொருளை உணர்ந்த சான்றோர்கள்.

பொழிப்புரை

உற்ற சமயத்தில், உதவி தேவைப்படும் சமயத்தில் உதவி செய்பவரும், அனைத்து உயிர்களுக்கும் உறவாகி உயிர்களை ஈன்றவனும், முதிர்ந்த அறிவு இல்லாமல் பலரையும் வருத்தும் கொடுமைகள் செய்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் அழித்தவனும் ஆகிய பெருமான் உறையும் இடம், கற்றவர்கள் சேரும் கடம்பூர் நகரத்தில் உள்ள கரக்கோயிலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com