61. கடலகம் ஏழினோடும் - பாடல் 5

பேரானந்தத்தில் திளைத்து இருப்பதே

சிந்தையும் தெளிவும் ஆகித் தெளிவினுள் சிவமுமாகி
வந்த நற்பயனும் ஆகி வாணுதல் பாகமாகி
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென்கரை
                   மேல் மன்னி
அந்தமோடு அளவிலாத அடிகள் ஆப்பாடியாரே
 

விளக்கம்

முக்தி அடைந்து, இறைவனின் திருப்பாதங்களில் சென்றடைந்து பேரானந்தத்தில் திளைத்து இருப்பதே ஆன்மாவின் உண்மையான விருப்பம். இந்த விருப்பம் நிறைவேற நாம் ஞானம் பெற வேண்டும்.

இதற்கான படிகள் நான்கு என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது. கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்பன அந்த நான்கு படிகள். தக்க ஆசானிடத்தில், இறைவனைப் பற்றிய விவரங்களை கேட்டல் முதல் படி. கேட்டறிந்த விவரங்களில், ஐயம் ஏதும் இருக்குமானால்., தகுந்த நூல்களை படித்தோ, கற்றவர்களிடம் கேட்டு அறிந்தோ, தனது ஐயங்களைப் போக்கிக்கொண்டு எப்போதும் கேட்ட விவரங்களை சிந்தித்தவாறு இருத்தல் அடுத்த படி; இவ்வாறு சிந்தித்து சிந்தித்து தெளிவினை அடைதல் மூன்றாவது படி; இவ்வாறு தெளிவடைந்த சிந்தை மூலம் உணர்ந்த இறைவனை எப்போதும் தியானித்து இருப்பது நான்காவது படி. இந்த நான்காவது படியால் விளைவது தான் வீடுபேறு அடையும் நிலைக்கு உள்ள நிலை. இந்த நான்கு படிகளிலும் நமக்கு உதவியாக இருப்பது சிவபெருமானின் அருள்தான். இதனைத்தான், சிந்தையுள் தெளிவாக இருப்பதாகவும், அந்த தெளிந்த நிலையில் தியானித்து சிவமாக இருப்பதாகவும், அந்த தியானத்தின் விளைவாக ஏற்படும் நல்ல பயனான வீடு பேறாகவும் இறைவன் இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். வாணுதல் = வாள்+நுதல், வாளினைப் போன்று கூர்மையான புருவங்களை உடைய உமை அம்மை.

பொழிப்புரை

தன்னைச் சிந்திக்கும் அடியார்களின் சிந்தையாகவும், அந்த சிந்தைனையால் ஏற்படும் தெளிந்த நிலையாகவும், அந்த தெளிந்த நிலையால் ஏற்படும் ஞானமாகவும், அந்த ஞானத்தின் விளைவால் ஏற்படும்

நற்பயனான வீடு பேறு நிலையாகவும் விளங்கும் சிவபெருமான், வாள் போன்ற கூர்மையான புருவங்களை உடைய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுள்ளார். அனைத்து உயிர்களும்

உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அழிந்த பின்னரும் இருக்கும் முடிவான பொருளாக இருக்கும் பெருமானை எவரும் அளவிட முடியாது. அவர்தான், குளிர்ந்த காற்று வீசப்பெருவதால் செழிப்புடன்

வளரும் சோலைகள் சூழ்ந்ததும், மண்ணி ஆற்றின் தென்கரையில் இருப்பதுமாகிய ஆப்பாடி தலத்தில் உறைகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com