61. கடலகம் ஏழினோடும் - பாடல் 8

நோய் நொடி ஏதும் அணுக

மயக்கமாய்த் தெளிவுமாகி மால்வரை வளியுமாகித்
தியக்கமாய் ஒருக்கமாகிச் சிந்தையுள் ஒன்றி நின்று
இயக்கமாய் இறுதியாகி எண்திசைக்கு இறைவராகி
அயக்கமாய் அடக்கமாய ஐவர் ஆப்பாடியாரே
 

விளக்கம்

மயக்கம் = கலக்கம். எதனையும் புதியதாக அறிந்துகொள்ளத் தொடங்கும்போது ஏற்படுவது கலக்கம். ஆனால் நாம் அறிந்துகொண்டவற்றில் உள்ள ஐயங்களை, கற்றவர்களிடம் கேட்டோ, சிறப்பான நூல்களைப் படித்து உணர்ந்தோ, தீர்த்துக்கொள்வதன் பின்னர் நம்மிடம் தோன்றுவது தெளிவு. மால் வரை = பெரிய மலை. வளி = காற்று. தியக்கம் = அசைவு. ஒருக்கம் = ஒடுக்கம் என்ற சொல்லின் திரிபு. இயக்கம் = இயங்குதல். இறுதி = முடிவு. அயக்கம் = நோயற்ற தன்மை. அடக்கமாய ஐவர் = ஐந்து பொறிகளையும் அடக்கியவர். தோற்றம், இயக்கம், முடிவு ஆகிய மூன்று தொழில்களையும் செய்பவன் இறைவன் என்பதும் இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை

உண்மையான மெய்ப்பொருளை நாம் அறியத் தொடங்கும்போது பல ஐயங்களை நம்முள் ஏற்படுத்துபவனும், அந்த ஐயங்களைப் போக்கும் வகையில் நம்மை, கற்றோரை அணுகியும் சிறந்த நூல்களைப் படித்தும் தெளிவடையச் செய்வானும் பெருமானே ஆவான். அவனே பெரிய மலைகளாகவும் காற்றாகவும் விளங்குகின்றான். நம்மையும் மற்ற உலகப் பொருட்களைத் தோற்றுவித்து நம்மில் அசைவை ஏற்படுத்துபவனும், முற்றூழிக் காலத்தில் அனைத்து உயிர்களையும் உலகப் பொருட்களையும் தன்னுள் அடக்கி ஒடுக்கத்தை உண்டாக்குபவனும் அவனே. நமது சிந்தனையுள் ஒன்றி நின்று, நம்மை பல வகையில் இயக்கி பாதுகாப்பவனும், நமக்கு இறுதியாக இருக்கும் பெருமான் தான் எட்டு திசைகளுக்கும் இறைவனாக விளங்குகின்றான். நோய் நொடி ஏதும் அணுக முடியாதவனாக உள்ள அந்த இறைவன், ஐந்து பொறிகளையும் அடக்கியவர் ஆவார். அவர்தான் ஆப்பாடி தலத்தில் உறையும் இறைவனார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com