61. கடலகம் ஏழினோடும் - பாடல் 9

விரும்பிப் பேணும் ஆப்பாடி தலத்தில்

ஆரழல் உருவமாகி அண்டம் ஏழ் கடந்த எந்தை
பேரொளி உருவினானைப் பிரமனும் மாலும் காணாச்
சீரவை பரவி ஏத்திச் சென்று அடி வணங்குவார்க்குப்
பேரருள் அருளிச் செய்வார் பேணும் ஆப்பாடியாரே
 

விளக்கம்

பேரருள் = பிறவி தனை அறுத்தெறியும் முக்தி நிலை. பிரமனும் திருமாலும் காணாத வகையில் பேரழலாக நின்ற பெருமான் ஏழு அண்டங்களையும் கடந்து நின்றதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த நிலை பல தேவார, திருவாசகப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. அப்பர் பிரானின் குறிப்பு நமக்கு திருவாசகத்தின் குயில் பத்து பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டுகின்றது.

கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கு அப்பால்
சோதி மணி முடிச் சொல்லில் சொல் இறந்து நின்ற தொன்மை
ஆதி குணம் ஒன்று இல்லான் அந்தம் இலான் வரக் கூவாய்

வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் முகமாக குயில் கூவுகின்றது. வசந்த காலம், காதலர்கள் கூடி மகிழ்வுறும் காலம். தனது காதலனாகிய இறைவனுடன் கலந்து தான் மகிழ்ந்து இருக்க விருப்பம் கொண்டுள்ள தலைவி, வசந்தம் விரைவில் வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றாள். வசந்தம் வந்தால், தனது கருத்தினைக் கவர்ந்த மணவாளன், சிவபெருமான் வருவான் என்ற நம்பிக்கையில் குயிலினை கூவுமாறு வேண்டுகின்றாள். இறைவனை நாடிச் சென்று, வரவிருக்கும் வசந்த காலத்தையும், தனிமையில் தவிக்கும் தலைவியுடன் கூடி இருக்க வேண்டும் என்ற நிலையை இறைவனுக்கு உணர்த்தும் முகமாகவும் குயில் கூவ வேண்டும் என்று விரும்பும் தலைவி, இறைவனைப் பற்றிய அடையாளங்களை இந்த பதிகத்தின் பல பாடல்களில் தெரிவிக்கின்றாள். என்னதான் வர்ணித்தாலும், அந்த வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டவன் இறைவன் என்பதை நன்கு உணர்ந்தவள் மணிவாசகரின் நாயகி. அதனால் தான் பதிகத்தின் முதல் பாடலில் சொற்களையும் எண்ணங்களையும் கடந்து நின்றவன் (சொல்லிறந்து நின்ற தன்மை) என்று இந்த பாடலில் கூறுகின்றாள். அவனது திருப்பாதங்கள் கீழேழ் உலங்களையும் கடந்து ஊடுருவிச் செல்லும் என்றும், அவனது மணிமுடி மேலேழ் உலகங்களையும் தாண்டிச்செல்லும் என்றும் இங்கே கூறுகின்றாள். இந்த குணம் உடையவன் என்று சுட்டிக் காட்டி முடியாத வகையில், அனைத்து நல்ல குணங்களையும் ஒருங்கே பெற்ற இறைவன், ஆதியும் அந்தமுமாக விளங்கும் தன்மையும் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை

பெரிய தீப்பிழம்பாக, ஏழ் அண்டங்களையும் கடந்து மண்ணையும் விண்ணையும் தாண்டி நின்ற பெருமானின் உருவத்தின் அடியையும் முடியையும் பிரமனும் திருமாலும் காணாத வகையில் நின்ற பெருமானின் சிறப்பினைப் புகழ்ந்து பாடி, இறைவனை வணங்கி வழிபடும் அடியார்களுக்கு வீடுபேறு எனப்படும் பேரருளினை வழங்கும் பெருமான், அனைவரும் விரும்பிப் பேணும் ஆப்பாடி தலத்தில் விருப்பத்துடன் உறைகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com