62. தங்கலப்பிய தக்கன் - பாடல் 6

நிலையான புகழினை உடைய மங்கலக்குடி

மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன் பெயர் 
உன்னுவாரும் உரைக்க வல்லார்களும்
துன்னுவார் நன்னெறி தொடர்வு எய்தவே
 

விளக்கம்

உன்னுதல் = மனத்தால் நினைத்தால். உரைத்தல் = வாயினால் இறைவன் புகழ் உணர்த்தும் பாடல்களை பாடுதல். துன்னுதல் = நெருங்குதல், இறைவனின் சன்னதியை நெருங்கி, சன்னதியை வலம் வந்து, நமது உடல் தரையில் படுமாறு கீழே விழுந்து வணங்குதல். இவ்வாறு மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினால் செய்யப்படும் வழிபாடு இந்த பதிகத்தில் உணர்த்தப்படுகின்றது. அவ்வாறு வழிபடும் அடியார்கள் நன்னெறியாகிய சிவநெறியில் ஈடுபடுவார்கள் என்பதும் இங்கே கூறப்படுகின்றது.

பொழிப்புரை

நிலையான புகழினை உடைய மங்கலக்குடி தலத்தில் பொருந்தி உறைகின்றவனும், அழகாக பின்னப்பட்ட சடையுடன் விளங்குபவனும் ஆகிய சிவபெருமானின் நாமங்களை தங்களது மனதினில் நினைத்து, அவனது புகழினை உணர்த்தும் பாடல்களை இன்னிசையுடன் இசைத்துப் பாடி, அவனது சன்னதியை நெருங்கி வலம் வந்து வணங்கி வழிபடும் அடியார்கள் நன்னெறியாகிய சிவநெறியில் ஈடுபடுவார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com