78. குருகாம் வயிரமாம் - பாடல் 4

கூற்றுவனை உதைத்தவன்
78. குருகாம் வயிரமாம் - பாடல் 4

பாடல்: 4

    இரவனாம் எல்லி நடமாடியாம் எண்திசைக்கும்
                                           தேவனாம் என்னுளானாம்
    அரவனாம் அல்லல் அறுப்பானுமாம் ஆகாச
                                          மூர்த்தியாம் ஆனேறு ஏறும்
    குரவனாம் கூற்றை உதைத்தான் தானாம் கூறாத
                                          வஞ்சக் குயலர்க்கு என்றும்
    கரவனாம் காட்சிக்கு எளியனுமாம் கண்ணாம்
                                          கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

இரவன்=இரவுப் பொழுதாக இருப்பவன்; எல்லி=இருண்ட நேரம், ஊழிக் காலம் என்று இங்கே பொருள் கொள்ளவேண்டும். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுவது இங்கே நினைவு கூறத்தக்கது.; அரவன்=பாம்பினை அணிந்தவன். குயலர்=தேர்ந்தவர்; 

முதல் மூன்று பாடல்களில், தனது சொல்லாகவும், கருத்தாகவும், தன்னைக் காப்பவனகவும் இருக்கும் இறைவன் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், மற்ற அடியார்களுக்கும் சிவபிரான் எளியவனாக இருப்பன் என்று கூறி, நம்மையும் அவன் வழிப்படுத்தும் பாங்கு உணரத்தக்கது.
 
பொழிப்புரை:

அடியார்களுக்கு மிகவும் எளியனாக காட்சி தரும் சிவபெருமான், இரவுமாகவும் பகலுமாகவும் உள்ளவன்: ஊழிக்காலத்து இருளிலும் தொடர்ந்து நடனம் ஆடுபவன்; எட்டு திசைகளுக்கும் தேவனாக விளங்குபவன்; எனது நெஞ்சத்தின் உள்ளே குடிகொண்டு இருப்பவன்; பாம்பினை அணிகலனாகக் கொண்டவன்; அடியார்களின் துயரங்களைத் துடைப்பவன்; ஆகாயத்தை வடிவமாகக் கொண்டு எங்கும் நிறைந்து இருப்பவன்; காளையை வாகனமாகக் கொண்டவன்; அனைவருக்கும் குருவாக விளங்குபவன்; கூற்றுவனை உதைத்தவன்; வஞ்சகத்தில் தேர்ந்தவர்க்கும், தன்னைப் புகழாதவர்க்கும் வெளிப்படாமல், மறைபொருளாக இருப்பவன்; இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான் அவனது  அடியார்களுக்கு மிகவும் எளியவனாக இருந்து கண் போன்று அவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com